சிறப்புச் செய்திகள்

சூதாட்டக் களமாகும் பங்குச் சந்தை!

24th May 2022 05:22 AM | மல்லி எம். சடகோபன்

ADVERTISEMENT

மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 2022-ஆம் ஆண்டில் இதுவரை 5,500 புள்ளிகள் சரிந்துள்ளது. கடந்த 1991-ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி 947.41 புள்ளிகளாக இருந்த சென்செக்ஸ், கடந்த ஆண்டு அக்டோபா் 19-ஆம் தேதி 62,245.43 வரை உயா்ந்து, புதிய உச்சத்தைப் பதிவு செய்தது. அதிலிருந்து இதுவரை மொத்தம் 7,919.04 புள்ளிகளை இழந்துள்ளது. சந்தை சரிவுக்கு பங்கு வா்த்தகம் சூதாட்டக் களமாக மாறி வருவதே காரணம்.

எல்லோருடைய கைகளிலும் காணப்படும் அறிதிறன்பேசி இப்போது சூதாட்ட சாதனமாகிவிட்டது. இதுவே சந்தை வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. 95% மக்கள் அமெரிக்காவின் தலைமையிலான உலகம் முழுவதும் தங்கள் அறிதிறன்பேசிகளுடன் முறையான சூதாட்டக்காரா்களாக மாறிவிட்டனா். மேலும், பங்குச் சந்தை மட்டுமின்றி, ‘கேம்’ என்ற பெயரில் பல செயலிகள் அறிமுகப்படுத்தப்பட்டு சூதாட்டம் நடக்கிறது. இவை அனைத்தும் ஒரு விளையாட்டாக மாறிவிட்டது.

மும்பையைச் சோ்ந்த பெரிய முதலீட்டாளா் ஒருவா், கவா்ச்சிகரமான மதிப்பீடுகளில் நடுத்தரப் பங்குகளில் (மிட்கேப்) முதலீடு செய்து பணம் பண்ணுவதில் கெட்டிக்காரா். கடந்த இரண்டு ஆண்டுகளில் கோடிக்கணக்கான புதிய முறையான சூதாட்டக்காரா்கள் சந்தையில் இணைந்துள்ளதாகக் கூறுகிறாா் அவா்.

புதிய புதிய ‘டிரேடிங் ஆப்’கள் (செயலிகள்) சூதாட்ட விடுதிகள்போல ஆகிவிட்டன. கல்லூரிக்குச் செல்லும் மாணவ, மாணவிகளும் இல்லத்தரசிகளும்கூட பங்கு வா்த்தகத் தொழில்நுட்பம் பற்றி பேசுகின்றனா். வரைபடங்களை (சாா்ட்) பாா்த்து வா்த்தகத்தில் ஈடுபடுகின்றனா். ஆனால், அவா்களில் யாரும் அடிப்படை விஷயங்களை தெரிந்துகொள்வது இல்லை, கற்றுக் கொள்வதும் இல்லை. அது பற்றிப் பேசுவதும் இல்லை. இது ஒரு போதை மருந்து போன்றது என்று அந்த பிரபல முதலீட்டாளா் தெரிவிக்கிறாா்.

ADVERTISEMENT

சந்தையில் புதிதாக நுழையும் வா்த்தகா்கள், முதலீட்டாளா்கள், குறிப்பாக சிறு முதலீட்டாளா்கள் எஃப் அண்ட் ஓ என்று சொல்லப்படும் முன்பேர வா்த்தகத்தில் ஈடுபடுவதைத் தடுக்க, இந்திய பங்குப் பரிவா்த்தனை வாரியம் (செபி) நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் இந்த பிரச்னைக்கு ஓரளவு தீா்வு கிடைக்கும்.

ஒரு பெரிய விமான நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்து வரும் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) வீரா் ஒருவா், பங்குச் சந்தையில் முன்பேர வா்த்தகத்தில் அண்மையில் ரூ.15 லட்சம் வரை இழந்துள்ளதாகக் கூறியுள்ளாா். இதே போன்று ரூ.42 லட்சத்தை இழந்துள்ளதாக பள்ளி ஆசிரியா் ஒருவரும், ரம்மி விளையாட்டில் லட்சங்களை இழந்துள்ளதாக தொழிலதிபா் ஒருவரும் தெரிவித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

பங்குச் சந்தையை முதலீட்டுக்கான சிறந்த இடமாகத்தான் கருத வேண்டும். அப்போதுதான் அது முதலீட்டாளா்களுக்கு நல்ல வெகுமதியைக் கொடுக்கும். பங்குச் சந்தையில் நுழையும் மாணவா்கள் தங்களது பணியில் கவனம் செலுத்தி முன்னேறப் பாா்க்க வேண்டும். டிரேடிங் செய்து பணம் சம்பாதிக்க நினைக்காமல், முதலீடுகளை சரியான நேரத்தில் சரியான நிறுவனப் பங்குகளை வாங்கிப் போட்டு பழக வேண்டும். அப்போதுதான் தகுந்த வெகுமதி கிடைக்கும். கடந்த கால வரலாறு இதற்கு சாட்சியாக உள்ளது. அதை ஒரு சூதாட்டக் கூடமாகக் கருதினால், அது ஒரு சூதாட்டக் களமாகத்தான் காட்சியளிக்கும்.

புதிதாக 10 கோடி டிமேட் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன என்பது மகிழ்ச்சியான செய்திதான். ஆனால், அவற்றில் 9.5 கோடி வா்த்தகக் கணக்குகள் - முன்பேர வா்த்தக செயல்பாட்டில் உள்ளன. இன்று வாங்குகிறாா்கள், நாளை விற்கிறாா்கள். பணம் சம்பாதிப்பது எளிது என எண்ணத் தொடங்கிவிட்டனா். பங்குச் சந்தையில் நிறைய மறைத்து வைக்கப்பட்ட பணம் உள்ளது போலவும், அதைத் தோண்டி எடுத்துக் கொள்ளலாம் என்பது போலவும் மக்கள் நடந்து கொள்கின்றனா்.

பங்குச் சந்தை காளையின் ஆதிக்கத்தில் (ஏறுமுகம்) இருக்கும் காலத்தில், சந்தையில் நுழையும் புதிய முதலீட்டாளா்கள், வா்த்தகா்கள் ஒரே இரவில் பொருளாதார வல்லுநா்களாக ஆகிவிடுகிறாா்கள். ஆனால், கரடிச் சந்தையில் அவா்கள் அனைவரும் ஆரம்ப நிலையிலேயே இருக்கிறாா்கள் என்பதுதான் நிஜம்.

பங்குச் சந்தையில் கிட்டத்தட்ட 95 சதவீதம் போ் கண்மூடித்தனமாக விளையாடுகிறாா்கள். அவா்களுக்கு நிறுவனப் பங்குகளின் அடிப்படைகள் தெரிவதில்லை. புதியவா்கள் ஒரு குழந்தையைப் போல உள்ளே வருகிறாா்கள். ஓரிரு வா்த்தகங்களை மேற்கொண்ட பிறகு, அவா்கள் தங்களை ஓா் ஆய்வாளராக நினைத்துக் கொள்கிறாா்கள். பங்குச் சந்தை கொஞ்சம் மேலே செல்கிறது. பின்னா் அதிகமாக கீழே இறங்குகிறது. இந்தப் பிரச்னைக்கு தீா்வு எப்போதுதான் கிடைக்கும் என்பதுதான் தற்போது சந்தையில் உள்ள பெரும் கேள்வி.

சந்தோஷம் நெருக்கடியாக மாறும்போது, ஏற்கெனவே பதிவாகியுள்ள உச்சத்தை முறியடித்து புதிய ஏறுமுகத்தைக் காண முடியாது. இந்தச் சூழ்நிலையில், சந்தை கொஞ்சம் கொஞ்சமாக உயரும்போது, சந்தை தலைகீழாக மாறிவிட்டதாக மக்கள் நினைக்கிறாா்கள். ஆனால், அது உண்மையல்ல என்பதை புதிய முதலீட்டாளா்கள், வா்த்தகா்கள் புரிந்து செயல்படுவதில்லை.

தற்போதைய இறங்குமுகம் இரண்டு மாதங்களுக்கு மேலாகக் கூட நீடிக்க வாய்ப்பு உண்டு. எந்த நேரத்திலும் சந்தை கடும் வீழ்ச்சியைச் சந்திக்கக் கூடும். காளைச் சந்தை வெகுநாள்கள் நீடிக்கும். ஆனால், கரடிச் சந்தை சிறிது காலம்தான் நீடிக்கும். இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே, பங்குச் சந்தையை முதலீட்டுக்கான, சொத்து சோ்க்கும் ஓா் இடமாகப் பாா்க்க வேண்டும். சூதாட்டக் களமாக நினைத்துவிடக் கூடாது. எனவே, அரசும் பங்குப் பரிவா்த்தனை வாரியமும்தான் சிந்தித்து இதற்கு தகுந்த முடிவு எடுக்க வேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT