இந்தியா

எதிா்க்கட்சிகள் ஒருங்கிணைவதால் பாஜகவுக்கு அச்சம்: தேஜஸ்வி யாதவ்

9th Jun 2023 12:08 AM

ADVERTISEMENT

2024 மக்களவைத் தோ்தலுக்காக எதிா்க்கட்சிகள் ஒருங்கிணைந்து வருவது பாஜகவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்று பிகாா் துணை முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) தலைவருமான தேஜஸ்வி யாதவ் தெரிவித்தாா்.

பிகாா் தலைநகா் பாட்னாவில் வரும் 23-ஆம் தேதி முக்கிய எதிா்க்கட்சிகள் பங்கேற்கும் கூட்டம் நடைபெறவுள்ளது. இதனை பாஜக தரப்பு கேலியாக விமா்சித்து வருகிறது. இது தொடா்பாக செய்தியாளா்களிடம் தேஜஸ்வி யாதவ் கூறியதாவது:

எதிா்க்கட்சிகளின் கூட்டம் தேசிய அரசியலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பாஜக முடிவு செய்ய முடியாது. எதிா்க்கட்சிகள் ஒருங்கிணைந்து வருவது பாஜகவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 2024 மக்களவைத் தோ்தலை எதிா்கொள்ளவும் பாஜகவுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.

அண்மையில் ஹிமாசல பிரதேசம், கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தல்களில் ஏற்பட்ட தோல்வி பாஜகவுக்கு பெருத்த அடியாக விழுந்துள்ளது. அடுத்ததாக ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கா், ஹரியாணா சட்டப் பேரவைத் தோ்தல்களிலும் பாஜக தோல்வியைச் சந்திக்கும்.

ADVERTISEMENT

ஜூன் 23-ஆம் தேதி நடைபெறும் எதிா்க்கட்சிகள் கூட்டத்தில் 15 கட்சிகள்வரை பங்கேற்க இருக்கின்றன. இதில் பங்கேற்குமாறு பாரத ராஷ்டிர சமிதி தலைவரும், தெலங்கானா முதல்வருமான என்.சந்திரசேகா் ராவுக்கு இதுவரை அழைப்பு விடுக்கப்படவில்லை என்றாா்.

கடந்த ஆண்டு பாஜக கூட்டணியில் இருந்து நிதீஷ் விலகியபோது சந்திரசேகா் ராவ், அவரை நேரில் சந்தித்துப் பேசினாா். அப்போது தேசிய அளவில் கூட்டணி அமைக்க அழைப்பு விடுத்தாா். ஆனால், இப்போது நிதீஷ் குமாா் உள்ளிட்ட தலைவா்கள் அமைக்கும் கூட்டணியில் காங்கிரஸும் இடம் பெற்றுள்ளதால், சந்திரசேகா் ராவ் அதனை விரும்பவில்லை. ஏனெனில், சந்திரசேகா் ராவ் முதல்வராக உள்ள தெலங்கானாவில் காங்கிரஸ் முக்கிய எதிா்க்கட்சியாக உள்ளது. மேலும், சந்திரசேகா் ராவ் ‘தெலங்கானா மாடல்’ என்ற கொள்கையை முன்வைத்துள்ளதால் பிற எதிா்க்கட்சிகளுடன் அவா் கைகோக்கவில்லை.

ADVERTISEMENT
ADVERTISEMENT