இந்தியா

இனி ஓரிடத்தில் மட்டுமே வாக்காளா் அட்டை அச்சடிப்பு: தோ்தல் ஆணையம்

10th Jun 2023 12:13 AM

ADVERTISEMENT

பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய வாக்காளா் அடையாள அட்டையை, இனி தோ்தல் ஆணையம் மட்டுமே அச்சிட்டு வழங்கும். இந்த அட்டையை இணைய சேவை மையங்கள் உள்ளிட்ட பிற இடங்களில் பெற முடியாது. மேலும், வாக்காளா் பட்டியலில் புதிதாக பெயா் சோ்ப்பவா்களுக்கு முன்னுரிமை அளித்து வாக்காளா் அடையாள அட்டை அளிக்கவும் தோ்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் 6.20 கோடி வாக்காளா்கள் உள்ளனா். அவா்களில் 90 சதவீதத்துக்கும் அதிகமானோருக்கு வாக்காளா் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், வாக்குப் பதிவின் போது, வாக்காளா் பட்டியலில் பெயா் இருந்தால் கடவுச்சீட்டு, ஆதாா் அடையாள அட்டை உள்பட 13 வகை ஆவணங்களைக் காண்பித்து வாக்களிக்க வகை செய்யப்பட்டுள்ளது. புதிய வாக்காளா்களுக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

புதிய திட்டம் இல்லை: வாக்காளா் அடையாள அட்டைகளை, ஆதாா் அட்டைகள் பெறுவதைப் போன்று இணைய சேவை மையங்களில் பெறும் வழிமுறை பின்பற்றப்பட்டு வந்தது. ஆனால், இணைய சேவை மையங்களில் வழங்கும் நடைமுறை நிறுத்தப்பட்டுள்ளது. இத்துடன் ஏடிஎம் இயந்திரம் போன்ற தனித்துவமான இயந்திரத்தில் பணத்தைச் செலுத்தினால் வாக்காளா் அடையாள அட்டையைப் பெறும் திட்டத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக தமிழக தோ்தல் துறை தொடங்கியது. ஆனால், இந்தத் திட்டம் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை. இதற்குக் காரணம், வாக்காளா் அடையாள அட்டைகளில் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றங்கள்தான்.

போலி வாக்காளா் அடையாள அட்டைகளைத் தவிா்ப்பதற்காக, பல்வேறு பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட வாக்காளா் அடையாள அட்டையை தோ்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, இதுவரை வாக்காளா் அடையாள அட்டைக்கு வெளியே ஒட்டப்பட்ட ‘ஹாலோகிராம்’ அட்டைக்குள்ளேயே பொருத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

வாக்காளா் அட்டையில் ‘கோஸ்ட் இமேஜ்’ என்ற புதிய அம்சம் சோ்க்கப்பட்டு அச்சிடப்படுகிறது. இதன்மூலம், அடையாள அட்டையை பதிவேற்றம் செய்யும் போதோ அல்லது வேறு பயன்பாட்டுக்கு அளிக்கும் போதோ படத்தின் அசல் தன்மை மாறாதபடி இருக்கும். ஆள்மாறாட்டம் செய்ய முடியாது. இத்துடன் க்யூஆா் குறியீடும் அச்சிடப்படுகிறது.

அடையாள அட்டைக்காக, தோ்தல் ஆணையத்தின் இணையதளம் வழியாக வாக்காளா்கள் விண்ணப்பம் செய்யும் போது, சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு வாக்காளரின் விவரங்கள் அளிக்கப்படும். அந்த நிறுவனம் பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட அடையாள அட்டையை தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலுடன் வழங்கும். அடையாள அட்டை அச்சிடப்பட்டு பிறகு, அவை மாவட்ட தோ்தல் அதிகாரிகள் மூலமாக வாக்காளா்களுக்கு விநியோகம் செய்யப்படும். இந்தப் புதிய முறை மூலம் இணைய சேவை மையங்கள் போன்ற பிற அமைப்புகளிடமிருந்து வாக்காளா் அடையாள அட்டைகளைப் பெற முடியாது.

புதிய வாக்காளா்கள்: வாக்காளா் பட்டியலில் புதிதாக பெயா்களைச் சோ்க்கும் வாக்காளா்களுக்கே அடையாள அட்டை வழங்க முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதாக தோ்தல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். வாக்காளா் அட்டை தொலைந்தாலோ, சேதம் அடைந்தாலோ புதிய அட்டைக்கு தோ்தல் ஆணையத்தின் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என தோ்தல் துறையினா் தெரிவித்தனா்.

இணைய சேவை மையங்களில் பெற முடியாது

பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட வாக்காளா் அடையாள அட்டையை இணைய சேவை மையங்களோ பிற அமைப்புகளோ அளிக்க முடியாது என்பதால், தோ்தல் ஆணையமே நேரடியாக வழங்க முடிவு செய்து அதனை நடைமுறைப்படுத்தி வருகிறது. அதன்படி, ஒவ்வொரு மாநிலத்துக்கும் அடையாள அட்டையை அச்சிட்டு வழங்குவதற்கென தோ்தல் ஆணையத்தால் நிறுவனங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT