சிறப்புச் செய்திகள்

சுகம் தரும் சித்த மருத்துவம்: வெய்யில் கால பித்த நோய்களில் இருந்து காக்குமா ‘மஞ்சள் பழம்’...? 

மரு.சோ.தில்லைவாணன்


பின்பனிக்காலம் முடிவதற்குள் இளவேனில் காலம் தொடங்கி முதுவேனில் அளவிற்கு வெயில் கொளுத்த தொடங்கிவிட்டது. நிலத்தில் பெய்த மழையும், நிலத்தடி நீரும் வெய்யிலால் வற்ற தொடங்கிவிட்டது. குடித்த நீர், குடித்த வேகத்தில் வியர்வையாக வெளியேறி உடல் அசதியை, நீர் வேட்கையை உண்டாக்குகிறது. இப்புவியுலகில் என்ன நிகழ்கின்றதோ, அதே மாற்றம் நம் உடலிலும் நிகழ்கின்றது. இதனை ‘அண்டத்தில் உள்ளதே பிண்டம்’ என்று சித்த மருத்துவ தத்துவங்களுள் ஒன்றாக விவரிக்கின்றது. 

அதாவது  பூமியில் நிகழும் பருவ நிலை மாறுதலுக்கு ஏற்றார் போல, நமது உடலிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழும் என்பது தான். அந்த வகையில் பின்பனிக்காலத்தில் அதிகமான கபம் இளவேனில் காலத்தில் படிப்படியாக குறைந்து, பித்தம் உடலில் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கும். இருமல், சளி போன்ற கபம் சார்ந்த நோய்கள் படிப்படியாக குறைந்து பித்தம் சார்ந்த நோய்கள் உருவெடுக்கத் தொடங்கும்.

இளவேனில் மற்றும் முதுவேனில் காலங்களில் தொடர்ந்து பித்தம் கூடுவதால் நீர்ச்சுருக்கு, உடல் சோர்வு, வாந்தி, வாய்க்குமட்டல், ஒவ்வாமை, கண் எரிச்சல் போன்ற பல்வேறு நோய்க்குறிகளை உண்டாக்கும். மேற்க்கூறிய நோய்க்குறிகளை மட்டுமல்லாது, அதிகமாகும் பித்தம் நாற்பது வகையான நோய்நிலைகளையும் உண்டாக்கும் என்கிறது சித்த மருத்துவம். அத்தகைய பித்தத்தைக் குறைத்து உடலை சமநிலைப்படுத்தினால் வெயில் கால பித்த நோய்களை தடுக்க முடியும் என்றும் கூறுகிறது சித்த மருத்துவம்.

நாம் உண்ணும் உணவில் அறுசுவைகளும் அவசியம் என்பதிலே நமது பாரம்பரிய மருத்துவ முறை தொடங்கிவிடுகின்றது. சித்த மருத்துவம் நோய்க்கு காரணமாகக் கூறும் வாதம், பித்தம், கபம் இவை மூன்றையும் ஒவ்வொரு சுவையும் கூட்டவும், குறைக்கவும், சமப்படுத்துவம் வல்லது. அந்த வகையில் பித்தத்தைக் குறைத்து சமப்படுத்தி வெயில் கால நோய்களில் இருந்து காக்க வல்ல சித்த மருத்துவ மூலிகைகளில் ஒன்று புளிப்பு சுவையுள்ள ‘மஞ்சள் பழம்’ எனும் ‘எலுமிச்சை’.

எலுமிச்சை என்றதுமே பல் கூச்சமும், புளிப்பும் தான் பலருக்கு நினைவுக்கு வரும். ஆனால் அதன் பெயர்க்காரணத்தை அறிய முற்பட்டால் எவ்வளவு சிறப்பானது என்று அறியவரும். எலுமிச்சையை எழும்+இச்சை என்று பிரிக்கலாம். புளிப்பை வாயில் இட்டவுடன் வாய் நீர் சுரந்து பசியை தூண்டுவிக்கும். அதாவது அதிகமான பித்தத்தால் குறைந்த உணவு இச்சையை எழுப்புவதால் இதற்கு எலுமிச்சை என்று பெயர் வந்துள்ளதாக அறியக்கிடக்கின்றது. ‘இராசகனி’ என்பதும் கூடுதல் சிறப்பு.

எலுமிச்சை என்று கூறியதும் நம் நினைவுக்கு வருவது வைட்டமின்-சி தான். ஆனால், அதனைக் கடந்து அதில் உள்ள பல்வேறு தாவர வேதிப்பொருள்கள் பல மருத்துவ குணங்களுக்கு காரணமாக உள்ளன. இதில் உள்ள ஹிஸ்பிரிடின், குர்சிட்டின், அபிஜெனின் ஆகிய பிளவனாய்டு வேதிப்பொருள்கள் பல்வேறு மருத்துவ பண்புகளுக்கு கூடாரமாக உள்ளன. வைட்டமின்-சி மட்டுமின்றி வைட்டமின்கள்-ஏ, பி-1, பி-2, பி-3 ஆகியவைகளும் உள்ளன. மேலும் உயிருக்கு ஊட்டமக்களிக்கும் தாது உப்புக்களான கால்சியம், மக்னேசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம் ஆகியவைகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

எலுமிச்சையில் உள்ள கணக்கில்லாத வேதிப்பொருள்களால் புற்றுநோயை தடுப்பதாகவும், புற்றுநோய்க்கு எதிராக செயல்படுவதாகவும், கிருமிக்கொல்லியாகவும், புழுக்கொல்லியாகவும், வீக்கத்தை குறைப்பதாகவும், கல்லீரல், இதயம், சிறுநீரகம் போன்ற இராச உறுப்புகளைப் பாதுகாப்பதாகவும், ரத்த அழுத்தத்தைக் குறைப்பதாகவும், சர்க்கரை நோயை தடுப்பதாகவும், ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைப்பதாகவும், ரத்தத்தில் கொழுப்பின் அளவைக் குறைப்பதாகவும் உள்ளது.

வெய்யில் காலத்தில் பித்தம் அதிகரித்து உண்டாகும் வாந்தி, தலைசுற்றல், வாய்க்குமட்டல் இவற்றிற்கு எலுமிச்சை சாறுடன் சிறிது தேன் அல்லது சர்க்கரை சேர்த்து எடுத்துக்கொள்ளலாம். அல்லது சீரகத்தை நீர்விட்டு கொதிக்க வைத்து கசாயமாக்கி அதில் எலுமிச்சை சாறும், தேனும் சேர்த்து எடுத்துக்கொண்டாலும் நன்மை பயக்கும். 

வெய்யில் காலங்களில் உண்டாகும் சிறுநீர் சார்ந்த நோய்நிலைகளில் எலுமிச்சை நற்பலன் தரும். அடிக்கடி எலுமிச்சை சாற்றினை சிறிது உப்பிட்டு எடுத்துவர சிறுநீர் எரிச்சல் மற்றும் சிறுநீர் தொற்றுக்கள் உண்டாகாமல் தடுக்கும். சிறுநீர்ப்பாதையில் உண்டாகும் கல்லடைப்புக்கு எலுமிச்சை சாறு நாள்தோறும் எடுத்துக்கொள்வது கல்லை கரைக்க உதவும்.

ரத்த அழுத்த நோய்க்காக பல நாடுகளின் பாரம்பரிய வைத்திய முறைகளில் எலுமிச்சை பயன்படுத்தப்பட்டு வருகிறது. உயர் ரத்த அழுத்த நோய்க்கான சிகிச்சையில் உள்ளவர்கள், துணை மருந்தாக, சீரகத்தை எலுமிச்சை சாற்றில் ஊறவைத்து உலர்த்திப் பொடித்து நாள்தோறும் எடுத்துக்கொள்ள இதயத்திற்கு பலம் சேர்க்கும்.

சித்த மருத்துவத்தில் ரத்த விருத்திக்காக பயன்படுத்தப்படும் ‘அயசம்பீர கற்பம்’ எனும் சித்த மருந்தில், ‘கேசரி லேகியம்’, ‘சம்பீர தைலம்’ போன்ற சித்த மருந்துகளில் எலுமிச்சை சேருவது குறிப்பிடத்தக்கது. இன்னும் பித்த நோய்களாக கருதப்படும் மன நோய்களில் எலுமிச்சை தேய்த்து குளிக்க சித்த மருத்துவம் வலியுறுத்துவது சிறப்பானது.

சித்த மருத்துவத்தின் ஒரு பிரிவாகிய வர்மம் மருத்துவத்திலும் எலுமிச்சையின் பங்கு அளப்பரியது. வர்ம காயங்களுக்கு ஒற்றடமிட எலுமிச்சை பயன்படுத்தப்படுகிறது. எலுமிச்சை விதைகளை குழந்தைப்பேறின்மை நிலையில் பல கிராமங்களில் இன்றளவும் பயன்படுத்தப்படுகிறது.

தவிர்ப்பது நல்லது


வயிற்றுப்புண் உள்ளவர்கள் எலுமிச்சை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இதில் உள்ள சிட்ரிக் அமிலம் வயிற்றில் மேலும் அமில சுரப்பைத் தூண்டி புண்ணை அதிகமாக்கும். அதே போல மூட்டு வாதம், இடுப்பு வலி போன்ற வாத நோயுள்ளவர்கள் எலுமிச்சை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் எலுமிச்சையின் புளிப்பு பித்தத்தைக் குறைத்து, அதன் குளிர்ச்சித் தன்மை வாதத்தைக் கூட்டும் தன்மை உடையது. சித்த மருத்துவத்தில் நோய்களுக்கு பத்திய உணவு கூறுவதன் பொருள் விளக்கம் இப்போது பலருக்கு புரிய வரும். இறைச்சி உணவுகளின் மீது எலுமிச்சையை பிழிந்து உண்பதும் பித்தத்தை அதிகரிக்காமல் தடுக்கும் வழி தான்.

க்ரீன் டீ-யில் எலுமிச்சையை சேர்த்து கொண்டாடும் வெளிநாட்டினர் மரபால், எளிதில் கிடைக்கும் நம்ம ஊர் மரபுக்கனியான எலுமிச்சையை நாம் கொண்டாடுவதை மறந்துவிட்டோம். வைட்டமின்-சி என்றதுமே நினைவில் முதலிடம் பிடிக்கும் ஆரஞ்சு பழத்திற்கு நிகரான இடத்தை, நம்ம ஊர் மஞ்சள் பழத்திற்கு (எலுமிச்சை) நாமே கொடுப்பதில்லை. ஆக, வைட்டமின் சி என்று ஒரு பக்க முத்திரையை மட்டும் எலுமிச்சைக்கு பூசாமல், சித்த மருத்துவம் கூறும் தத்துவப்படி இதனை பயன்படுத்திட தொடங்கினால், வெயில் கால நோய்களுக்கு மட்டுமின்றி அநேக நோய்களுக்கு எலுமிச்சை நல்ல பலன் தரும்.

மருத்துவரின் ஆலோசனைக்கு: இ-மெயில்– drthillai.mdsiddha@gmail.com 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்தானத்தின் ‘இங்க நான்தான் கிங்கு’ டிரைலர்!

சுட்டெரிக்கும் வெயிலிலும் வாக்களிக்க கேரள மக்கள் ஆர்வம்!

விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா!

நடிகை அனுபமாவின் புதிய படத்தின் அறிமுக விடியோ!

அறிவோம்...!

SCROLL FOR NEXT