இந்தியா

வளமான எதிர்காலத்துக்கான நம்பிக்கை: ஸ்ரீஸ்ரீரவிசங்கர்

DIN

 அனைவரும் மகிழ்ச்சியுடனும் செழிப்பாகவும் இருக்க வேண்டும் என்பது உலகின் மிகப் பழைமையான நாகரிகமும் மிகப்பெரிய மற்றும் துடிப்பான ஜனநாயகமுமான இந்தியாவின் கனவாக இருந்தது. இந்தப் பாதையில் கடந்த 9 ஆண்டுகளில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைச் சந்தித்துள்ளது.
 வலிமையான நிர்வாகத் திறன், மக்களின் உறுதியான ஆதரவு மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் உறுதியான நோக்கம் கொண்டுள்ள பிரதமர் ஆகியவற்றால் இது சாத்தியமாகியுள்ளது. இதன் காரணமாக இளைஞர்கள் மற்றும் ஏழைகளிடையே நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
 ஒதுக்கீடு செய்யப்பட்டதில் வெறும் 10 சதவீதம்தான் பயனாளர்களுக்குச் சென்றடைகிறது என்பதை முந்தைய பிரதமர்கள் ஒப்புக்கொண்டிருந்தனர். ஆனால், முன் எப்போதும் இல்லாத வகையில் ஏராளமான வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டு, பயனாளர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகப் பணப் பரிமாற்றம் செய்து முழுத் தொகையும் அவர்களைச் சென்றடைவதை தற்போதைய பிரதமர் உறுதி செய்துள்ளார்.
 உலகம் முழுவதும் வேலையில்லா நிலை மிகப் பெரிய பிரச்னையாக இருந்துவரும் வேளையில், அதை எதிர்கொள்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதோடு, நகரங்களில் மட்டுமல்லாமல் நாட்டின் தொலைதூரப் பகுதிகளிலும்கூட திறன் மேம்பாட்டு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
 குறுகிய காலத்தில் உள்கட்டமைப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள மிகப் பெரிய மாற்றம், வளர்ந்த இந்தியாவின் உதாரணமாகத் திகழ்கிறது.
 நூற்றாண்டில் ஒருமுறை ஏற்படக் கூடிய கரோனா பெருந்தொற்று, பல்வேறு பகுதிகளில் அதிகரித்துவரும் உலகமயமாக்கலுக்கு எதிரான போக்கு, ரஷியா- உக்ரைன் போர், அதிகரித்து வரும் பருவநிலை பிரச்னை, உலகம் முழுவதும் நீடித்த பணவீக்கம், சர்வதேச அளவில் பெருவாரியான மக்களிடையே ஏற்படும் மனநிலை சார்ந்த பிரச்னைகள் ஆகியவை இந்த காலகட்டத்தில் குறிப்பிடத்தக்க பிரச்னைகளாக இருந்து வருகின்றன.
 ஆசிய கண்டத்தில் பல்வேறு அரசுகள் தோல்வியைச் சந்தித்து வரும்போதும், தனது மதிநுட்பம் வாய்ந்த கொள்கைகள் மற்றும் உறுதிப்பாட்டால் விரைவாக வளர்ந்த பொருளாதாரம் என்னும் லட்சியத்தை நோக்கி இந்தியா எழுச்சி பெற்றுள்ளது.
 உலகம் முழுவதும் வெளிநாடுகளுடனான ராஜீய உறவு இதுவரை இல்லாத வளர்ச்சியைச் சந்தித்துள்ளது.
 உலக மக்கள்தொகையில் ஆறில் ஒரு பகுதியை இந்தியா பெற்றுள்ள நிலையிலும், இப்போது இருப்பதுபோல இந்தியாவின் குரல் இதுவரை எப்போதும் ஒலித்ததில்லை. தற்போதைய அரசாலும் அதன் கொள்கைகளாலும் சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கான நிலையை நாடு அடைந்து வருகிறது.
 பல்வேறு நாடுகளில் பணவீக்கம் சவாலாக இருந்து வருகிறது. அதேபோல பல ஆசிய நாடுகள் பொருளாதார சரிவைச் சந்தித்து வருகின்றன. இருந்தபோதும் வியக்க வைக்கும் நெகிழ்வுத்தன்மையை இந்தியா வெளிப்படுத்தியுள்ளது. கரோனா பெருந்தொற்றின்போது, ஒருவரும் பசியால் வாடக் கூடாது என்ற உன்னத நோக்கத்தோடு அரசு ஏராளமான முன்முயற்சிகளை அறிவித்தது.
 நம் நாட்டின் புனிதத் தலங்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறன்றன.
 இதனால் அவர்களது வருகை அதிகரித்தாலும் போதிய சுகாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு வசதி இல்லாமல் இருந்தது. இது போன்ற இடங்களுக்கு முந்தைய அரசுகள் முக்கியத்துவம் அளிக்கவில்லை. ஆனால், கடந்த சில ஆண்டுகளில் வாரணாசி, உஜ்ஜைன், கேதார்நாத், ரிஷிகேஷ் போன்ற இடங்கள் மேம்படுத்தப்பட்டு, அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளன.
 நவீன நாகரிகத்தின் மதிநுட்பத்துக்கு ஈடு செய்ய முடியாததாக கடந்த கால கல்வி அமைப்புமுறை இருந்து வந்தது. ஆனால், தேசிய கல்விக் கொள்கை மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி, இளைஞர்கள் தங்கள் படைப்பாற்றலை தடையில்லாமல் வெளிப்படுத்த வைத்துள்ளது. அனைவரும் கல்வியை அணுகக் கூடிய நிலையும் தற்போது ஏற்பட்டுள்ளது.
 கலை மற்றும் கலாசாரம் ஊக்குவிக்கப்பட்டு, அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு புதிய அருங்காட்சியகங்கள் திறக்கப்பட்டுள்ளன; அனைத்துவிதமான கலைகளுக்கும் உரிய மரியாதை வழங்கப்படுகிறது. நமது உண்மையான திறனையும், சாத்தியங்களையும் இது உணர்த்துகிறது.
 அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் கட்சிகளுக்கும் மத நம்பிக்கைகளும் பழக்க வழக்கங்களும் இருந்தாலும், அவர்கள் அதை ஒருபோதும் வெளிப்படுத்தியதில்லை. ஆனால், இதை ஒப்புக்கொள்வதில் பிரதமர் மோடி எந்தத் தயக்கமும் காட்டவில்லை. மாறாக, அதில் பெருமிதம் கொண்டார்.
 மக்களின் நம்பிக்கை மற்றும் சுய கெளரவத்தை சார்ந்துதான் ஒரு சமூகத்தின் முன்னேற்றம் அமைந்துள்ளது. ஒருவரது கலாசாரம் மற்றும் வேர்களுக்கு மரியாதை அளிப்பதால் சமூகத்தில் சுய கெளரவம் அதிகரிக்கிறது. இதில் எந்த ஒரு தயக்கமும் பாரபட்சமும் காட்டப்படுவதில்லை.
 நாட்டின் வடகிழக்குப் பகுதிகளுக்கு பல காலங்களாக முன்னுரிமை அளிக்கப்படாத நிலை இருந்து வந்தது. தற்போது இந்நிலை மாறியுள்ளது.
 காஷ்மீரின் வளர்ச்சி மற்றும் அந்தப் பகுதிகளில் வசிக்கும் பெண்களுக்கு அளிக்கப்பட்டுள்ள நீதி ஆகியவை சொந்த மக்களுக்கு அநீதி இழைக்கப்படுவதை எவ்வாறு சரி செய்ய முடியும் என்பதை எடுத்துக்காட்டுகின்றன.
 ஆப்கானிஸ்தானுக்கு புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர் மோடி அன்பளிப்பாக வழங்கியது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? அதேபோல நைஜீரியாவின் குடியரசுத் தலைவர் மாளிகையும் சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவால் கட்டித் தரப்பட்டது.
 தற்போது நமது அரசியலமைப்பு மற்றும் பாரம்பரியத்துக்கு மரியாதை செலுத்தும் வகையில் பிரம்மாண்டமான புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளார். இந்த பிரமிக்க வைக்கும் கட்டடம், குறுகிய காலத்திலேயே அமைக்கப்பட்டிருப்பது, இதன் கூடுதல் சிறப்பு.
 கடந்து வரும் பாதை முட்கள் நிறைந்ததாக இருக்கலாம்; ஏற்பட்ட தவறுகளைத் திருத்தி இருக்கலாம்; வேலையின்மை நிலை மிகப் பெரிய பிரச்னையாக இருக்கலாம்; விலைவாசி உயர்வு மற்றும் இதர சமூகப் பிரச்னைகள் போன்று ஏராளமான குறைகள் சுட்டிக்காட்டப்பட்டாலும் இவற்றைத் தீர்ப்பதற்காக தற்போதைய அரசு எடுத்து வரும் விரைவான நடவடிக்கைகள் உண்மையிலேயே பாராட்டுக்குரியவை. வளமான எதிர்காலத்துக்கான நம்பிக்கையை இந்த முன்முயற்சிகள் நமக்கு அளிக்கின்றன.
 "பொறுத்தார் பூமி ஆள்வார்' என்ற பழமொழியை மெய்ப்பிக்கும் வகையில் இந்தியா தனது அனைத்துக் கனவுகளும் நிறைவேற வேண்டும் என்று விரும்பினால், மோடியின் குழுவுக்கு இன்னும் சற்று காலம் வழங்குவதில் தவறு ஏதுமில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு இயந்திரத்தை இரும்புக் கம்பியால் தாக்கிய இளைஞர்: பரபரப்பான தேர்தல் மையம்!

மூட்டை தூக்கும் புதுச்சேரி முன்னாள் அமைச்சரின் விடியோ வைரல்!

சந்தானத்தின் ‘இங்க நான்தான் கிங்கு’ டிரைலர்!

சுட்டெரிக்கும் வெயிலிலும் வாக்களிக்க கேரள மக்கள் ஆர்வம்!

விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா!

SCROLL FOR NEXT