தற்போதைய செய்திகள்

சிவசங்கர் பாபாவின் பெண் பக்தர் கைது

18th Jun 2021 06:26 PM

ADVERTISEMENT

பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவின் பெண் பக்தர் சுஷ்மிதாவை சிபிசிஐடி காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.

தனது பள்ளியில் படிக்கும் மாணவிகளை பாலியல் தொந்தரவு செய்ததாக எழுந்த புகாரில் சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த சிபிசிஐடி காவல்துறையினர் தில்லி அருகே புதன்கிழமை கைது செய்தனர்.

இந்த வழக்கை தொடர்ந்து விசாரணை செய்த காவல்துறையினர், சிவசங்கர் பாபாவின் பள்ளி அறையில் சோதனை செய்தபின் அறைக்கு இன்று சீல் வைத்தனர். 

இந்நிலையில், சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையாக இருந்த பெண் பக்தர் சுஷ்மிதாவிடம் விசாரணை நடத்தி வந்த நிலையில் சிபிசிஐடி காவலர்கள் இன்று மாலை அவரையும் கைது செய்துள்ளனர்.

ADVERTISEMENT

சென்னை சுஷில்ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது பள்ளி மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அதனடிப்படையில் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் நேரடியாக விசாரணை நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் அடிப்படையில் சிவசங்கர் பாபா உள்ளிட்ட சிலர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனிடையே டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிவசங்கர் பாபாவை விசாரிக்க சென்னை சிபிசிஐடி தனிப்படையினர் விரைந்த நிலையில் அங்கிருந்து தப்பிச் சென்றார்.

இந்நிலையில், மருத்துவமனையில் இருந்து தப்பி தில்லி வந்து காசியாபாத் பகுதியில் பதுங்கியிருந்த சிவசங்கர் பாபாவை கைது செய்த காவல்துறையினர் புதன்கிழமை இரவு சென்னை அழைத்து வந்தனர்.

சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்ட சிபிசிஐடி காவல்துறையினர், மருத்துவ பரிசோதனைக்கு பிறகு நேற்று செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, 15 நாள் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டார்.

சிறையில் அடைக்கப்பட்ட சிவசங்கர் பாபாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் இன்று பிற்பகல் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Tags : Siva Shankar Baba
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT