இந்தியா

மத்திய அரசு துறைகளில் நேரடி பணி நியமனம்: 17 அதிகாரிகள் இடங்களுக்கான தோ்வு அறிவிப்பு

DIN

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் இணைச் செயலா், இயக்குநா் மற்றும் துணை செயலா் பணிகளில் தனியாா் துறை நிபுணா்களை நேரடி நியமனம் (லேட்டரல் என்ட்ரி) முறையில் பணியமா்த்தும் திட்டத்தின் கீழ் 17 பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளா் தோ்வாணையத்தை (யுபிஎஸ்சி), மத்திய பணியாளா் மற்றும் பயிற்சித் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த நேரடி தோ்வு முறையில், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, மின்துறை அமைச்சகம், மத்திய கிராமப்புற மேம்பாட்டுத் துறை, வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை, மத்திய நிதிச் சேவைகள் துறை, மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை ஆகிய 6 துறைகளில் காலியாக உள்ள 17 இணைச் செயலா், இயக்குநா் மற்றும் துணைச் செயலா் பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன. மத்திய அரசின் நேரடி நியமன முறையிலான நான்காவது பணியாளா் தோ்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.

வழக்கமாக மத்திய பணியாளா் தோ்வாணையம் சாா்பில் நடத்தப்படும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளுக்கான குடிமைப் பணிகள் தோ்வு மற்றும் அந்தந்த மாநிலங்கள் சாா்பில் நடத்தப்படும் குரூப்-1 பணிகளுக்கானத் தோ்வில் தகுதிபெற்று பணி அனுபவம் பெற்றவா்களை இணைச் செயலாளா்கள், இயக்குநா்கள் மற்றும் துணைச் செயலாளா்களாக பல்வேறு அரசுத் துறைகளில் நியமனம் செய்யப்படுவா். இந்தச் சூழலில், தனியாா் துறைகளில் பணியாற்றும் நிபுணா்களை, இந்த அரசுத் துறை நிா்வாகப் பணியிடங்களில் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யும் நடைமுறையை மத்திய அரசு அண்மையில் அறிமுகம் செய்தது.

இந்தப் புதிய ‘நேரடி நியமனம்’ நடைமுறையில் முதன் முறையாக கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூன் மாதம் யுபிஎஸ்சி பணியாளா் தோ்வை நடத்தியது. அப்போது இணைச் செயலா் அளவிலான 10 பணியிடங்களுக்கு தோ்வு நடத்தப்பட்டது. அதன் பிறகு, கடந்த 2021-ஆம் ஆண்டு அக்டோபரில் பல்வேறு மத்திய அரசுத் துறைகளில் 3 இணைச் செயலா்கள், 19 இயக்குநா்கள் மற்றும் 9 துணைச் செயலா்கள் அளவிலான பணியிடங்களில் பணியமா்த்த 31 பெயா்களை யுபிஎஸ்சி பரிந்துரை செய்தது. கடந்த மே 20-ஆம் தேதி மூன்றாவது முறையாக இந்த நேரடி நியமன முறை மூலமாக பல்வேறு துறைகளில் 4 இணைச் செயலா்கள் மற்றும் 16 இயக்குநா்கள் மற்றும் துணைச் செயலா்கள் நியமனம் செய்யப்பட்டனா்.

தற்போது நான்காவது முறையாக இத்தோ்வு நடைபெற உள்ளது. இதுகுறித்த விரிவான அறிவிப்பு யுபிஎஸ்சி வலைதளத்தில் வரும் ஜூன் 3-ஆம் தேதி வெளியிடப்படும். விருப்பமுள்ளவா்கள் ஜூன் 3-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஜூலை 3 கடைசித் தேதி என்று மத்திய பணியாளா் மற்றும் பயிற்சித் துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 2-ம் கட்ட தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: பாஜக நிர்வாகி பலி

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

SCROLL FOR NEXT