இந்தியா

கல்யாணப் பரிசாக கருத்தடை சாதனங்கள்!

31st May 2023 11:56 AM

ADVERTISEMENT


இந்தூர்: கல்யாணப் பரிசாக மணமக்கள் இதுவரை பல்வேறு விதமான பரிசுகளை பெற்றிருப்பார்கள். ஆனால், புதிதாக மணமான தம்பதிகளுக்கு மத்திய பிரதேச அரசு அளித்த பரிசைப் பார்த்து மணமக்கள் மட்டுமல்ல பலரும் விக்கித்துப்போயினர்.

மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபுவா மாவட்டத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதியில், மத்தியப் பிரதேச அரசு சார்பில் ஏராளமான இணையருக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

இதில் திருமண தம்பதிகளுக்கு மத்தியப் பிரதேச அரசு சார்பில் அளிக்கப்பட்ட பரிசுப் பொருள்களில், ஆணுறையும், கருத்தடை மாத்திரைகளும் இருந்ததைப் பார்த்து பலரும் எதிர்மறையான கருத்துகளை முன்வைத்துள்ளனர்.

ஆனால், மத்தியப் பிரதேச அரசு, குடும்பக் கட்டுப்பாட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் செய்த இந்த நடவடிக்கை, திருமணமான தம்பதிகளை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

ADVERTISEMENT

அதாவது, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் திட்டத்தை மத்தியப் பிரதேசத்தை ஆளும் பாஜக அரசு செயல்படுத்தி வருகின்றது. இந்த திட்டத்தின் கீழ் திருமணம் செய்யும் தம்பதியினருக்கும் பரிசுத் தொகையும், பொருள்களும் அரசுத் தரப்பில் வழங்கப்படும்.

அதன்படி, ஜாபுவா மாவட்டம் தண்டலாவில் அரசு தரப்பில் 296 பெண்களுக்கு திங்கள்கிழமை திருமணம் செய்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில், புதுமணத் தம்பதியினருக்கு அரசு வழக்கமாக அளிக்கும் பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டது.

மணமக்களுக்கு வழங்கப்பட்ட அலங்கார பொருள்களுடன் தேசிய சுகாதார ஆணையத்தின் லேபிள் ஒட்டப்பட்டு, குடும்பக்கட்டுப்பாட்டு லோகோவுடன் புதிய அறிமுகப் பெட்டகம் என்ற ஆணுறைப் பெட்டியும், மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் கருத்தடை மாத்திரைகளும் அதில் வைக்கப்பட்டுள்ளது.

 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தன்வி ஹூடா கூறுகையில், குடும்பக் கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வுக்காக கருத்தடை சாதனங்களை சுகாதாரத்துறை வழங்கப்பட்டது. இது தொடர்பாக எந்த புகாரும் வரவில்லை எனத் தெரிவித்தார்.

இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் இளைஞரணி தலைவர் விக்ராந்த், “அனைத்துக்கும் நேரம் மற்றும் இடம் உள்ளது. குடும்பக் கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வுக்கு நாங்கள் ஆதரவளிக்கிறோம். ஆனால், திருமண நிகழ்வில் கருத்தடை சாதனங்கள் வழங்கியது சரியானது அல்ல” எனத் தெரிவித்துள்ளார்.

மாநில அரசு நடத்திய திருமண நிகழ்வில் கருத்தடை சாதனங்கள் வழங்கப்பட்ட சம்பவம் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT