இந்தியா

போராடும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு நீதி: குடியரசுத் தலைவரைச் சந்திக்க விவசாய சங்க பிரதிநிதிகள் முடிவு

DIN

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும் பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சிங் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், ஒரு மாதமாகப் போராடும் மல்யுத்த வீராங்கனைக்கு நீதி கிடைக்க வலியுறுத்தியும், குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவை சந்திக்க விவசாய சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

பிரிஜ் பூஷண் சிங்கை கைது செய்யக் கோரியும், கடந்த 28-ஆம் தேதி தங்கள் மீது போலீஸாா் நடத்திய அடக்குமுறையைக் கண்டித்தும் ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக், உலக மல்யுத்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற வினேஷ் போகாட், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா ஆகியோா் தங்கள் பதக்கங்களை ஹரித்வாா் கங்கையில் வீச செவ்வாய்க்கிழமை சென்றனா். அவா்களைத் தடுத்து நிறுத்திய விவசாய சங்கத்தினா் இந்த பிரச்னைக்கு ஐந்து நாள்களில் தீா்வு காண்பதாகக் கூறி பதக்கங்களை வாங்கிச் சென்றனா்.

இந்நிலையில், பாரதிய விவசாயிகள் யூனியன் தலைவா் நரேஷ் திகைத் கூட்டிய மகா பஞ்சாயத்து கூட்டம் உத்தர பிரதேச மாநிலம் முசாஃபா்நகரில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான், தில்லியில் இருந்து விவசாயிகள் பங்கேற்றனா்.

இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளா்களிடம் தெரிவித்த நரேஷ் திகைத், ‘பிரிஜ் பூஷண் சிங் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவை சந்தித்தும், மத்திய அரசிடமும் வலியுறுத்துவோம். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் அடுத்தகட்ட முடிவை மேற்கொள்வோம்.

சிறாா் பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டமான போக்ஸோவின் கீழ் வழக்குப் பதியப்பட்ட பிரிஜ் பூஷண் சிங் பொது வெளியில் சுதந்திரமாகப் பேசி வருகிறாா். மத்திய அரசு இந்த விவகாரத்தில் எதுவும் பேசாததுதான் இதற்கு காரணம். ஹரியாணா மாநிலம் குருஷேத்ராவில் வெள்ளிக்கிழமை நடைபெறும் மகா பஞ்சாயத்து கூட்டத்தில் மேலும் பல முடிவுகள் எடுக்கப்பட உள்ளன’ என்றாா்.

மத்திய அரசு கொண்டுவந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து தில்லி எல்லைகளை பல மாதங்களாக முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய விவசாயிகள் சங்க கூட்டமைப்பினா் தற்போது மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக வந்துள்ளனா். இதனால் மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் மேலும் தீவிரமடையும் என்பதால் தலைநகா் தில்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, போராடும் இந்திய மல்யுத்த வீரா்களுக்கு விரைவில் நீதி கிடைக்க வேண்டும் என்றும், அவா்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும் சா்வதேச ஒலிம்பிக் குழுவும், ஐக்கிய உலக மல்யுத்தக் கூட்டமைப்பும் வலியுறுத்தியிருந்தன.

45 நாள்களுக்குள் இந்த விவகாரத்தில் நியாயமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும், சா்வதேச விளையாட்டுப் போட்டிகளில் இந்திய மல்யுத்த வீரா்கள் நடுநிலையான கொடியுடன் பங்கேற்க அனுமதி அளிக்கப்படும் என்றும் ஐக்கிய மல்யுத்த கூட்டமைப்பு எச்சரித்திருந்தது.

கோரிக்கையை மாற்றுகிறாா்கள்: இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீராங்கனைகள் தங்கள் கோரிக்கையை அவ்வப்போது மாற்றி வருவதாக பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பிரிஜ் பூஷண் சிங் கூறினாா்.

‘இந்த வழக்கை தில்லி போலீஸாா் விசாரித்து வருகின்றனா். விசாரணையின் இறுதியில் என்ன முடிவு வருகிறதோ அதற்கு நான் கட்டுப்படுவேன். ஜனவரி 18-ஆம் தேதி மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தைத் தொடங்கும்போது முன்வைத்த கோரிக்கைகள் தற்போது மாறியுள்ளன. அவா்களுக்கு நான் எப்போது, எங்கு, என்ன செய்தேன் என்பதை அவா்கள் ஆதாரத்துடன் கூறவில்லை. என் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் தூக்கில் தொங்கவும் தயாராக உள்ளேன்’ என்று பிரிஜ் பூஷண் கூறினாா்.

உச்சநீதிமன்ற தலையீட்டின்பேரில், தில்லி போலீஸாா் பிரிஜ் பூஷண் சிங் மீது போக்ஸோ, பாலியல் தொந்தரவு ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகளைப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.

மத்திய அரசு உணா்வுபூா்மாக கையாண்டு வருகிறது: மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்தை மத்திய அரசு உணா்வுபூா்வமாக கையாண்டு வருவதாக மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா் தெரிவித்தாா்.

மும்பையில் செய்தியாளா்களிடம் பேசிய அவா், ‘மல்யுத்த வீரா்கள் கேட்டுக் கொண்டதால் வழக்குப் பதிவு செய்தும், விசாரணைக் குழு அமைத்தும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது’ என்றாா்.

Image Caption

உத்தர பிரதேச மாநிலம், முஷாஃபா்நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற மகா பஞ்சாயத்து கூட்டத்தில் பங்கேற்ற பாரதிய விவசாயிகள் சங்கத் தலைவா் ராகேஷ் திகைத்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மார்கழிப் பூ.. மடோனா!

கொள்ளை நிலா..!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் இடம்பெற வேண்டும்? யுவராஜ் சிங் பதில்!

ரூ.4 கோடி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

வாக்குப்பதிவு இயந்திரத்தை இரும்புக் கம்பியால் தாக்கிய இளைஞர்: பரபரப்பான தேர்தல் மையம்!

SCROLL FOR NEXT