குரு - சிஷ்யன்

68. குதிரைகள் ஆறு..

ஜி. கௌதம்

உடல், மனம், சிந்தனை, செயல்.. இவற்றைத் தொடர்புபடுத்தி அன்றைய பாடம் நடத்தினார் குரு. கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தான் சிஷ்யன்.

புரிந்துகொள்வதற்கு கடினமான பாடமாக இருந்ததால், பாதியில் நிறுத்தி விட்டு, “பாடம் புரிகிறதா?” என சிஷ்யனிடம் கேட்டார் குரு.

“நன்றாகப் புரிகிறது குருவே. பாடத்தைத் தொடருங்கள்..” என்றான் சிஷ்யன்.

“நல்லது. நீ என்னிடம் வந்து சேரும்போதே மூன்றாம் வகை குதிரையாக இருந்தாய். இப்போது இரண்டாம் வகைக்கு உயர்ந்திருக்கிறாய். சீக்கிரம் முதல் வகை குதிரை நிலையை அடைந்துவிடுவாய். பாராட்டுக்கள்..” என்றார் குரு.

இதைப் படித்துக்கொண்டிருக்கும் நீங்கள் கேட்ட அதே கேள்வியைத்தான் சிஷ்யனும் கேட்டான் குருவிடம்.. “அதென்ன மூன்றாம் வகை குதிரை? எனக்கு விளக்க முடியுமா குருவே?” என்றான்.

குரு விளக்கம் கூறலானார்..

“குதிரைகளில் மொத்தம் ஆறு வகைகள் இருக்கின்றன. எதுவும் செய்யப்பிடிக்காமல் சோம்பேறித்தனமாக உட்கார்ந்திருப்பவை ஆறாம் வகை. அவை, தன்னை அறிவதில்லை. தன் திறனையும் உணர்வதில்லை. உயிருள்ள பிணம்போலத்தான். எத்தனை முறை அதட்டினாலும், அடித்தாலும் அது அப்படியேதான் இருக்கும். கடமைகளைச் செய்ய முரண்டு பிடிக்கும். பிறருக்கோ அல்லது தனக்கோ பயனில்லாத வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதர்களும் இப்படிப்பட்டவர்களே".

“ம்..”.

“ஐந்தாம் வகை குதிரைகள் கொஞ்சம்போல சுவாதீனம் கொண்டவை. குச்சியெடுத்து அதை அடித்தால் தன் உணர்வுக்கு வரும். திரும்பத் திரும்ப அடித்துக்கொண்டே இருக்க வேண்டும். அடிக்கடி அறிவுறுத்திக்கொண்டே இருந்தால்தான் ஒரு சில மனிதர்கள் தங்கள் கடமைகளைச் செய்வார்கள். அவர்களும் இவ்வகை குதிரைகளும் ஒன்றுபோலத்தான்..”.

“ம்..”.

“நான்காம் வகை குதிரைகள் கொஞ்சம் மேலான ரகம். அடிக்கடி அடித்து, நினைவூட்டவேண்டியதில்லை. அவ்வப்போது அடித்தால் போதும். அதேபோல, அவ்வப்போது மற்றவர்களின் வழிகாட்டுதல் இருந்தால்தான் ஒருசில மனிதர்கள் விழிப்பு உணர்வை அடைவார்கள். அவர்களும் இவ்வகை குதிரைகளும் ஒரே ரகம்தான்..”.

“ம்..”.

“மூன்றாம் வகை குதிரைகளுக்கு அடி கொடுக்கவெல்லாம் தேவையில்லை. குச்சியை எடுத்து அதன் கண்களில் காட்டினாலே போதும். எழுந்து நடக்க ஆரம்பித்துவிடும். மனிதர்களிலும் இப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்கள். சரியான நேரம், சரியான பாடம் கிடைத்தால் போதும் அவர்களுக்கு. விழித்துக்கொண்டுவிடுவார்கள்..”.

‘ம்..”.

“குச்சி இருப்பதுபோல பாவனை செய்து காட்டினால் போதும் இரண்டாம் வகை குதிரைகளுக்கு. அல்லது குச்சி போன்ற நிழலைப் பார்த்துவிட்டாலும் அவை சட்டென விழித்துக்கொள்ளும். அப்படி சட்டென தன் உணர்வை அடையும் மனிதர்களை இவ்வகை குதிரைகளோடு ஒப்பிடலாம்..”.

“ம்..”.

“முதல் வகை குதிரைகளுக்கு குச்சியைக் காட்டத் தேவையில்லை. அடி கொடுக்கவும் தேவையில்லை. அவை எப்போதும் விழிப்பு நிலையில்தான் இருக்கும். அறிவுறுத்தலோ நினைவூட்டலோ தேவையில்லாமல் தன் கடமைகளைச் செய்துமுடிக்கும் மனிதர்கள் இப்படிப்பட்டவர்களே..” என்று கூறி முடித்தார் குருநாதர்.

குருநாதர் தன்னை படிப்படியாக நிலை உயரும் குதிரையாக எண்ணிப் பாராட்டியதை நினைத்து மகிழ்ந்தான் சிஷ்யன். இரண்டு கைகளையும் உயர்த்திக்கொண்டு குதிரைபோல பாவித்து, உரத்துக் கனைத்துக் காட்டினான். புன்னகைத்தார் குரு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

வெள்ளை நிலா... சாய் தன்ஷிகா!

"ராகுலோ, மோடியோ! நாங்கள் வரவேற்போம்!": செல்லூர் ராஜூ

பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க மனு! நீதிபதி விடுப்பு! | செய்திகள்: சிலவரிகளில் | 26.04.2024

SCROLL FOR NEXT