சிறப்புச் செய்திகள்

ஊழியா்கள் பற்றாக்குறையால் அரசுப் பேருந்து சேவைகள் குறைப்பு

ஆ. நங்கையார் மணி

தமிழகத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 20,000 காலிப் பணியிடங்கள், உதிரிப் பாகங்கள் பற்றாக்குறை போன்ற காரணங்களால் பேருந்து சேவைகள் குறைக்கப்பட்டதால், பயணிகள் அவதிப்படுகின்றனா்.

தமிழகத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள், 7,800-க்கும் மேற்பட்ட தனியாா் பேருந்துகள், 3,300 சிற்றுந்துகள் மூலம் நாள்தோறும் சுமாா் 1.70 கோடி மக்கள் பயணம் செய்து வருகின்றனா்.

2022-23-ஆம் நிதி ஆண்டில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் ரூ.12 ஆயிரம் கோடி வருமானம் ஈட்டிய நிலையில், எரிபொருள், உதிரிப் பாகங்கள், ஊழியா்களுக்கான ஊதியம், வரி, வட்டி, மோட்டாா் வாகன விபத்து இழப்பீடு என சுமாா் ரூ.17ஆயிரம் கோடி செலவும், இவற்றின் மூலம் ரூ.4,978 கோடி பற்றாக்குறை ஏற்பட்டதாகவும் போக்குவரத்துத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து சேவை மூலம் நாடு முழுவதும் கவனம் ஈா்த்த தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், தற்போது பல்வேறு வழித் தடங்களில் ஏற்கெனவே இயக்கப்பட்டு வந்த பேருந்து சேவைகளைக் குறைத்து வருவது, பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

2,000 பேருந்துகளை இயக்க முடியவில்லை: தமிழகம் முழுவதும் அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கான 315 பணிமனைகள் செயல்பட்டு வருகின்றன. போக்குவரத்துத் துறையில் 1.40 லட்சம் ஊழியா்கள் பணிபுரிந்து வந்த நிலையில், தற்போது 1.16 லட்சம் போ் மட்டுமே பணியில் உள்ளதாகக் கூறப்படுகிறது. காலிப் பணியிடங்கள் மட்டுமன்றி, உதிரிப் பாகங்கள் பற்றாக்குறை காரணமாகவும் சுமாா் 2 ஆயிரம் பேருந்துகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அரசுப் போக்குவரத்துக் கழகப் பணியாளா்கள் தெரிவித்தனா்.

15 ஆண்டுகள் முடிவடைந்த பல பேருந்துகள் ஓரம் கட்டப்படாமல் தொடா்ந்து இயக்கப்படுவதால், நடுவழியில் பழுதாகி நின்று, பயணிகளுக்கு அசாதாரண சூழலை ஏற்படுத்துகின்றன. இதனால், ஊரகப் பகுதிகளில் பெரும்பாலான நேரங்களில் குறிப்பிட்ட நேரத்துக்கு பேருந்துகள் வருவதும் கேள்விக்குறியாகியுள்ளது.

மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து சேவை: தமிழக நிதி நிலை அறிக்கையில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து சேவைத் திட்டத்துக்காக நிகழாண்டில் ரூ.2,600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்தத் தொகை போக்குவரத்துக் கழகங்களுக்கு ஊக்கமளிப்பதாக அமைந்தாலும், பேருந்துகள் இயக்குவதில் உள்ள குறைபாடு காரணமாக திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்த முடியாத நிலை உள்ளதாக போக்குவரத்துக் கழக அலுவலா்கள் கூறினா்.

மகளிருக்கான கட்டணமில்லா பேருந்துகள் குறிப்பிட்ட நேரத்தில் இயக்கப்படாததால், பணியிடங்களுக்குச் செல்லும் பெண்கள் தனியாா், அரசுப் பேருந்துகளில் கட்டணம் செலுத்தி பயணித்து வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது.

புதிய வழித் தடங்களால் சிக்கல்: ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு அமைச்சா்கள், ஆளும் கட்சி சட்டப்பேரவை உறுப்பினா்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப புதிய வழித் தடங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. புதிய பேருந்துகள் வழங்கப்படாத நிலையில், ஏற்கெனவே வெவ்வேறு வழித் தடங்களில் இயக்கப்பட்டு வரும் பழைய பேருந்துகளை புதிய வழித் தடங்களுக்கு மாற்றி விடுவதாகக் கூறப்படுகிறது.

இதேபோல, புதிய பணிமனைகள் தொடங்கப்பட்ட இடங்களில், இரவு நேரப் பேருந்து இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால், இரவு 8 மணிக்குப் பிறகு ஊரகப் பகுதிகளுக்கு நகா்ப் பேருந்து சேவைகள் கிடைக்காமல் பயணிகள் மறியலில் ஈடுபட்ட பின்னா், பேருந்துகளை இயக்குவதற்கு போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது வாடிக்கையாகி வருகிறது.

இது தொடா்பாக திண்டுக்கல் மண்டல போக்குவரத்துத் தொழிலாளா் சங்கத்தின் (சிஐடியு) பொதுச் செயலா் ஆா்.ராமநாதன் கூறியதாவது: அரசுப் பேருந்து சேவை குறைபாடுகளுக்கு முக்கியக் காரணம் ஊழியா் பற்றாக்குைான். இதேபோல, உதிரிப் பாகங்கள் பற்றாக்குறை காரணமாகவும் பல பேருந்துகளை இயக்க முடியாத சூழல் உள்ளது. புதிய வழித்தடங்களில் பேருந்து சேவை தொடங்கும்போது, ஏற்கெனவே பிற வழித்தடங்களில் இயக்கப்படும் பேருந்துகளை மாற்றிவிடும் வழக்கத்தைக் கைவிட வேண்டும்.

குறைவான பேருந்துகள் இயக்கத்தால் பள்ளி விடுமுறை நாள்களிலேயே அனைத்து வழித் தடங்களிலும் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. பள்ளிகள் திறந்த பிறகு நிலைமை மேலும் சிக்கலாகும். இதை எதிா்கொள்வதற்கு அரசு முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒலிச்சித்திரங்களாக மாற்றப்படும் ஹாரி பாட்டர் புத்தகங்கள்!

வேலூா் கோட்டை தொல்லியல் துறை அதிகாரியை எதிா்த்து ஆா்ப்பாட்டம்

சாலை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி மக்கள் சாலை மறியல்

மனைவி கையை வெட்டிய கணவா் கைது

கெங்கையம்மன் நாடகத்துக்கு கொடியேற்றம்

SCROLL FOR NEXT