தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் ஊழல் அரசு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது: மக்களவையில் தயாநிதி மாறன் பேச்சு

25th Jun 2019 01:09 PM

ADVERTISEMENT

புதிதில்லி: குடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது. அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது என்று மக்களவையில் திமுக உறுப்பினர் தயாநிதி மாறன் பேசினார். 

மக்களவையில் இன்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் திமுக உறுப்பினர் தயாநிதி மாறன் பேசுகையில், தற்போதைய மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால்தான் பாஜக வெற்றி பெற்றது. தமிழகத்தில் திமுக வலிமையான கூட்டணி அமைத்ததால் வெற்றி பெற்றிருக்கிறது. தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என்று கர்நாடகாவுக்கு உத்தரவிட்ட பின்னரும் கூட நீர் திறக்கப்படவில்லை. தமிழக மக்கள் உங்களுக்கு வாக்களிக்காமல் போனால் மாற்றாந்தாய் மனப்பானையுடன் நடந்து கொள்வீர்களா? ஊழல் ஒழிப்பு குறித்து நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசு தலைவர் பேசியிருக்கிறார். ஆனால் தமிழகத்தில் ஊழலில் ஊறிப் போன அதிமுக அரசுதான் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் மக்கள் நலனுக்கான ஒரு அரசு செயல்படவில்லை. ஒரு அடிமை அரசாகத்தான் இருக்கிறது.

ஓட்டுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில், தேர்தல் ஆணையத்தால் நடவடிக்கை இல்லை. தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என்பதை நிதி ஆயோக் அமைப்பு எச்சரித்தது, சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் திட்டங்களை அதிமுக அரசு சரியாக செயல்படுத்தியிருந்தால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டிருக்காது. குடிநீர் தட்டுப்பாடு உள்ளிட்ட மக்களின் எந்த பிரச்னையையும் அதிமுக அரசு கண்டுகொள்ளவில்லை என்று தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசை விமர்சனம் செய்தே தயாநிதி மாறன் பேசினார். 

தயாநிதி மாறனின் பேச்சுக்கு பாஜக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்கள் எழுப்பினர். குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் உரை மீதான விவாதத்தில், சம்பந்தம் இல்லாமல் தயாநிதி மாறன் பேசுவதாக ராஜீவ் பிரதாப் ரூடி குற்றம்சாட்டினார். இதனால் மக்களவையில் அமளில் ஏற்பட்டது. 

ADVERTISEMENT

அவர்களை சபாநாயகர் அமைதிப்படுத்தினார். அதன்பின்னர் தனது பேச்சை தொடர்ந்த தயாநிதி மாறன், தண்ணீர் பிரச்னை முக்கியமான பிரச்னை. அதனை தீர்க்க அரசு நடவடிக்க வேண்டும்.

குடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்ததாகவும், அத்திட்டத்தை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது. புதிய கல்விக் கொள்கை மூலம் தமிழகத்தின் கல்வி முறையை மத்திய அரசு ஏன் மாற்ற முயற்சிக்கிறது? என்று தயாநிதி மாறன் தநது உரையில் குறிப்பிட்டார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT