இந்தியா

ஒடிசா ரயில் விபத்தின் கோர முகம்.. மாறிப்போகும் உடல்கள்.. பதறும் உறவுகள்

8th Jun 2023 03:04 PM

ADVERTISEMENT


புவனேஸ்வரம்: ஒடிசாவில் கடந்த ரயில் விபத்தில் சிக்கி தங்களது குடும்ப உறுப்பினர்களை இழந்த துக்கத்தைக் காட்டிலும், அவர்களது உடல்கள் கூட கிடைக்காமல் தவிக்கும் குடும்பங்களின் துயரம் சொல்லில் மாளாது.

பல உடல்கள் அவர்களது உறவினர்களால் அடையாளம் காணப்படுவதற்கு முன்பே, வேறொரு குடும்பத்தினர் அடையாளம் காட்டி எடுத்துச் சென்றிருப்பதை அறியும் போது அவர்களது மனம் படும்பாடு மிக மோசம்.

பலரும் தங்களது உறவினர்களின் உடல்களைத் தேடி மருத்துவமனைக்கு வரும் போது, உடல்கள் கடுமையாக சேதடைந்திருக்கும் நிலையில், அவர்கள் அணிந்திருந்த ஆடையின் நிறம் உள்ளிட்ட சிலவற்றின் அடிப்படையில்தான் உடல்களை அடையாளம் காணும் நிலை உள்ளது. இதனால், பச்சை ஆடை அணிந்திருந்த ஒருவரின் உடலை மற்றொரு குடும்பத்தினர் எடுத்துச் சென்று இறுதிச் சடங்கு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஜார்கண்ட் மற்றும் பிகாரைச் சேர்ந்த இரண்டு பேர் பச்சை நிற சட்டை அணிந்து கோரமண்டல் விரைவு ரயிலில் பயணித்து பலியாகிவிட்டனர். அதில் ஒருவரது குடும்பத்தினர் வந்து, மற்றொருவரின் உடலை அடையாளம் காட்டி எடுத்துச் சென்றுவிட்டனர்.

ADVERTISEMENT

தற்போது, அந்த உடலுக்குச் சொந்தமானவர்களின் குடும்பத்தினர், பலியானவர்களின் புகைப்படங்களைப் பார்த்து, அதில் அவர்களது குடும்ப உறுப்பினரின் புகைப்படத்தைக் காட்டி அதுதான் தங்கள் பிள்ளை என்று சொல்ல, அதை ஏற்கனவே ஒரு குடும்பம் எடுத்துச் சென்றுவிட்டதை அறிந்து வேதனையடைந்துள்ளனர்.

இதனால் பிரச்னையை சமாளிக்க, இரண்டு உறவினர்களின் மரபணு சோதனையை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதுபோல, ஜார்கண்டைச் சேர்ந்த ஹன்ஸ்ராஜின் குடும்பத்தினர் மருத்துவமனை மருத்துவமனையாகச் சென்று எங்கும் அவர் இல்லாததால், கடைசியில் பலியானவர்களின் புகைப்படங்களைப் பார்த்து அந்த உடலைக் கேட்டால், அந்த உடலை பிகாரைச் சேர்ந்த ஒரு குடும்பம் தங்களது பிள்ளை ரமேஷ் முர்மு என்று அடையாளம் காட்டி எடுத்துச் சென்றுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேற்குவங்கத்தைச் சேர்ந்த சிவகந்த ராய், தனது 22 வயது மகனின் உடலை பிகாரைச் சேர்ந்த ஒரு குடும்பம் எடுத்துச் சென்றுவிட்டது குறித்து அறிந்து கதறுகிறார். உடல்களை ஒப்படைக்கும் முன் அதற்குரிய நடைமுறைகளை பின்பற்ற மாட்டீர்களா என உணர்ச்சியோடு அதிகாரிகளிடம் சண்டையிடுகிறார்கள்.

பல உடல்கள் சின்னாபின்னமாகி அடையாளம் காண முடியாததே இந்த அவலத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

மேலும், இதுபோன்ற சம்பவங்களால், மோசடியாக சிலர் நிவாரணத் தொகையை பெற்றுக்கொள்ள நேரிடும் என்ற சிக்கலும் எழுந்துள்ளது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT