குரு - சிஷ்யன்

71. மகிழ்ச்சி 365

ஜி. கௌதம்

வித்தியாசமான பிரச்னை ஒன்றை எடுத்துக்கொண்டு ஆசிரமத்துக்கு வந்திருந்தார் ஒருவர்.

“குருவே.. எனக்கொரு உண்மை தெரிந்தாக வேண்டும். அதனை தெரிந்துகொள்ளாமல் என் தலையே வெடித்துவிடும் போலிருக்கிறது..” என்றார்.

பிரச்னையைக் கூறும்படி கேட்டுக்கொண்டார் குருநாதர். அப்படியென்ன தலை வெடிக்கும் அளவுக்கான பிரச்னை என்ற அக்கறையில் சிஷ்யனும் ஒரு ஓரமாக உட்கார்ந்து கேட்கத் தயாரானான்.

“என்னை இங்கே அழைத்து வந்திருப்பவன் ஒரு குதிரை வண்டிக்காரன். குதிரை வண்டி ஓட்டுவதைத் தவிர அவனுக்கு வேறொன்றும் தெரியாது. வேறெந்த வருமானமும் கிடையாது. அதுதான் தொழில். அதிலிருந்து மட்டுமே வருமானம். ஆனால், எப்போது கேட்டாலும், ‘நான் நன்றாக இருக்கிறேன்.. மகிழ்ச்சியோடு இருக்கிறேன்' என்றே கூறுகிறான். அவனைவிட பல மடங்கு வருவாய் ஈட்டுகிறேன் நான். அவனைவிடவும் பலவிதமான வசதிகளுடன் வாழ்கிறேன். ஆனால், என்னால் அப்படி எல்லா நாளிலும் மகிழ்ச்சியோடு இருப்பதாகக் கூறமுடியவில்லை. அவனால் மட்டும் எப்படி அது முடிகிறது?” என்றார் வந்திருந்தவர்.

“இதனை நீ அவனிடமே கேட்டிருக்கலாமே?” என்றார் குரு.

“கேட்டேன். அவனால் அதற்கான பதிலை அறிந்து சொல்ல முடியவில்லை. அதனால்தான் இங்கே வந்தோம்..” என்றார் அந்த மனிதர்.

தன்னைவிட இன்னொருவன் மகிழ்ச்சியாக வாழ்கிறான் என்பதை அறிந்து இந்த மனிதர் பொறாமைப்படுகிறாரே என மனதுக்குள் நினைத்துக்கொண்டான் சிஷ்யன். அந்தச் சிந்தனை அவனது பார்வையிலும் வெளிப்பட்டது.

சிஷ்யனின் முகத்தில் தெரிந்த கோபத்தைப் பார்த்ததும் பதைபதைத்துவிட்டார் அந்த மனிதர். “அப்படிப் பார்க்காதே சீடனே. நான் அவன் மீது பொறாமை கொள்ளவில்லை. என்னைத் தவறாக எண்ணிவிடாதே. என்றும் மகிழ்வோடு இருக்க என்ன காரணம் என்பதைக் கண்டறிய ஆவலோடு இருக்கிறேன். அவ்வளவுதான்..” என்றார் படபடப்புடன்.

குருவும் சிஷ்யனும் ஒருவருக்கொருவர் பார்த்து, புன்னகைத்துக்கொண்டனர்.

“அந்த குதிரை வண்டிக்காரனை அழைத்து வா..” என்றார் குரு. சிஷ்யன் எழுந்து சென்றான்.

பயபக்தியுடன் குருவின் எதிரே நின்றான் குதிரை வண்டிக்காரன். அவனை அமரும்படி கூறினார் குரு. தயக்கத்துடனேயே அமர்ந்தான் அவன்.

“எப்படி இருக்கிறாய்?” என்றார் குரு.

“நன்றாக இருக்கிறேன் சுவாமி..” என்றான் அவன்.

“மகிழ்ச்சியாக இருக்கிறாயா?” என்றார் குரு.

“ஆம் சுவாமி. மகிழ்ச்சியாகவும் மனநிறைவுடனும்தான் ஒவ்வொரு நாளும் விடிகிறது. ஒவ்வொரு நாளும் முடிகிறது..” என்றான் அவன்.

“எல்லா நாட்களும் நீ மகிழ்ச்சியோடு இருப்பதற்கு என்ன காரணம் என தெரிந்துகொள்ளாவிட்டால் தன் தலை வெடித்துவிடும் என்று கூறுகிறாரே இவர்..” என்றார் குரு.

“ஆம் சுவாமி. அப்படித்தான் என்னிடமும் பல நாட்களாகக் கூறுகிறார். அந்தக் காரணம் என்னவென எனக்குத் தெரிந்தால் நானே கூறிவிடமாட்டேனா!” என்றான் அவன்.

அவனது கள்ளம் கபடமில்லா பேச்சை ரசித்தார் குருநாதர். அவனது மகிழ்ச்சிகரமான வாழ்க்கையின் ரகசியத்தை அறியும் நோக்கத்தில் அவனுடன் தொடர்ந்து பேச்சுக் கொடுத்தார்.

“உன் தினசரி பழக்க வழக்கங்கள் என்னென்ன?” என்றார் குரு.

“அதிகாலையில் எழுந்து விடுவேன். சீக்கிரமே வண்டியைப் பூட்டிக்கொண்டு பணிக்கு கிளம்பிவிடுவேன்..”.

“கட்டணம் எப்படி நிர்ணயித்து வாங்குகிறாய்?”.

“நியாயமற்ற முறையில் அதிக கட்டணம் கேட்கமாட்டேன். வயதானவர்களிடமும், நோயாளிகளிடமும் கட்டணம் கேட்கவேமாட்டேன். அவர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கிக்கொள்வேன்..”.

“எத்தனை மணி வரை பணியில் இருப்பாய்?”.

“மறுநாள் என் குடும்பத்தை மகிழ்ச்சியாக நடத்துவதற்கு தேவையான பணம் கிடைத்ததும் அன்றைய பணியை முடித்துக்கொள்ளத் தயாராகிவிடுவேன். ஆனாலும், வழக்கமாக பணி முடிக்கும் நேரம் வரை காத்திருப்பேன். மறுநாள் தேவைக்கு அதிகமாக கிடைக்கும் வருமானத்தை எதிர்கால நலனுக்கான சேமிப்பு என தனியாக எடுத்து வைத்துக்கொள்வேன்..”.

“எப்போது வீட்டுக்குத் திரும்புவாய்?”.

“தினமும் ஒரே நேரம்தான்.. சூரிய அஸ்தமனத்தின்போது வேலையை முடித்துக்கொள்வேன். அதற்குப் பிறகு கோடி ரூபாய் கொடுத்தாலும் நிற்கமாட்டேன். யாரையாவது மருத்துவமனைக்கு அழைத்துச்செல்வதாக இருந்தால் மட்டுமே அதன்பிறகு பணியில் இருப்பேன். மற்றபடி, நேரத்தோடு வீட்டுக்குச் சென்று, மனைவியோடும் குழந்தைகளோடும் மகிழ்ச்சியாக நேரம் செலவிடுவேன்..” என்றான் அந்த வண்டிக்காரன்.

“வருடம் முழுவதும் தான் மகிழ்ச்சியாக இருப்பதற்கான காரணம் என்னவென்பதை அழகாக எடுத்துக் கூறிவிட்டானே இந்த இளைஞன்..” என்றார் குரு.

“புரியவில்லையே குருவே..” என்றார் வண்டிக்காரனை அழைத்து வந்திருந்த மனிதர்.

குரு, தலை திருப்பி சிஷ்யனைப் பார்த்தார். அவனுக்கு சாடை காட்டினார். அவன் பேச ஆரம்பித்தான்..

“அதிகாலையில் எழுவது, குறித்த நேரத்தில் பணிகளை ஆரம்பிப்பது, நியாயமான கட்டணம் நிர்ணயிப்பது, பிறருக்கு உதவுவது, தேவைக்கு அதிகமாக பொருள் சேர்க்க நினைக்காதது, சேமிப்புக்காக வருமானத்தில் ஒரு பங்கை ஒதுக்கிவைப்பது, பணத்துக்காக ராப்பகலாக கஷ்டப்படாதது, பேராசைப்படாதது, குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருப்பது, இவையெல்லாம் தன் கடமைகள் என அறிந்து வைத்திருப்பது.. திட்டமிடல் எதுவுமில்லாமல் இந்த பத்து கட்டளைகளையும் தனக்குத் தானே கடைப்பிடித்து வருகிறார் இந்த வண்டிக்காரர். அதுதான் வருடத்தின் எல்லா நாட்களும் அவர் மகிழ்வோடு இருக்கக் காரணம்..” என்றான் சிஷ்யன்.

வந்திருந்த மனிதர், வண்டிக்காரன்.. இருவருமே ஆச்சரியத்துடன் சிஷ்யனை நோக்கினார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

SCROLL FOR NEXT