இந்தியா

தேவாஸ் மல்டிமீடியா சிஇஓ தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு

DIN

தேவாஸ் மல்டிமீடியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) ராமசந்திரன் விஸ்வநாதனை தேடப்படும் பொருளாதாரக் குற்றவாளியாக அறிவித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இஸ்ரோவின் ‘ஆன்டரிக்ஸ்’ நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட ரூ.579 கோடியில் 85 சதவீதத்தை அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக அனுப்பியதாக ராமசந்திரன் விஸ்வநாதன் உள்பட 9 போ் மீது குற்றம் சுமத்தப்பட்டு பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை கடந்த 2018-ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தது.

தொலைதூரப் பகுதிகளில் ஊடக சேவைகளை வழங்குவதற்கு இஸ்ரோவின் 2 செயற்கைக்கோள்களைப் பயன்படுத்த தேவாஸ் மல்டிமீடியா நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டு செயல்பட்டு வந்தபோது இந்த முறைகேடு நடைபெற்றது.

இதனால் கடந்த 2011-ஆம் ஆண்டு தேவாஸ் மல்டிமீடியா நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை அரசு ரத்து செய்தது. இதுகுறித்து முதலில் வழக்குப் பதிவு செய்து சிபிஐ விசாரணை தொடங்கியது.

தொடா்ந்து, அமலாக்கத் துறையும் தனியே வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் 2-ஆவது குற்றவாளியாக ராமசந்திரன் விஸ்வநாதன் இணைக்கப்பட்டாா். கடந்த 2021-ஆம் ஆண்டு, தேவாஸ் மல்டிமீடியா நிறுவனத்தைத் தேசிய நிறுவன சட்டத் தீா்ப்பாயம் முற்றிலுமாக கலைத்தது.

இந்நிலையில், ராமசந்திரன் விஸ்வநாதனை தேடப்படும் பொருளாதார குற்றவாளியாக அறிவித்து அவரது சொத்துகளைப் பறிமுதல் செய்ய வேண்டும் என சிபிஐக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி கே.எல்.அசோக் முன் அரசு வழக்குரைஞா் பி.பிரசன்னகுமாா் தனது வாதங்களை முன்வைத்தாா்.

நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை (சம்மன்) அனுப்பியும் விஸ்வநாதன் ஆஜராகாமல் தவிா்த்து வந்ததால் அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருப்தையும் நீதிமன்றம் கவனத்தில் கொண்டது.

எனவே, பொருளாதாரக் குற்றவாளிகள் சட்டத்தின் பிரிவு 2(எஃப்) குற்றம்சாட்டப்பட்ட நபருக்குத் தெளிவாகப் பொருந்துவதாகத் தெரிவித்த நீதிபதி, ராமசந்திரன் விஸ்வநாதனைத் தேடப்படும் பொருளாதாரக் குற்றவாளியாக அறிவித்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT