சிறப்புச் செய்திகள்

பொன்னர் – சங்கர் வீரவரலாற்று படுகளம் சாய்தல், பின் எழுப்புதல் நிகழ்வு!

இரா. சாந்தகுமார்

மணப்பாறையில் அண்ணன்மார் தெய்வங்கள் என்றழைக்கப்படும் பொன்னர்-சங்கர் மாமன்னர்களின் மாசி பெருந்திருவிழா நடைபெற்று வரும் நிலையில், வீரவரலாற்று படுகளம் சாய்தல், பின் எழுப்புதல் நிகழ்வு இரவு அருள்மிகு கன்னிமார் மற்றும் குளக்கரை கருப்பசாமி, மகாமுனி, பொன்னர் – சங்கர், தங்காள் திருக்கோயில் வளாகத்தில் மெய்சிலிர்க்கும் படுகளம் நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

மணப்பாறையில் அண்ணன்மார் தெய்வங்கள் என்றழைக்கப்படும் பொன்னர்-சங்கர் மாமன்னர்களின் மாசி பெருந்திருவிழா மற்றும் தங்கை அரிக்காணி என்னும் நல்லதங்காளுக்காக கிளி வேட்டை நடந்த வரலாற்று நிகழ்வில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.

கி.பி.1020-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சோழப்பேரரசுக்கு கப்பம் கட்டும் குறுநில மன்னராக ஆட்சி புரிந்த அண்ணன்மார் தெய்வங்கள் என்றழைக்கப்படும் பொன்னர் - சங்கர் மாமன்னர்களின் வீர வரலாற்று சிறப்புமிக்க மாசிப்பெருந்திருவிழா, திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள அண்ணன்மார்கள் வீரப்போரிட்டு மாண்ட இடமான வீரப்பூர் பெரியகாண்டியம்மன் கோவிலிலும், கோட்டை கட்டி வாழ்ந்த பொன்னிவளநாட்டிலும் கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி முதல் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகின்றது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான, “பொன்னர் - சங்கர் மன்னர்களின் பெற்றோர்கள் மாண்டுவிட, தங்கை அருக்காணி என்னும் நல்லதங்காளின் ஆற்றாமையை போக்க பொன்னர் கிளி பிடிக்க, வீரமலை பகுதிக்கு சென்று கிளி வேட்டை நடத்தி தங்கைக்கு கிளி பிடித்து தந்த வீர வரலாற்று நிகழ்வு” பொன்னிவளநாட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பொன்னர் – சங்கர் அடுத்தடுத்த ஏழு வனங்களில் ஒன்றன்பின் ஒன்றாக கிளியை தேடி கிளி அங்கு இல்லாததால் வனங்களை துவம்சம் செய்துவிட்டு இறுதியில் ஆலமரத்தில் கிளியை கண்டுபிடித்து அதை பக்தர்களிடம் காட்டியபோது பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பின்னர் அந்த கிளியை தங்கையிடம் ஒப்படைக்கிறார் பொன்னர்.

இதனைத் தொடர்ந்து  திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீரவரலாற்று படுகளம் சாய்தல், பின் எழுப்புதல் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை இரவு படுகளம் அருள்மிகு கன்னிமார் மற்றும் குளக்கரை கருப்பசாமி, மகாமுனி, பொன்னர்-சங்கர், தங்காள் திருக்கோயில் வளாகத்தில் நடைபெற்றது. 

கொங்கு மண்டலத்திலிருந்து குவிந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களில் ஆங்காங்கே ஆண்களுக்கு மறுள் வருகிறது பின் அப்படியே சய்ந்து விடுகின்றனர். இவர்கள் அண்ணன்மார் தெய்வங்களுடன் இணைந்து போரிட்டு மடிந்தவர்களாக பார்க்கப்படுகிறது. அவர்கள் அனைவரும் போரிட்டு மடிந்தவர்களாக வரிசைப்படுத்தப்படுகின்றனர். நூற்றுக்கணக்கானோர் வரிசைப்படுத்தப்பட்டனர். 

பின்னர் பெரியக்காண்டியம்மன் ஆலயத்திலிருந்து மின் அலங்கார தேரில் கொண்டு வரப்பட்ட புனித தீர்த்தக்குடம் வரிசைப்படுத்தப்பட்டவர்கள் பகுதியில் வைக்கப்படுகிறது. அனைவரும் அமைதியாக காத்திருக்கின்றனர். (கூடியிருக்கும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களிலிருந்து அரிக்காணி என்னும் தங்காள் தானாக அழுது வந்து புனித தீர்த்த குடத்தை எடுக்க வேண்டும்) கூட்டத்தில் ஆலயத்தில் வலது பகுதியிலிருந்து 12 வயது சிறுமி அழுதுக்கொண்டே தீர்த்தக்குடத்திற்கு வருகிறார். பெரியக்காண்டியம்மனை வணங்கி தீர்த்த குடத்தை எடுத்துக்கொள்கிறார். பின் மாண்டவர்களாக வரிசைப்படுத்தப்பட்டவர்கள் மீது தீர்த்தத்தை தெளிக்க அவர்கள் மீண்டும் உயிர்பித்து எழுகின்றனர் என்ற நிகழ்வு நடைபெற்றது.

மறுள் வந்து விழுந்தவர்கள் மாண்டவர்களாகவே மாறி இருந்ததும், தீர்த்த குடத்தை எடுக்க பக்தர்கள் நடுவே தானாக மறுள் வந்த 12 வயது சிறுமியும், தீர்த்தம் தெளிக்கப்பட்டவுடன் உயிர்பித்து எழுந்த நிகழ்வும் மனித சக்திகளை மீறிய இறையருளை கண்முன்னே கொண்டு வந்துள்ளது.

(வரலாற்றில், போருக்கு சென்ற அண்ணன்மார் தெய்வங்கள் பொன்னர் – சங்கர் நீண்ட நாட்களாக காணவில்லை என படுகளத்தில் அண்ணன்களை தேடி வந்த தங்கை அரிக்காணி என்னும் தங்காள், அண்ணன்கள் இருவரும் போரிட்டு மாண்டுவிட்டதை கண்டு கதறி அழுததாகவும், அரிக்காணியின் அழுக்குரல் தவசி மலையில் தவமிருந்துக்கொண்டிருந்த பெரியகாண்டியம்மனின் தவத்தை கலைத்ததாகவும், பின் பெரியக்காண்டியம்மன் தனது மகாமுனியை அனுப்பி நடந்தவற்றை அறிந்து தங்காளுக்கு மாண்டவர்கள் மீண்டும் எழ புனித தீர்த்தத்தை தந்ததாக வரலாறு.)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT