சிறப்புச் செய்திகள்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் கள நிலவரம்

கே.விஜயபாஸ்கா்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடுவது காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் என்றாலும், திமுக வேட்பாளரே போட்டியிடுவதுபோல், அமைச்சர்கள் படை தேர்தல் பணியில் ஈடுபட்டது.

முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி தவிர துரைமுருகன் உள்ளிட்ட அத்தனை அமைச்சர்களும் ஈரோடு கிழக்கில் முகாமிட்டனர். சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் பகுதியில் அமைச்சர்கள் நாசர், செஞ்சி மஸ்தான் ஆகியோரும், பட்டியல் வகுப்பினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் அந்தியூர் செல்வராஜ், அமைச்சர் கயல்விழியும், நாடார் சமுதாய மக்கள் வசிக்கும் பகுதியில் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் போன்றோரும், கொங்கு வேளாளக் கவுண்டர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் செந்தில்பாலாஜி, சாமிநாதன் என ஜாதி வாரியாக அமைச்சர்கள் வாக்கு சேகரித்தனர்.

இந்தத் தேர்தலில் ஒவ்வொரு பகுதிக்கும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்களுக்குள் எந்தப் பகுதியில் அதிக வாக்கு பெறுவார்கள் என்ற போட்டி உள்ளது. ஒவ்வொரு 100 வாக்காளர்களுக்கும் ஒரு பொறுப்பாளர், அந்தப் பொறுப்பாளரின் கீழ் 10 பேர் நியமிக்கப்பட்டு, ஒவ்வொரு 10 வாக்குகளுக்கும் ஒருவர் என திமுக தேர்தல் பணி செயல்திட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த 10 பேரிடமும் தினமும் பேசி அவர்களது வாக்கை உறுதி செய்யத் தேவையான அனைத்துப் பணிகளையும் அந்த பொறுப்பாளர் ஏற்க வேண்டும். இதனை கண்காணிக்க பலமட்டங்களில் குழுக்கள் அமைக்கப்பட்டன. இத்தொகுதியில் 20 ஆயிரம் வாக்காளர்கள் வெளியிடங்களில் வசிக்கின்றனர். அவர்களைக் கண்டறிந்து அழைத்து வரும் பணிகளை திமுக செய்து வருகிறது.

திமுகவின் வியூகங்களால் இந்தத் தேர்தல் களத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அசுர பலத்தை பெற்றுள்ளார் என்கின்றனர் திமுக கூட்டணிக் கட்சியினர்.

பலத்தை நிரூபிக்கும் முனைப்பில் அதிமுக: அதிமுகவின் ஒற்றைத் தலைமையாய் உருவெடுத்துள்ள எடப்பாடி பழனிசாமி சந்திக்கும் முதல் இடைத்தேர்தல் என்பதால், இந்தத் தேர்தல் வெற்றி தன் தலைமையை முழுமையாக அங்கீகரிக்கும் என்ற எண்ணத்தில் கடுமையாக தேர்தல் பணியாற்றினார்.

 திமுகவினருக்கு இணையாக அதிமுக நிர்வாகிகளும் தொகுதிக்குள் தேர்தல் பணியில் ஈடுபட்டனர்.

தவிர, பெரும்பான்மை சமூகமான செங்குந்த முதலியார் சமூகத்தை சேர்ந்தவருக்கு இந்தத் தேர்தலில் வாய்ப்பளிக்க வேண்டும் என்ற கோரிக்கை அதிமுக தலைமையால் ஏற்கப்படாததும் அச்சமூக மக்கள் சிலரிடம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இருப்பினும் ஜெயலலிதா பாணியில் திமுக மீது எடப்பாடி பழனிசாமி வைக்கும் கடுமையான விமர்சனங்கள் அதிமுக கட்சி தொண்டர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியதால் தேர்தல் களத்தில் சோர்வடையாமல் பணியாற்றினர்.

கவனம் பெற்றுள்ள நாம் தமிழர் கட்சி: காங்கிரஸ், அதிமுக வேட்பாளர்களுக்கு அடுத்ததாக, வாக்காளர்களின் கவனம் பெற்ற வேட்பாளராக மாறி இருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா நவநீதன். இவர் இத்தொகுதியில் பெரும்பான்மையாக உள்ள செங்குந்த முதலியார் சமூகத்தை சேர்ந்தவர்.
 செங்குந்த முதலியார் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் வாய்ப்பு தரவில்லை என்ற அதிருப்தி பரவலாக உள்ளது. இந்த அதிருப்தியை போக்கவே முதல்வர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் ஈரோட்டில் முகாமிட்டு முதலியார் சமுதாய அமைப்புகள், பிரமுகர்களிடம் பேசி ஆதரவு திரட்டினார். 

அதன் பலனாக சில அமைப்புகள் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளன.ஆனால், தங்கள் சமூகத்தைச் சேர்ந்த பெண் வேட்பாளர் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும்போது அவருக்கு ஆதரவு தரவேண்டியது நமது கடமை என்ற குரல் அந்த சமுதாய பிரமுகர்களிடம் இன்னமும் எதிரொலித்துக்கொண்டு இருக்கிறது. 

கடந்த தேர்தலில் இத்தொகுதியில் நாம் தமிழர் கட்சி 11,629 வாக்குகளைப் பெற்றது. இந்த தேர்தலில் அக்கட்சி இன்னும் கூடுதலான வாக்குகளைப் பெற வாய்ப்புள்ளது என தேர்தல் களத்தில் உள்ள பிற கட்சியினர் கூறுகின்றனர்.

மக்களின் மனநிலை

கனி ஜவுளிச் சந்தை வியாபாரி செல்வராஜ்: பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் கனி மார்க்கெட் புதிய கட்டட வளாகம் 292 கடைகளுடன் ரூ.60 கோடி மதிப்பில் கடந்த அதிமுக ஆட்சியில் கட்டப்பட்டது.  அந்தக் கடைகள் தற்போது பொது ஏலம் மூலம்தான் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், ஏலத்தில் பங்கேற்க ரூ.8 லட்சம் வைப்புத்தொகை செலுத்த வேண்டும் எனவும் மாநகராட்சி அறிவித்துள்ளது. ஆனால் பல ஆண்டுகளாக அங்கு கடைகள் வைத்து வியாபாரம் செய்து வந்தவர்களுக்கு கடை ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஜவுளி வியாபாரிகள் தங்களுக்கு கடை கிடைக்குமா என்ற அச்சத்தில் உள்ளனர்.

இந்த வளாகத்தில் 296 கடைகள் கட்டப்பட்டுள்ளன. இந்தக் கடைகளை எங்களுக்கு ஒதுக்க முடியாது என்றால் இங்கு கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கடை நடத்திவரும் 236 பேருக்கும் புதிதாக கட்டப்பட்டுள்ள வளாகத்தின் அருகில் உள்ள இடத்தில் கடைகள் அமைக்க இடம் ஒதுக்கீடு செய்துதர வேண்டும்.

விசைத்தறி உரிமையாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் கந்தவேல்: இலவச வேஷ்டி சேலை உற்பத்தி ஆர்டர் வழங்குவதில் காலதாமதம், இப்பணிக்கு தரமற்ற நூல் வழங்கியதால் உற்பத்தியைத் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.  இதனால் இந்தப் பணியில் காலதாமதம், நெசவாளர்களுக்கு வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது.

மின்கட்டண உயர்வு நெசவுத் தொழிலை கடுமையாகப் பாதித்துள்ளது. இலவச மின்சார பயன்பாட்டு அளவை 1,000 யூனிட்டாக உயர்த்தினாலும், பாதிப்பு குறையாது. பயன்பாட்டுக் கட்டணத்தில் 50 சதவீதம் வரை மானியம் வழங்க வேண்டும்.

ஆறுமுகம், முடிதிருத்துபவர்: எங்கள் வீட்டில் 4 வாக்குகள் உள்ளன. திமுக, அதிமுக இரு கட்சிகளும் பணம் தருவதாக கூறி இருக்கின்றனர். இந்தப் பணத்தில் வாஷிங்மெஷின் வாங்கலாம் என முடிவு செய்துள்ளேன். யார் அதிக பணம் கொடுக்கிறார்களோ அவருக்கு வாக்களிப்போம்.

தங்கமணி, குடும்பத் தலைவி: இந்தத் தேர்தலில்தான் முதல்முறையாக வாக்களிக்கிறேன். திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுக்குமே வாக்களிக்க விருப்பம் இல்லை.

ராம் சேவக், பீடா கடை, மோசிக்கீரனார் வீதி: எனது பூர்விகம் உத்தரபிரதேசம், 25 ஆண்டுகளாக ஈரோட்டில் இருக்கிறேன். என் கடை முன் உள்ள சாலை 3 ஆண்டுகளுக்கும் மேல் சீரமைக்கப்படவில்லை. ஏதோ ஒரு காரணத்தைச்சொல்லி சாலையில் பள்ளம் தோண்டி போட்டுவிடுகின்றனர். ஆட்சிக்கு வந்து ஓராண்டில் சாலைகளைச் சீரமைப்போம் என அமைச்சர் முத்துசாமி தேர்தல் பிரசாரத்தில் உறுதியளித்தார். ஆனால் இதுவரை சாலைகள் சீரமைக்கப்படவில்லை.

சிவா, மாட்டு வண்டி தொழிலாளி, கலைஞர் நகர், கருங்கல்பாளையம்: அன்புமணி ராமதாஸ் யாருக்கு வாக்களிக்க வேண்டும் எனக் கூறுகிறாரோ, அந்தக் கட்சிக்குதான் எங்கள் குடும்பத்தினரின் வாக்கு.

ராமசாமி, ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர், சம்பத்நகர்: ஆட்சி முடிவதற்கு இன்னும் 3 ஆண்டுகள் இருக்கிறது. 2026 தேர்தல் வரை பொறுத்திருந்து பார்க்க முடிவு செய்துள்ளேன்.

சித்ரா, குடும்பத் தலைவி, ஆசிரியர் காலனி: கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை, பேருந்தில் மகளிர் இலவச பயணம் போன்றவை நல்ல திட்டங்கள். குறைகள் இருந்தாலும், இன்னும் 3 ஆண்டுகள் திமுக ஆட்சிதானே இருக்கப்போகிறது.

சந்திரசேகர், பூ வியாபாரி, என்ஜிஜிஓ காலனி: மின் கட்டணம், வீட்டு வரி உயர்வால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஈரோட்டில் உள்ள சாலைகளில் பள்ளம் தோண்டுவதை எப்போது நிறுத்துவார்கள் என மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

பிரித்தா, குடும்பத் தலைவி, பெரியதோட்டம்: வீட்டு வரி, மின் கட்டணம், குப்பை வரி உயர்வால் மாதம் ரூ.1,500 வரை கூடுதல் செலவாகிறது. தனியார் நிறுவனத்தில் வேலைபார்க்கும் என் கணவருக்கு ஊதியம் அதிகரிக்கவில்லை. வாக்குக்கு பணம் கொடுக்க எப்போது வருவார்கள் என எதிர்பார்த்திருக்கிறோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

SCROLL FOR NEXT