இந்தியா

குடும்பத் தலைவி யார்? கர்நாடகம் முழுவதும் குடுமிப்பிடிச் சண்டை

31st May 2023 12:31 PM

ADVERTISEMENT


பெலகாவி: கர்நாடக மாநிலம் முழுவதும் தற்போது பல குடும்பங்களில் குடும்பத் தலைவி யார்? என்ற குடுமிப்பிடிச் சண்டை ஓங்கியிருக்கிறது.

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப்பிடித்திருக்கும் நிலையில், அதன் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான, குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2000 வழங்குவது நிச்சயம் வெகுவிரைவில் நிறைவேற்றப்படும் என்று மக்கள் கருதுகிறார்கள்.

அதன் அடிப்படையில், கூட்டுக்குடும்பமாக வசிக்கும் குடும்பங்களில், யார் குடும்பத் தலைவி என்ற கேள்வியோடு சண்டையும் எழுந்துள்ளது.

கர்நாடக மாநில அரசு சார்பில் வழங்கும் மாதந்தோறும் உதவித் தொகையை பெறப்போவது யார்? குடும்பத்தின் தலைவி மாமியாரா அல்லது மருமகளா என்ற வாக்குவாதம் தீவிரமடைந்துள்ளது.

ADVERTISEMENT

மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு உதவித் தொகை வழங்கப்படும் என்று மட்டுமே காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது. ஆனால், அதற்கான எந்த தகுதியையும் அறிவிக்கவில்லை. ஆனால், அதற்குள், மாத உதவித் தொகையை பெறுவதற்கு குடும்பத்துக்குள் இருக்கும் பெண்களுக்கு சண்டை, சச்சரவுகள் தொடங்கிவிட்டன.

இது குறித்து கர்நாடக மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சர் லஷ்மி ஹெப்பல்கர் கூறுகையில், இது குறித்து குடும்பங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். பொதுவாக, குடும்பத்தில் மாமியாரே குடும்பத் தலைவியாவார். அவருக்குத்தான் உதவித் தொகை வழங்கப்படும். அவர் விரும்பினால், மருமகளுடன் உதவித் தொகையை பகிர்ந்துகொள்ளலாம் என்று விளக்கம் அளித்துள்ளார்.

குடும்பத்தலைவி என்றால் அது ஒரு குடும்பத்தின் மூத்த பெண்ணாகவே இருப்பார். அதன் அடிப்படையில் அவருக்குத்தான் உதவித் தொகை வழங்கப்படும் என்று பொதுப் பணித் துறை அமைச்சரும் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

ஆனால், இந்த விவகாரத்தில், ஒருதலைபட்சமாக முடிவெடுக்கக் கூடாது. ஒரு குடும்பத்தில் இருக்கும் பெண்களுக்கு உதவித் தொகை பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். இல்லையென்றால் இது குடும்பங்களுக்குள் பிளவை ஏற்படுத்திவிடும் என்கிறார்கள் மகளிர் சமூக ஆர்வலர்கள்.

விரைவில், அமைச்சரவைக் கூடி, இதற்கான தகுதி உள்ளிட்ட விவரங்கள் இறுதி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT