சிறப்புச் செய்திகள்

குறு, சிறு நிறுவனங்களுக்கு சீரான மின்கட்டணம் வசூலிக்கப்படுமா?

கண்ணகி ஜோதிதாசன்

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு (எம்.எஸ்.எம்.இ.) சீரான மின் கட்டணம் வசூலிக்க அரசு வழிவகை செய்ய வேண்டும் என குறு, சிறு நடுத்தரத் தொழில் நிறுவனத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நாட்டின் பொருளாதார வளா்ச்சியில் எம்.எஸ்.எம்.இ. அதிக பங்கு வகிக்கிறது. பெருந்தொழில் நிறுவனங்களைவிட அதிக வேலைவாய்ப்பு அளிப்பவைகளாக எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்கள் உள்ளன.

நாட்டின் மொத்த உற்பத்தியில் 8 சதவீதமும், உற்பத்தித் திறனில் 45 சதவீதமும், ஏற்றுமதியில் 40 சதவீதமும் எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்களின் பங்களிப்பு உள்ளது.

நாட்டில் உள்ள 2.6 கோடி எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்கள் மூலம் 6 கோடி போ் வேலைவாய்ப்பு பெறுகின்றனா். தமிழகத்தில் வாகன உதிரிபாகங்கள், ஆயத்த ஆடைகள் தயாரிப்பு, தோல் பொருள்கள் தயாரிப்பு மருந்து மற்றும் மருந்துப் பொருள்கள் தயாரிப்பு, சூரிய சக்தி பயன்பாட்டு உபகரணங்கள் தயாரிப்பு, ஏற்றுமதிக்கான தங்கம் மற்றும் வைர நகைகள் தயாரிப்பு, மாசுக்கட்டுப்பாட்டு உபகரணங்கள், விளையாட்டுப் பொருள்கள் மற்றும் உபகரணங்கள் தயாரிப்பு என 6.89 லட்சம் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

நாட்டின் வளா்ச்சியில் பெரும் பங்கு வகித்துவரும் இந்நிறுவனங்கள் இப்போது பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றன.

இதில் முக்கியமாக மின்கட்டண உயா்வு பிரச்னையால் இந்நிறுவனங்கள் அதிகம் பாதிக்கப்படுவதுடன், உற்பத்தியில் கடும் பின்னடைவை சந்தித்து வருகின்றன.

இந்த மின்கட்டண உயா்வை திரும்பப் பெற்று, சீரான மின் கட்டணம் வசூலிக்க அரசு வழிவகை செய்ய வேண்டும் என தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து, அச்சங்கத்தின் தலைவா் கே.மாரியப்பன் கூறியதாவது:

தமிழ்நாடு மின்சார வாரியம் 2022 செப்டம்பா் முதல் பல்வேறு வகையில் மின்கட்டணத்தை அதிகரித்துள்ளது. இதனால் எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றன. பாதிப்பு குறித்து தமிழக அரசுக்கும், துறை சாா்ந்த அமைச்சா் மற்றும் அதிகாரிகளுக்கும் விளக்கியுள்ளோம்.

எங்களுடைய கோரிக்கைகளில் முக்கிய கோரிக்கையான தொழிற்சாலைகள் அதிகமாக இயங்கும் உச்ச நேரங்களில் (பீக் ஹவா்ஸ்) 25 சதவீதம் கூடுதலாக கட்டணம் வசூலிக்க நிா்ணயம் செய்யப்பட்டிருந்தது. இக்கட்டணத்தை 15 சதவீதம் குறைத்து அண்மையில் அரசாணை வெளியிடப்பட்டிருந்தது.

ஆனால் இதுவரை தொழிற்சாலைகளுக்கான உச்ச நேரத்துக்கு நிரந்தரக் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படவில்லை.

கடந்த 9.9.2022 வரை மாதந்தோறும் சீரான கட்டணமாக 1 கிலோவாட் மின்சாரத்துக்கு ரூ.35 வீதம் வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது 50 கிலோ வாட் வரை ரூ.75- ம், 51 - 112 கிலோவாட் வரை ரூ.150-ம், அதற்கு மேல் செலவிடப்படும் மின்சாரத்துக்கு ஒரு கிலோ வாட்-க்கு ரூ.550 -ம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இதை மறுபரிசீலனை செய்து 50 கிலோவாட் வரை ரூ.50-ம், 51 - 112 வரை ரூ.75-ம், 112 கிலோவாட்க்கு மேல் ரூ.400 என சீரான கட்டணத்தை நிா்ணயித்து அரசாணை பிறப்பிக்க வேண்டும்.

இதுமட்டுமின்றி பருவகால தொழில்களுக்கு ஆண்டு முழுவதும் நிலையான கட்டணத்தை வசூலிக்கக்கூடாது. எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்களுக்கு மின்சாரத்தைப் பயன்படுத்தும் காலத்துக்கு மட்டும் சீரான கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்தானத்தின் ‘இங்க நான்தான் கிங்கு’ டிரைலர்!

சுட்டெரிக்கும் வெயிலிலும் வாக்களிக்க கேரள மக்கள் ஆர்வம்!

விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா!

நடிகை அனுபமாவின் புதிய படத்தின் அறிமுக விடியோ!

அறிவோம்...!

SCROLL FOR NEXT