தற்போதைய செய்திகள்

தமிழறிஞர் ப.முத்துக்குமார சுவாமி காலமானார்

29th Oct 2020 08:28 PM

ADVERTISEMENT

சென்னை: தமிழறிஞர் ப.முத்துக்குமார சுவாமி (வயது 85) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் வியாழக்கிழமை காலமானார்.

அவருக்கு மகன் மு.ரவி, மகள்கள் கௌரி, லதா, கமலா ஆகியோர் உள்ளனர்.

ப.முத்துக்குமாரசுவாமி திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் 11.3.1936இல் பிறந்தார். தனது பள்ளி மற்றும் உயர் பள்ளிக்கல்வியை திருப்பராய்த்துறை அரசு உயர்நிலைப்பள்ளியிலும், ஸ்ரீராமகிருஷ்ணர் தபோவனத்திலும் பயின்றுள்ளார். தருமபுரம் பல்கலைக் கல்லூரியில் புலவர் பட்டப்படிப்பும், முதுபெரும் புலவர் சித்தாந்தசிரோமணி முத்து மாணிக்கவாசக முதலியார், பேராசிரியர் குருசாமி தேசிகர், செஞ்சொற்கொண்டல், சொ.சிங்காரவேலனார் ஆகியோரிடம் இலக்கண, இலக்கியம் பயின்றுள்ளார்.

படைப்புலகப் பணியில் 1963இல் கால் பதித்த ப.முத்துக்குமாரசுவாமி சுயமுன்னேற்றம்,  இலக்கியம்,  சமயம், திறனாய்வு,  ஒப்பீடு, சுயசரிதை, வரலாறு,  திருக்கோயில்கள்,  தலவரலாறு என பல்வேறு தலைப்புகளில் 170 நூல்களை எழுதியுள்ளார்.

ADVERTISEMENT

தமிழக அரசின் மறைமலையடிகள் விருது, கம்போடிய தமிழ்ச் சங்கம் வழங்கிய ராஜேந்திர சோழன் விருது, தமிழக அரசின் சிறந்த நூலாசிரியருக்கான விருது (இருமுறை), சமயக் களஞ்சிய விருது என 30க்கும் மேற்பட்ட விருதுகள், பொற்கிழிகளைப் பெற்றுள்ளார். துபை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இலக்கிய, ஆன்மிக கருத்தரங்குகள்,  தமிழ் சார்ந்த மாநாடுகளில் பங்கேற்றுள்ளார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன்,  முன்னாள் நிதியமைச்சர் சி.சுப்பிரமணியம்,  ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்,  குன்றங்குடி அடிகளார், சிலம்பொலி செல்லப்பன், ஒளவை நடராசன் உள்பட பல்வேறு முக்கிய பிரமுகர்கள், தமிழறிஞர்களின் நூல்களுக்கு அணிந்துரை வழங்கியுள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற அவரது முத்துவிழாவில் பல்வேறு துறை அதிகாரிகள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் ஆகியோரின் வாழ்த்துரைகள் அடங்கிய, “அன்புத் தவம் செய்யும் அறிஞர்” என்ற சிறப்பு மலர் வெளியிடப்பட்டது.  மறைந்த தமிழறிஞர் ப.முத்துக்குமாரசுவாமி வ.உ.சிதம்பரனார் வம்சா வழி பேரன் ஆவர்.

சென்னையில் உள்ள தனது மகள் கமலா வீட்டில் வசித்து வந்த ப.முத்துக்குமாரசுவாமி உடல்நிலைக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்தநிலையில் அவர் வியாழக்கிழமை காலமானார். அவரது மறைவுக்கு தில்லி தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் இரா.முகுந்தன் இரங்கல் தெரிவித்துள்ளார்.  

முத்துக்குமாரசுவாமியின் இறுதிச் சடங்குகள் சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள மயானத்தில் வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணிக்கு மேல் நடைபெறவுள்ளது. தொடர்புக்கு: 78456 15005

Tags : ப.முத்துக்குமார சுவாமி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT