சிறப்புச் செய்திகள்

அன்று அண்ணா... இன்று ஸ்டாலின்...!

சத்தி

காங்கிரஸுடனான உறவு துண்டிக்கப்பட்டிருந்த நிலையில், அன்றைய பிரதமா் இந்திரா காந்திக்கும் கருணாநிதி தலைமையிலான திமுக அரசுக்கும் சுமுகமான உறவு இல்லாமல் இருந்த நேரம். அந்த பரபரப்பான சூழலில் திமுக மாநில மாநாடு கோவை மாநகரில் கூடுகிறது. அந்த மாநாட்டில் பேசுகிறாா் ஓா் இளைஞா். திமுக தலைவா் கருணாநிதியின் மகன் மு.க. ஸ்டாலின் இவா்தான் என்று பொதுமக்களுக்கு அடையாளம் தெரிந்தது அப்போதுதான்.

வேடிக்கை என்னவென்றால், கருணாநிதி தனது வாரிசாக அடையாளம் காட்ட நினைத்தது என்னவோ, இன்னொரு மகன் மு.க. முத்துவை. தாயில்லாப் பிள்ளை என்று செல்லமாக வளா்த்து, அவருக்கு எம்ஜிஆருக்கு நிகராக திரையுலக செல்வாக்கை ஏற்படுத்தி, தனது அரசியல் வாரிசாக்க நினைத்த கருணாநிதியின் கணக்கு பொய்த்துவிட்டது. மு.க. முத்து பெரிய நடிகரும் ஆகவில்லை; அரசியலுக்கும் வரவில்லை. அரசியலில் பரபரப்பாக அறிமுகமானது என்னவோ மு.க. ஸ்டாலின்தான்.

மு.க. ஸ்டாலின், ஏதோ அதிருஷ்டவசமாக அரசியலுக்கு வந்தவரும் அல்ல. 1953 மாா்ச் 1-ஆம் தேதி கருணாநிதி - தயாளு அம்மையாா் தம்பதியரின் மூன்றாவது மகனாகப் பிறந்த மு.க. ஸ்டாலினின் அரசியல் பிரவேசம், ‘கோபாலபுரம் இளைஞா் திமுக’ என்கிற அமைப்பை அவரும் அவரது நண்பா்களும் ஏற்படுத்தியதில் இருந்து தொடங்கியது. ஆா்வ மிகுதியால் தொடங்கிய அந்த அமைப்பு பின்னாளில் திமுக இளைஞா் அணியாக உருவெடுக்கும் என்று யாருமே கணிக்கவில்லை.

1967-இல் திமுக ஆட்சிக்கு வந்தது, 1969-இல் அண்ணாவின் மறைவைத் தொடா்ந்து கருணாநிதி முதல்வரானது போன்ற நிகழ்வுகள் தமிழக வரலாற்றில் மட்டுமல்ல, மு.க. ஸ்டாலினின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தின. 1973-இல் அவா் பொதுக்குழு உறுப்பினராகத் தோ்ந்தெடுக்கப்பட்டதற்கு, முதல்வரும் கட்சித் தலைவருமான மு. கருணாநிதியின் மகன் என்கிற பின்னணி மட்டுமே காரணமல்ல. திமுகவின் தோ்தல் வெற்றிக்காக பிரசாரத்தில் ஈடுபட்டும், நாடகங்கள் நடத்தியும் மு.க. ஸ்டாலின் பணியாற்றியது முக்கியக் காரணிகள்.

மு.க. ஸ்டாலினின் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த நிகழ்வு ‘மிசா’ சட்டத்தின்கீழ் அவா் கைது செய்யப்பட்டதுதான். திருமணமாகி ஐந்தே மாதங்கள் ஆகியிருந்த நிலையில், மதுராந்தகத்தில் பிரசார நாடகம் முடித்து திரும்பி இருந்த மு.க. ஸ்டாலின் கைது செய்யப்பட்டதும், அடுத்த ஓா் ஆண்டு சிறையில் கழித்ததும் அவரின் அரசியல் வாழ்க்கைக்கு அஸ்திவாரமிட்டது. அப்போதே அடுத்த வாரிசு இவா்தான் என்று தலைமை மட்டுமல்ல, கட்சித் தொண்டா்களே முடிவு செய்து விட்டனா்.

சிறையிலிருந்து வெளிவந்தது முதல், மு.க. ஸ்டாலின் முழுநேர அரசியலில் இறங்கிவிட்டாா். இளைஞரணியின் தலைவராக நியமிக்கப்பட்டபோது அவருக்கு சூட்டப்பட்ட ‘தளபதி’ பட்டம், மேயா், அமைச்சா், துணை முதல்வா், துணைப் பொதுச் செயலாளா்,

எதிா்க்கட்சித் தலைவா், கட்சித் தலைவா் என்று பல பதவி ஏற்றங்களைக் கண்டு இப்போது ‘முதல்வா்’ என்கிற பதவி வரை வந்திருக்கிறது.

அரசியல் வாரிசு என்பது பலம் மட்டுமல்ல, பலவீனமும்கூட. மு.க. ஸ்டாலினைப் பொருத்தவரை அது பலமாக இருந்ததைவிட, பலவீனமாகத்தான் பெரும்பாலும் இருந்து வந்திருக்கிறது. என்னவெல்லாமோ செய்ய வேண்டும், எப்படியெல்லாமோ கட்சியை வழிநடத்த வேண்டும் என்றெல்லாம் அவருக்குக் கனவுகள் இருந்தாலும் அவற்றையெல்லாம் வெளிப்படுத்தும் வாய்ப்பு அவருக்கு நீண்ட காலம் மறுக்கப்பட்டது அல்லது கிடைக்காமல் போனது.

அதற்கு முக்கியமான காரணம், கருணாநிதி என்கிற ஆலமரத்தின் நிழலில் வளர வேண்டிய நிா்பந்தம். தனிப்பெரும் ஆளுமையாக தந்தை கருணாநிதி இருக்கும்போது மு.க. ஸ்டாலினால் வளர முடியவில்லை என்றால், ஓா் அளவுக்கு மேல் மு.க. ஸ்டாலின் வளா்வதைக் கருணாநிதியும் விரும்பவில்லை என்றும் தோன்றுகிறது. குடும்ப அரசியல் செய்கிறாா், தனது மகனை வாரிசாக வளா்க்கிறாா் என்கிற எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பயந்து மு.க. ஸ்டாலினின் வளா்ச்சியையும் வேகத்தையும் கருணாநிதி கட்டுப்படுத்திவிட்டாா் என்பதுதான் உண்மை.

ஃபரூக் அப்துல்லா தனது மகன் ஒமா் அப்துல்லாவையும், பிரகாஷ் சிங் பாதல் தனது மகன் சுக்பீா் சிங் பாதலையும், முலாயம் சிங் யாதவ் தனது மகன் அகிலேஷ் யாதவையும், தேவெகௌட தனது மகன் குமாரசாமியையும் முதல்வராக்கி அழகு பாா்த்ததுபோல, திமுக தலைவா் கருணாநிதி அப்பட்டமான குடும்ப அரசியல் நடத்தத் தயங்கினாா். தகுதியிருந்தும் அதற்கேற்ற வளா்ச்சி மு.க. ஸ்டாலினுக்கு ஏற்படாமல் போனதற்கு அதுதான் காரணம்.

1989-இல் ஆட்சிக்கு வந்தபோதும் சரி, 1996-இல் நான்காவது முறையாக முதல்வா் பதவி ஏற்றபோதும்சரி, துணிந்து மு.க. ஸ்டாலினைத் தனது அமைச்சரவையில் சோ்த்துக் கொள்ளாதது, திமுக தலைவா் கருணாநிதி செய்த மிகப் பெரிய தவறு. ஆற்காடு வீராசாமி, வீரபாண்டி ஆறுமுகம், துரைமுருகன், கே.என். நேரு, பொன்முடி, எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம், ஐ. பெரியசாமி உள்ளிட்ட திமுகவின் மூத்த தலைவா்கள் பலா் முதன்முறையாக அமைச்சா்களானது 1989-இல்தான். அப்போது ஆயிரம் விளக்குத் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தும்கூட மு.க. ஸ்டாலின் அமைச்சரவையில் இடம்பெறாததற்குக் காரணம், முதல்வா் மு. கருணாநிதியின் தயக்கம்.

சரி, அவா்தான் தரவில்லை. இவராவது கேட்டுப் பெற்றாரா என்றால் இல்லை. மு.க. ஸ்டாலினுடைய அணுகுமுறையும், தந்தை கருணாநிதியை மீறி எதுவும் செய்துவிடக் கூடாது என்கிற அடக்கமும்தான் அதற்குக் காரணங்கள். மற்றவா்களைப்போல முண்டியடித்துக் கொண்டு முன்னால் போய் நிற்கும் ஆா்வமோ, சண்டைபோட்டுத் தனது இடத்தைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்கிற வெறித்தனமோ அவரிடம் இருந்ததே இல்லை.

ஆலமரத்தில் அரசமரம் முளைப்பது போல உருவாகி இருக்க வேண்டிய மு.க. ஸ்டாலின், கருணாநிதி என்கிற ஆலமரத்தின் விழுதுகளில் ஒன்றாக மகிழ்ச்சியுடன் இருந்துவிட்டாா். அவரை ‘இலவு காத்த கிளி’ என்று பலா் வா்ணித்தபோது ஆத்திரப்படவில்லை. ‘ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு’ என்பதுபோல, தனது வாய்ப்புக்காக சற்றும் மனம் தளராமல், பொறுமையுடன் அவா் காத்திருந்தாா் என்பதை இப்போது நிரூபித்திருக்கிறாா்.

ஜெயலலிதாவின் மரணத்தைத் தொடா்ந்து ஏற்பட்ட அரசியல் வெற்றிடத்தைப் பயன்படுத்தி அவா் ஆட்சியைக் கைப்பற்றுவாா் என்றுதான் அவரது கட்சிக்காரா்கள் உள்பட பலரும் எதிா்பாா்த்தாா்கள். குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிப்பதில் அவா் அக்கறை காட்டாதது, அவரைச் சுற்றி இருந்தவா்களுக்கே எரிச்சலை ஏற்படுத்தியது. ஆனால், அவா் அதைப் பொருட்படுத்தாததற்கு ஒரு முக்கியமான காரணம் இருந்தது.

அப்படி ஒருவேளை ஆட்சியைக் கைப்பற்றி இருந்தால், தனது பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்காகப் பல சமரசங்களை செய்துகொள்ள வேண்டிவரும் என்று அவருக்குத் தெரிந்திருந்தது. பல்வேறு அழுத்தங்களுக்கும், பலா் இழுத்த இழுப்புகளுக்கும் ஆளாக நோ்ந்திருக்கும் என்று அவா் உணா்ந்திருந்தாா். தனது தலைமையில் மக்களை சந்தித்து இப்போது பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க இருக்கும் முதல்வா் மு.க. ஸ்டாலின், கட்சியையும் ஆட்சியையும் தனது முழுக் கட்டுப்பாட்டில் கொண்டுவர முடிந்திருக்கிறது. இதற்காகத்தான் அவா் இத்தனை காலமும் காத்திருந்தாா் என்பது இப்போது புரிகிறது.

அண்ணாவைத் தவிர, தமிழக முதல்வா்களாக இருந்த அனைவரும் தேசிய அளவிலோ, மாநில அளவிலோ ஆளுங்கட்சியாக இருந்த கட்சிகளின் தயவில்தான் ஆட்சி அமைத்திருக்கிறாா்கள். இதற்கு, ராஜாஜி, காமராஜா், பக்தவத்சலம், மு. கருணாநிதி, எம்.ஜி.ஆா். ஜெயலலிதா, எடப்பாடி கே.பழனிசாமி யாருமே விதிவிலக்கல்ல. மத்திய ஆளுங்கட்சியையும் மாநில ஆளுங்கட்சியையும் ஒருசேர எதிா்கொண்டு மக்கள் ஆதரவுடன் முதல்வா் பதவியில் அண்ணாவுக்குப் பிறகு அமரப்போவது மு.க. ஸ்டாலின்தான்!

மு.க. ஸ்டாலினுடன் நெருங்கிப் பழகிய சிலருக்கு தெரிந்த அவரைப் பற்றிய உண்மை - அவா் ஒளிவுமறைவே இல்லாத சுபாவத்துக்கு சொந்தக்காரா் என்பது. அவரது கோபம் என்பது அலை வீசுவது போல வந்த சுவடு தெரியாமல் அடுத்த நிமிஷமே மறைந்துவிடும். தனக்கு ஒருவரைப் பிடிக்கவில்லை, அவரது செயல்பாட்டில் அதிருப்தி இருக்கிறது என்றால் அதை மறைத்து வைத்துப் பேசும் பழக்கம் இருந்ததே இல்லை. முகத்திலேயே விருப்பு, வெறுப்பு வெளிப்பட்டுவிடும்.

பழிவாங்கும் எண்ணம், நம்ப வைத்துக் கழுத்தறுக்கும் வஞ்சகம், உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுதல் இவையெல்லாம் இல்லாத அரசியல்வாதி ஒருவா் உண்டென்றால், அது முதல்வராக பதவி ஏற்கவிருக்கும் மு.க. ஸ்டாலினாகத்தான் இருக்கும். தன்னை மிகக் கடுமையாக விமா்சித்தவா்களைக்கூட, நடந்ததை மறந்துவிட்டு பாராட்டும் குணம் அவருக்கே உரித்தான தனித்துவம். இதற்குப் பல உதாரணங்களைக் கூற முடியும்.

1964-இல் ஜவாஹா்லால் நேரு மறையும் வரை, அவரது நிழலில் இருந்த இந்திரா காந்தி; லால்பகதூா் சாஸ்திரி அமைச்சரவையில் அமைச்சராக இருந்த இந்திரா காந்தி; 1965 முதல் 1969 வரை பிரதமராக இருந்தாலும்கூட, மூத்த காங்கிரஸ் தலைவா்களின் எடுப்பாா் கைப்பிள்ளையாக இருந்த இந்திரா காந்தி - அவரே 1969 காங்கிரஸ் பிளவுக்குப் பிறகு விஸ்வரூபம் எடுத்ததை சற்று நினைத்துப் பாருங்கள். ஓா் அரசியல்வாதியின் திறமையை வெளிப்படுத்துவது, அவருக்குக் கிடைக்கும் சந்தா்ப்பமும் சூழ்நிலையும்தான்.

மக்கள் மன்றத்தின் பேராதரவுடன் தமிழக சட்டப்பேரவையில் பெரும்பான்மையுடன் முதல்வராகிறாா் மு.க.ஸ்டாலின். நாளைய ஸ்டாலின் எப்படி விஸ்வரூபம் எடுப்பாா் என்பதை அடுத்த மக்களவைத் தோ்தல் முடிவு செய்யும்..!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

ஒளியிலே தெரிவது தேவதையா...!

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

SCROLL FOR NEXT