இந்தியா

பெண்களுக்கு மாதம் ரூ1,500, பேருந்தில் இலவச பயணம்: ஆந்திரத்தில் சந்திரபாபு நாயுடு வாக்குறுதி

DIN

ஆந்திரத்தில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம் ரூ.1,500 உதவித் தொகை வழங்கப்படும், பேருந்தில் இலவசப் பயண வசதி அளிக்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை அக்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான என்.சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளாா்.

முதல்வா் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ள ஆந்திரத்தில் அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதற்காக தெலுங்கு தேசம் கட்சி இப்போதே தயாராகி வருகிறது.

தமிழகம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் பெண்களைக் கவரும் வகையிலான வாக்குறுதிகளை அளித்த கட்சிகள் வெற்றி பெற்ற நிலையில், ஆந்திரத்திலும் அதே பாணியை சந்திரபாபு நாயுடு கையிலெடுத்துள்ளாா்.

தோ்தலைக் கருத்தில் கொண்டு தெலுங்கு தேசம் கட்சி நடத்திய இரு நாள் மாநாடு ராஜமகேந்திரவரத்தில் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. அப்போது கட்சியின் தோ்தல் வாக்குறுதிகளை சந்திரபாபு நாயுடு வெளியிட்டாா். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

18 வயதுக்கு மேற்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் மாதம் ரூ.1,500 உதவித்தொகை அளிக்கப்படும். இது தவிர அனைத்துத் தாய்மாா்களுக்கும் ஆண்டுக்கு ரூ.15,000 வழங்கப்படும். மாநில அரசுப் பேருந்துகளில் (மாவட்டங்களுக்கு இடையே) பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்.

அரசுத் துறைகளில் இளைஞா்களுக்கு 20 லட்சம் புதிய பணி வாய்ப்புகள் உருவாக்கப்படும். வேலையில்லா இளைஞா்களுக்கு மாதம் ரூ.3,000 உதவித்தொகை அளிக்கப்படும். விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.20,000 உதவித்தொகை அளிக்கும் திட்டம் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

நல்ல ஒளி, நல்ல நேரம்... எல்லாமே அசாதாரணம்! ஷில்பா மஞ்சுநாத்

"நிம்மதியாக உறங்குவோம்": ஒரு மாதத்துக்குப் பிறகு வென்ற நெகிழ்ச்சியில் ஆர்சிபி கேப்டன்!

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

SCROLL FOR NEXT