தற்போதைய செய்திகள்

கரோனா: ஏன் இத்தனை குழப்பம், பற்றாக்குறை, தடுமாற்றம், பேரிழப்பு?

22nd Apr 2021 06:34 PM | கி.ராம்குமார்

ADVERTISEMENT

நாடு முழுவதும் மீண்டும் கரோனா தொற்று பரவல் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது. மூச்சைப் பிடித்துக் கொண்டு மருத்துவமனைகளுக்கு ஓடும் மக்களுக்கு வழங்க தடுப்பூசிகளோ, சிகிச்சையளிக்க ஆக்சிஜனோ, கொடுத்துதவ மருந்துகளோ, இன்னும் சொல்லப்போனால் படுக்கைகளேகூட இல்லாத நிலையில் இந்திய மருத்துவத் துறை கைவிரித்து நிற்கிறது. 

கடந்த முதலாம் அலை ஏற்பட்டபோது நாம் கற்றுக் கொண்டது என்ன? என்கிற கேள்வி மிக முக்கியமாக நம் முன் எழுந்து நிற்கிறது. அரசு இரண்டாம் அலையை எதிர்பார்க்கவில்லையா? எதிர்பார்த்திருந்தால் என்ன வகையான முன் தயாரிப்புகளையெல்லாம் செய்திருந்தது அரசு? 

கரோனா இந்தியாவில் பரவத் தொடங்கியபோது இத்தகைய நெருக்கடியை அரசு கையாள சிரமப்பட்டதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

ADVERTISEMENT

ஆனால் இன்றைக்கு மருத்துவ வசதிகளுக்காகக் கடந்த ஆண்டு சந்தித்த பிரச்னைகளைப் போன்று பன்மடங்கு பிரச்னைகளைத் துளியும்  மாற்றமில்லாமல் நாடு சந்தித்துவருகிறது. இப்போதும் கடந்த ஆண்டே சொல்லி வந்த காரணங்கள்தான் கூறப்படுகின்றன என்றால் நிச்சயம் நாம் கோட்டைவிட்ட இடம்தான் எது? மத்திய, மாநில அரசுகள் ஏன், எங்கே  மெத்தனமாக இருந்தன?

கரோனா முதல் அலை மந்தமான பிறகு நாட்டின் 5 மாநிலங்கள் சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வந்தன. அதற்கு முன்பாகவே கரோனாவுக்கு இடையே பிகாரில் தேர்தலை நடத்திய அனுபவத்தைப் பெற்றிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துத் தங்களால் தேர்தலை நடத்த முடியும் என ஆருடம் கூறியது. ஆனால், அப்போது உலக நாடுகள் பலவும் இரண்டாம் அலை பாதிப்பைச் சந்தித்துக் கொண்டிருந்தன.

இருந்தும் அரசு வெறும் கடைக்கண் பார்வையை மட்டும் கரோனா மீது வைத்துவிட்டுத் தேர்தலுக்கான பணிகளை முடுக்கி விட்டது. அசாம்,  தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் தேர்தல் நடந்து வந்தாலும் மேற்கு வங்கத்தில் இன்னமும் தேர்தல் முடிந்தபாடில்லை. 

கரோனா வந்து போன தடம்கூட நினைவில் இல்லாதபடி அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது பிரசாரத்தில் கரோனா விதிமுறைகளைக் கண்டுகொள்ளாமல் செயல்பட்டனர். பொதுக்கூட்டங்கள், பேரணிகள், மாநாடுகள், பிரசார பயணங்கள் என ஒவ்வொரு கூட்டத்திலும் தொண்டர்கள் நிரம்பிவழிய அனுமதிக்கப்பட்டனர். இவற்றுக்கு மத்தியில்  உத்தரப் பிரதேசத்தில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்ட கும்பமேளா திருவிழா வேறு.

நாடு தடுப்பூசித் திருவிழா வரை பல திருவிழாக்களை சமீப காலத்தில் பார்த்து விட்டது. ஆனால் வார்த்தைகளில் இருக்கும் கொண்டாட்டம் நடைமுறையில்  கொண்டாட்டமாய் இருந்திருக்கவில்லை.

இவைகள் ஒருபுறம் நடந்து வர தேர்தல் அல்லாத மாநிலங்களில் ஏன் கரோனா அதிகரித்தது? கரோனா பரவலைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

யதார்த்ததில் அப்படி எதுவும் நடைபெறவில்லை என்பதே பதிலாக உள்ளது.  மருத்துவ உலகம் கரோனா இரண்டாவது அலையை எதிர்பார்த்திருந்த ஒன்றாகவே தெரிவித்து வருகிறது. அவ்வாறானால் அரசுத் தரப்பில் இதற்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றுதான் நாம் உணர்ந்து கொள்ள வேண்டுமா?

உலக நாடுகள் பலவும் தங்களது மக்கள்தொகையைவிட பன்மடங்கு கரோனா தடுப்பூசிகளை வாங்க முடிவெடுத்து அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தபோது இந்தியாவிலோ கடந்த சில நாள்களுக்கு முன்தான் ரஷிய தடுப்பூசி இறக்குமதிக்கு ஒப்புதலே வழங்கப்பட்டுள்ளது. அந்த ஸ்புட்னிக் தடுப்பூசியும் கூட இந்தியா வந்து சேர ஜூன்  மாதமாகலாம் என நம்பப்படுகிறது.

இதுவரை 94 நாடுகளுக்கு 6.44 கோடி டோஸ் கரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு ஏற்றுமதி செய்திருக்கிறது. முதல் தவணை தடுப்பூசியே மக்களை அடையாத நாட்டில், முதல் தவணை தடுப்பூசி போட்டவர்களுக்கேகூட இரண்டாம் தவணைக்கான மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. 

நாட்டில் பயன்படுத்தப்பட்டு வரும் கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் இதுவரை 13.23 கோடி டோஸ் போடப்பட்டுள்ளன. எண்ணிக்கையில் பெரியதாகத் தெரிந்தாலும் ஒப்பீட்டளவில் இது மிக சொற்பம். 130 கோடிக்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்டுள்ள நாட்டில் நாம் இனியும் பயணிக்க வேண்டிய தொலைவு எறும்பு ஏறும் மலை போன்றது. 

குஜராத், மகாராஷ்டிரம், உத்தரப் பிரதேசம், தில்லி போன்ற மாநிலங்களில் படுக்கைகளுக்கும் ஆக்சிஜனுக்கும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. படுக்கைகள் இல்லாமல் ஒரு படுக்கையில் மூவர் படுத்திருக்கும் காட்சிகள் அனேகமாக அனைத்துத் தரப்பினரையும் சென்றிருக்கும். ஆக்சிஜன் சிலிண்டர்களைக் கேட்டு நோயாளிகள் அங்கும் இங்கும் ஓடி ஓடி ஓடி அவர்களுக்கே ஆக்சிஜன் வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிடும் போல. 

ஒரு வருடமாக நமது அரசு என்ன பாடத்தைத்தான் கற்றிருக்கிறது? 

“எங்களுக்கு இன்னும் சில மணி நேரத்திற்குதான் ஆக்சிஜன் இருக்கிறது. எப்படியாவது உதவுங்கள்” என மத்திய அரசிடம் முறையிட்ட தில்லி முதல்வர். “ஆக்சிஜன் இல்லை என்றால் மக்கள் சாவதைத் தவிர வேறு வழியில்லை” என நீதிமன்றத்தின் படிகளில் ஏறிய தில்லி மருத்துவமனை. 
இவற்றுக்கு மத்தியில் எல்லாம் நலமாக இருக்கிறது எனத் தொலைக்காட்சியில்  தோன்றிப் பேசினார் இந்தியப் பிரதமர் மோடி.

தடுப்பூசி நிறுவனங்களுடனான ஆலோசனைக்குப் பின் அவர் பேச்சை எதிர்பார்த்து நாடே காத்திருந்தது. 
“நாம் சவாலைச் சந்தித்து வருகிறோம். மாநிலங்கள் நிறுவனங்களிடமிருந்து தடுப்பூசிகளை வாங்கிக்கொள்ளுங்கள். விலைகளை நிறுவனங்களே முடிவு செய்யும். ஆல் தி பெஸ்ட்...”

பேரிடர் நேரத்தில் கைகொடுக்க வேண்டிய மத்திய அரசு, படகில் இருந்து மாநில அரசைத் தள்ளிவிட்டு விட்டு நீச்சல் தெரிந்தால் தப்பித்துக் கொள்ளுங்கள் என்பதைப் போல் கைவிரித்துவிட்டது. அப்படி என்றால் மருந்து நிறுவனங்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில்  என்ன பேசப்பட்டது?

அரசுக்கு ரூ.400-க்கு விற்கப்படும் கோவிஷீல்டு தடுப்பூசி வெளிச்சந்தையில் ரூ.600 க்கு கிடைக்கும் எனில் பேரிடர் காலத்தில் ஒரே தடுப்பூசிக்கு எதற்காக இருவேறு விலை? பேரிடர் காலத்திலும்கூட நிறுவனங்கள்தான் முடிவெடுக்கும் என்றால் நாட்டிற்கு அரசு என்பது எதற்காக  உள்ளது என சாமானியனுக்கு எழும் கேள்விக்கு யாரிடம் பதில் உள்ளது?

மருத்துவக் கட்டமைப்பில் சிறப்பாக இருக்கும் தமிழ்நாடு அரசுகூட தற்போது தடுமாறத் தொடங்கியுள்ளது. கரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்குவதில் மாற்றமில்லை என கேரளம்  உறுதியாகத் தெரிவித்துள்ளது. 

ஆக்சிஜன் சிலிண்டர்களைத் தூக்கிக் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு காவல்துறை பாதுகாப்பு எல்லாம் மக்கள் சந்தித்து வரும் தீவிரத்தன்மைக்கான அளவீடுகள். பேரிடர் காலத்திலும்கூட பிரதமர் இன்னும் ஊடகத்தை நேருக்கு நேர் சந்திக்கவில்லை. தினசரி இறப்புகள் அச்சமூட்டி வரும் நிலையில் படுக்கைகள் இல்லாததால் ஆம்புலன்ஸ்கள் வரிசை...ஆக்சிஜன் சிலிண்டர்கள் ஒருவேளை கிடைத்தால் அவற்றைச் சுமக்க ஒரு வரிசை...கரோனாவால் பலியான மக்களை எரியூட்ட சுடுகாடுகளில் வரிசை...

நாடு மூச்சுவிட முடியாமல் தவித்து நிற்கிறது.  

இரண்டாம் அலையில் தப்பிக்க முகக்கவசம் மட்டும் முக்கியமல்ல, அரசும்கூட முக்கியம்தான் என்பதை சர்வ வல்லமை பொருந்திய அரசும்தான் நினைத்துப் பார்க்க வேண்டும்.

Tags : coronavirus pandemic Oxygen shortage
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT