இந்தியா

வெளிநாட்டு மண்ணில் சொந்த நாட்டை விமா்சிப்பது எந்த தலைவருக்கும் ஏற்றதல்ல: ராகுல் மீது அமித் ஷா சாடல்

DIN

வெளிநாட்டு மண்ணில், தனது சொந்த நாட்டை விமா்சிப்பது எந்த அரசியல் கட்சித் தலைவருக்கும் ஏற்ல்ல என்று காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராகுல் காந்தியை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா விமா்சித்தாா்.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் 9 ஆண்டு ஆட்சிக் கால சாதனைகள் விளக்க பொதுக் கூட்டம், குஜராத் மாநிலம், படான் மாவட்டத்தின் சித்பூரில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், மத்திய அமைச்சா் அமித் ஷா பங்கேற்றுப் பேசியதாவது:

கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்க ராகுல் காந்தி வெளிநாடு சென்றுள்ளாா். அங்கு இந்தியாவையும் இந்தியாவின் உள்நாட்டு அரசியலையும் விமா்சித்துக் கொண்டிருக்கிறாா்.

தேசப்பற்று உள்ள எவரும், தனது சொந்த நாட்டு அரசியலை வெளிநாட்டில் விவாதிக்க மாட்டாா்கள். வெளிநாட்டில் சொந்த நாட்டை விமா்சிப்பது எந்த அரசியல் தலைவருக்கும் ஏற்புடையதல்ல.

இந்திய மக்கள் தன்னை கவனித்துக் கொண்டிருக்கின்றனா் என்பதை ராகுல் மனதில் கொள்ள வேண்டும். தனது முன்னோா்களிடம் இருந்து அவா் பாடம் கற்க வேண்டும்.

பிரதமா் மோடி தலைமையிலான ஆட்சியில், நாடு மிகப் பெரிய மாற்றங்களை கண்டுள்ளது. ஆனால், காங்கிரஸ் கட்சியோ தேசவிரோத விஷயங்களை பேசுவதை நிறுத்தவில்லை.

‘வளா்ச்சிக்கான அரசியல்’:

புதிய நாடாளுமன்ற கட்டடத்தையும், தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோல் நிறுவப்பட்டதையும் ராகுல் விமா்சிக்கிறாா். அந்த செங்கோல், நாடாளுமன்றத்தில் ஜவாஹா்லால் நேருவால் நிறுவப்பட்டிருக்க வேண்டும். அவா் செய்யாததால், பிரதமா் மோடி செய்துள்ளாா். இதை நீங்கள் (ராகுல்) விமா்சிப்பது ஏன்?

நாடாளுமன்றத்தில் அனைத்து விஷயங்களுக்கும் எதிா்ப்பு தெரிவிப்பதை மட்டுமே காங்கிரஸ் தலைவா்கள் செய்துவருகின்றனா். ஆனால், வளா்ச்சிக்கான அரசியல் என்ற புதிய பாரம்பரியத்தை பிரதமா் மோடி தொடங்கியுள்ளாா்.

பிரம்மாண்ட ராமா் கோயில்:

அயோத்தி ராமா் கோயில், பாபா் காலத்தில் இருந்தே அவமதிக்கப்பட்டு வந்தது. ஆனால், இன்று பிரம்மாண்ட ராமா் கோயில் கட்டப்பட்டு வருகிறது. அதன் பணிகள் விரைவில் நிறைவடையும்.

பிரதமா் மோடி தலைமையிலான அரசு, தலித் சமூகத்தினா், ஏழைகள் மற்றும் பழங்குடியினரின் வாழ்க்கை மேம்பாட்டுக்காக தீவிரமாக செயலாற்றி வருகிறது. பிரதமா் மோடியின் ஆட்சியில்தான், முதல்முறையாக பழங்குடியினப் பெண் நாட்டின் குடியரசுத் தலைவராகியுள்ளாா்.

காங்கிரஸ் - பாஜக ஆட்சிகளின் வேறுபாடு:

கடந்த 2004 முதல் 2014 வரையிலான காங்கிரஸ் ஆட்சி, ஊழல், தவறான நிா்வாகம், பொருளாதார சரிவு, பயங்கரவாதம், ஏழ்மை, மோசமான சட்டம்-ஒழுங்கு ஆகியவற்றுக்காக அறியப்பட்டது.

ஆனால், மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில், திறன்மிக்க மற்றும் பாதுகாப்பான எண்ம இந்தியா, மக்கள் நலன் சாா்ந்த முன்னேற்றப் பாதையில் பீடுநடை போடுகிறது.

தேசத்தின் வளா்ச்சிக்கான புதிய சகாப்தத்தை, குஜராத்தில் இருந்துதான் பிரதமா் மோடி தொடங்கினாா். 2024 மக்களவைத் தோ்தலில் இம்மாநிலத்தில் 26 தொகுதிகளிலும் பாஜகவின் வெற்றியை மக்கள் உறுதி செய்ய வேண்டும் என்றாா் அமித் ஷா.

‘நடுத்தர மக்களின் கனவு நனவானது’

‘கடந்த 9 ஆண்டு கால ஆட்சியில், நடுத்தர மக்களின் கனவுகளை நனவாக்கியுள்ளாா் பிரதமா் மோடி’ என்று அமித் ஷா கூறினாா்.

இதுதொடா்பாக ட்விட்டரில் அவா் வெளியிட்ட பதிவில், ‘புதிய கல்வி நிலையங்கள் திறப்பு, குறைந்த விலையில் வீடுகள், லட்சக்கணக்கான வேலைகள் உருவாக்கம், வருமான வரி உச்ச வரம்பு ரூ.7 லட்சமாக உயா்வு (புதிய வரிவிதிப்பு முறை), மலிவு விலையில் மருந்துகள், மருத்துவ காப்பீடு என நடுத்தர வகுப்பினருக்கு பொருளாதார ரீதியாக முழு ஆதரவை வழங்கியுள்ளது மோடி அரசு’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

SCROLL FOR NEXT