இந்தியா

ராஜீவ் காந்தியை ஒரு வாரம் முன் சங்கர மடம் எச்சரித்தது! நூலில் டி.என். சேஷன் தகவல்!!

10th Jun 2023 10:34 AM

ADVERTISEMENT

 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மரணம் தனக்கு தனிப்பட்ட இழப்பு என முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என். சேஷன் தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார். 

டி.என். சேஷன் கடந்த 2019ஆம் ஆண்டு மறைந்த நிலையில், கடந்த வாரம் அவரின் சுயசரிதை நூலான 'திரோத் தி புரோக்கன் கிளாஸ்' புத்தகம் வெளியானது.

அதில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மறைவுக்கு ஒருவாரம் முன்பு, ராஜீவ் காந்தி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என காஞ்சி சங்கர மடத்திலிருந்து எச்சரிக்கப்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ளார். 

ADVERTISEMENT

1991ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டபோது ஸ்ரீபெரும்புதூரில் குண்டு வெடிப்பு தாக்குதல் மூலம் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். 

புத்தகத்தில் இது குறித்து டி.என். சேஷன் குறிப்பிட்டுள்ளதாவது, 1991 மே 10ஆம் தேதி முற்பகல் ராஜீவ் காந்தியை தொடர்புகொண்டு தனிப்பட்ட முறையில் பேசினேன். அவரை எச்சரித்தேன். ஆனால், அதற்கு நான் இரு முறை இறக்கமாட்டேன் என சிரித்துக்கொண்டே அவர் பதிலளித்தார். திறந்தவெளி பிரசாரம் செய்வதை மறுபரிசீலனை செய்யுமாறு நான் மீண்டும் அவரைக் கேட்டுக்கொண்டேன் என புத்தகத்தில் எழுதியுள்ளார். 

நான்கு நாள்கள் கழித்து மே 14ஆம் தேதி, ராஜீவ் காந்தியை எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தி, காஞ்சி சங்கர மடத்திலிருந்து அழைப்பு வந்தது. நான் எச்சரித்தும் அவர் ஆபத்தை உணராமல் பிரசாரம் செய்கிறார் என பதிலளித்தேன். இது குறித்து உடனடியாக அவருக்கு தந்தி அனுப்பினேன். அது மே 17ஆம் தேதி அவரின் மேசைக்குச் சென்றது. ஆனால்,  அதைப் படிப்பதற்கு முன்பே மே 21ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். நான் மீண்டும் மிகுந்த துயரத்தில் ஆழ்ந்தேன். அவரின் இறுதிச் சடங்கில் பங்கேற்காமல், நாள் முழுவதும் வீட்டிலேயே அடைந்து கிடந்தேன் என புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். 

அப்போது பிரதமரின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த டி.என். சேஷன், சிறப்பு பாதுகாப்பு குழு சட்ட முன்வரைவை முழுவதுமாக தயார் செய்து தாக்கல் செய்தார். இந்த சட்டத்தின் படி பிரதமர் மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்கப்படும். முன்னாள் பிரதமர் மற்றும் அவரின் குடும்பத்துக்கும் இது பொருந்தும். ஆனால், ராஜீவ் காந்தி இந்த சட்டத்துக்கு மறுப்பு தெரிவித்தார். 

சிறப்பு பாதுகாப்பு குழு சட்டத்தில் ஒரு பிரிவு, பிரதமருக்கும் அவரின் குடும்பத்துக்கும் பாதுகாப்பு அளிக்கும் எனக் கூறுகிறது. இதில் முன்னாள் பிரதமர் மற்றும் குடும்பத்துக்கும் பாதுகாப்பு அளிக்க வழிவகை செய்ய வேண்டும் என ராஜீவ் காந்தியிடம் பரிந்துரைத்தேன். ஆனால் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார். சுயநலத்துடன் இதனை செய்துவிட்டதாக மக்கள் கருதுவார்கள் என நினைத்த ராஜீவ் காந்தி, பிரதமர் மற்றும் அவரின் குடும்பத்துக்கு மட்டும் பொருந்தும் வகையில் இச்சட்டத்தை இயற்றுமாறு அறிவுறுத்தினார். முன்னாள் பிரதமர் மற்றும் குடும்பத்துக்கு தேவையில்லை என கூறியதாக டி.என். சேஷன் சுயசரிதையில்  குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT