இந்தியா

தேசியவாத காங்கிரஸின் புதிய தலைவர் யார்? 

3rd May 2023 04:54 PM

ADVERTISEMENT

தேசியவாத காங்கிரஸின் புதிய தலைவர் யார் என்பது குறித்து அக்கட்சியினர் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக சரத் பவார் (82) செவ்வாய்க்கிழமை திடீரென அறிவித்தார். 63 ஆண்டுகள் நீண்ட அரசியல் பயணத்தில் இருந்து பின்வாங்குவதற்கான தேவை ஏற்பட்டுள்ளதால் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலக முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் பலம் வாய்ந்த பாஜகவுக்கு எதிராக உள்ள கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்த சரத் பவார், திடீரென கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது அவரது கட்சித் தொண்டர்கள் மத்தியில் மட்டுமல்லாமல், தேசிய அரசியலிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

சரத் பவாரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நூல் வெளியீட்டு நிகழ்ச்சி முடிந்த பிறகும், அந்த இடத்தில் இருந்து தொண்டர்கள் கலைந்து செல்ல மறுத்தனர்.
 பலர் தங்களின் கட்சிப் பொறுப்புகளை ராஜிநாமா செய்வதாக அறிவித்தனர். 

ADVERTISEMENT

இதையடுத்து, அவர்களிடம் மூத்த தலைவர் அஜீத் பவார் பேசுகையில், "கட்சித் தலைவராக நீடிக்க வேண்டும் என்ற தொண்டர்களின் வற்புறுத்தலை கருத்தில் கொண்டு, தனது முடிவை மறுபரிசீலனை செய்ய சரத் பவாருக்கு 2 அல்லது 3 நாள்கள் அவகாசம் வேண்டும்" என்று தெரிவித்தார்.

இந்நிலையில் சரத் பவாரின் அறிவிப்பையடுத்து, அக்கட்சியின் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, தேசியவாத காங்கிரஸின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க மும்பையில் உள்ள ஒய்.பி மையத்தில் ஆலோசனை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆலோசனையில் கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்றதாக தகவல் வெளியான நிலையில், தேசியவாத காங்கிரஸின் புதிய தலைவர் யார் என்பது குறித்து தகவல் விரைவில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT