சிறப்புச் செய்திகள்

4 பேர் பலி: அரசுப் பேருந்து ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள விபத்து

4th Sep 2020 04:24 PM | விஜயபாஸ்கர்

ADVERTISEMENT

ஈரோடு: இரண்டு மாதங்களுக்கு பிறகு கடந்த 1 ஆம் தேதி முதல் அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், 3 ஆவது நாளே ஈரோட்டில் இருசக்கர வாகனங்கள் மீது அரசுப் பேருந்து மோதி 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் வரும் 7 ஆம் தேதி முதல் பேருந்துகள் முழுமையாக இயக்கப்படவுள்ள நிலையில், இந்த விபத்தை போக்குவரத்துகழக அதிகாரிகளும், ஓட்டுநர்களும் படிப்பினையாக எடுத்து மிகுந்த கவனத்துடன் பேருந்துகளை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த ஜூன் மாதம் 30 ஆம் தேதி நிறுத்தப்பட்ட பேருந்து போக்குவரத்து இரண்டு மாதங்களுக்கு பின்பு மீண்டும் கடந்த 1ஆம் தேதி முதல் இயக்கப்படுகிறது. ஜூன் மாதத்திலும் கூட 50 சதவீத அளவுக்கு மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட்டன.

பேருந்து இயக்கம் குறித்த அறிவிப்பு எந்த நேரத்திலும் வரலாம் என்பதால், கடந்த இரண்டு மாதங்களாக ஒவ்வொரு மாதத்திலும் கடைசி வாரத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள பேருந்துகள் ஓடும் நிலையில் உள்ளனவா என போக்குவரத்துக்கழக பணிமனையில் ஊழியர்கள் ஆய்வு செய்து பேருந்தை இயக்கிப்பார்த்து தயார் நிலையில் வைத்துள்ளனர்.

ADVERTISEMENT

இதேபோன்று கடந்த ஆகஸ்ட் மாதத்தின் கடைசி வாரத்தில் பேருந்துகளின் ஓடும் நிலையை பரிசோதித்து தயார்நிலையில் வைத்திருந்தனர். ஈரோடு மண்டலத்தை பொறுத்தவரை 800 பேருந்துகள் உள்ள நிலையில் இப்போது 120க்கும் குறைவான பேருந்துகளே இயக்கப்படுகின்றன. இதில் 80 பேருந்துகள் நகரப் பேருந்துகள், 40 பேருந்துகள் புற நகர் பேருந்துகள். புறநகர் பேருந்துகள் அனைத்தும் புதிய பேருந்துகள் தான். ஆனால் நகர பேருந்துகளில் 90 சதவீதம் பழைய பேருந்துகள் தான். இந்த பேருந்துகள் சாலையில் செல்வதை பார்த்தாலே மக்களுக்கு அச்ச உணர்வு தான் ஏற்படுகிறது.

இத்தகைய நிலையில் இருந்த ஒரு அரசுப் பேருந்து தான், வியாழக்கிழமை காலை ஈரோடு-மொடக்குறிச்சி சாலையில் லக்காபுரம் என்ற இடத்தில் எதிரில் வந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது மோதி, வீட்டின் சுற்றுச்சுவரை இடித்து நின்றது. இதனால் இருசக்கர வாகனங்களில் பயணித்த மொடக்குறிச்சி அருகே ஆளுத்துப்பாளையம், பரமசிவபுரத்தை சேர்ந்த மோகம்புரி (வயது 60), அவரது மனைவி மரகதம் (58), மாமியார் பாவையம்மாள் (80), மரகதம் சகோதரர் பாலசுப்பிரமணி (55) ஆகிய 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

சாலையின் இடதுபுறமாக பேருந்து ஈரோடு நோக்கி வந்த நிலையில் எதிரில் மொடக்குறிச்சி வலதுபுறமாக சென்ற இருசக்கர வாகனங்கள் மீது மோதியது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓட்டுநர் புதியவராக இருந்தால் கூட மனித தவறு நேர்ந்துவிட்டதாக கருத முடியும். ஆனால் இந்த பேருந்தை இயக்கிய ஓட்டுனர் 20 ஆண்டுகளுக்கும் மேல் பணி அனுபவம் கொண்டவர் என்கின்றனர் போக்குவரத்துக்கழக அலுவலர்கள்.

பிரேக் பிடிக்காத நிலையில், சாலையின் வலதுபுறம் இருந்த வலுவான சுற்றுச்சுவரில் இடித்து பேருந்தை நிறுத்திவிடலாம் என்ற எண்ணத்தில் தான் பேருந்தை வலதுபுறமாக ஓட்டுநர் திருப்பியதாகவும் அப்போது எதிர்பாராத விதமாக எதிரில் வந்த இருசக்கர வாகனங்கள் மீது பேருந்து மோதி உயிரிழப்புகள் நேரிட்டது என பேருந்தில் பயணம் செய்தவர்களும், சம்பவத்தை நேரில் பார்த்தவர்களும், சம்பந்தப்பட்ட பேருந்து ஓட்டுநரும் கூறுகின்றனர்.

ஆனால் பேருந்தில் பிரேக் நன்றாகத்தான் செயல்படுகிறது. இதனை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நேரில் வந்து பார்த்துவிட்டு உறுதிப்படுத்தியுள்ளனர் எனவும், ஓட்டுநரின் கவனக்குறைவே விபத்துக்கு முக்கியமான காரணம் என்கின்றனர் போக்குவரத்துக்கழக அலுவலர்கள். ஆனால் இந்த விபத்தில் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தங்களை காப்பாற்றிக்கொள்ளவே முயற்சிக்கின்றனர் என்கின்றனர் தொழிற்சங்க நிர்வாகிகள்.

ஒரே மாதத்தில் 3 ஊழியர்கள் தற்கொலை:

ஈரோடு மாவட்டத்தில் அரசுப் போக்குவரத்துகழகங்களில் பணியாற்றிய ஊழியர்கள் 3 பேர் கடந்த மாதத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். மாதம்தோறும் ஊதியம் வந்து விடுகிறது என்ற போதிலும், கடந்த 5 மாதங்களாக பணிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருப்பதும், மதுப் பழக்கத்தால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகளும் போக்குவரத்துக்கழக ஊழியர்களிடம் மன அழுத்ததை அதிகரித்துள்ளது.

இதனால் தான் தற்கொலை நிகழ்வுகளும் நடக்கிறது என்கின்றனர் தொழிற்சங்க நிர்வாகிகள். இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது, கரோனா காலத்தில் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் போக்குவரத்துக்கழக ஊழியர்களின் திருமணமான மகனுக்கு வேலையிழப்பு, தவிர சிலருக்கு வருவாய் இழப்பு போன்றவற்றால் பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் மன அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளனர்.

இதனால் 40 வயதுக்கு மேற்பட்ட அனைத்து போக்குவரத்துக்கழக ஓட்டுனர், நடத்துனர்களுக்கும் மருத்துவப் பரிசோதனை மற்றும் மன நல ஆலோசனைகளை வழங்க வேண்டும். ஓட்டுனர்கள், நடத்துனர்களின் சூழலை உணர்ந்து போக்குவரத்துக்கழக அலுவலர்கள் கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும். இந்தகைய விபத்து சூழலில் அலுவலர்கள் தாங்கள் தப்பித்துக் கொள்வதற்காக ஓட்டுனர் மீது பழிபோடாமல், தவறு யாரிடத்தில் உள்ளது என்ற உண்மையை ஒத்துக்கொண்டு, அந்த தவறு இனி நேராதவாறு நடந்துகொள்ள வேண்டும்.

வரும் 7 ஆம் தேதி முதல் அனைத்துப் பேருந்துகளும் இயக்கப்படவுள்ள நிலையில், இந்த விபத்தை போக்குவரத்துக்கழக அதிகாரிகளும், ஓட்டுனர்களும் படிப்பினையாக எடுத்துக்கொண்டு மிகவும் கவனமாகவும், எச்சரிக்கையுடனும் பேருந்துகளை இயக்க வேண்டும் என்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT