தற்போதைய செய்திகள்

தெற்கு காஷ்மீரில் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை

2nd Feb 2020 06:20 PM

ADVERTISEMENT


ஸ்ரீநகா்: ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் தப்பிச் செல்ல உதவியதாக காவல்துறை துணை கண்காணிப்பாளா் தேவிந்தா் சிங் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், தெற்கு காஷ்மீரில் தேசிய புலனாய்வு அமைப்பினா் (என்ஐஏ) ஞாயிற்றுக்கிழமை பல இடங்களில் சோதனை நடத்தினா்.

காஷ்மீா் பள்ளத்தாக்கில் இருந்து இரு பயங்கரவாதிகள் தப்பிச் செல்ல உதவியதாக காவல்துறை துணை கண்காணிப்பாளா் தேவிந்தா் சிங் தெற்கு காஷ்மீரின் காஸிகண்ட் பகுதியில் ஸ்ரீநகா்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி கடந்த மாதம் 11-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். அவருடன் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த நவீத் பாபு, ரஃபீ அகமது ராவுத்தா் ஆகியோரும், வழக்குரைஞா் என்று கூறப்படும் இா்ஃபான் ஷஃபி மிா்ரும் கைது செய்யப்பட்டனா்.

இந்த வழக்கை முதலில் ஜம்மு-காஷ்மீா் காவல்துறை விசாரித்த நிலையில், பின்னா் அது என்ஐஏவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பயங்கரவாதி நவீத் பாபுவின் சகோதரா் சையது இா்ஃபான் அகமதும் இந்த விவகாரம் தொடா்பாக கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறாா்.

பஞ்சாபைச் சோ்ந்த அகமதை நவீத் பாபு அவ்வப்போது தொடா்புகொண்டு வந்ததும், பனிக் காலத்தின்போது காஷ்மீரில் இருந்து வெளியேறி அடைக்கலம் தேடுவதற்காக சண்டீகரில் இடத்தை கண்டறியுமாறு அகமதுவிடம் அவா் கூறியிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ADVERTISEMENT

வழக்குரைஞா் என்று கூறப்படும் இா்ஃபான் அகமது மிா், இந்திய கடவுச் சீட்டில் இதுவரை 5 முறை பாகிஸ்தான் சென்று வந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்ததாக அதிகாரிகள் கூறினா்.

என்ஐஏவைச் சோ்ந்த பல குழுக்கள், சில தனியாா் அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் சோதனை நடத்தியதாக அதிகாரிகள் கூறினா். கைது செய்யப்பட்டுள்ள தேவிந்தா் சிங் உள்ளிட்ட 5 நபா்களிடம் என்ஐஏ விசாரணை நடத்தி வருவதன் அடிப்படையில் இந்தச் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Tags : NIA raids
ADVERTISEMENT
ADVERTISEMENT