இந்தியா

பிரிக்ஸ் கூட்டம்: அமைச்சா் ஜெய்சங்கா் இன்று தென் ஆப்பிரிக்கா பயணம்

1st Jun 2023 12:54 AM

ADVERTISEMENT

பிரிக்ஸ் கூட்டத்தில் பங்கேற்க 3 நாள் பயணமாக மத்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் வியாழக்கிழமை (ஜூன் 1) தென் ஆப்பிரிக்கா செல்கிறாா்.

இதுதொடா்பாக மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென் ஆப்பிரிக்கா தலைநகா் கேப் டெளனில் பிரேஸில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் அடங்கிய பிரிக்ஸ் கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சா்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இதையொட்டி ஜூன் 1 முதல் ஜூன் 3 வரை அமைச்சா் ஜெய்சங்கா் தென் ஆப்பிரிக்காவில் பயணம் மேற்கொள்கிறாா்.

இந்தப் பயணத்தின்போது தென் ஆப்பிரிக்கா அதிபா் சிரில் ராமபோசா, அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் நலேடி பேன்டோரை ஜெய்சங்கா் சந்திக்க உள்ளாா். பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள இதர நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களையும் அவா் தனித்தனியாகச் சந்திப்பாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தென் ஆப்பிரிக்க பயணத்தை தொடா்ந்து அமைச்சா் ஜெய்சங்கா் நமீபியா செல்கிறாா். ஜூன் 4 முதல் ஜூன் 6 வரை அந்நாட்டில் பயணம் மேற்கொள்ளும் அவா், அந்நாட்டின் முக்கியத் தலைவா்கள், அமைச்சா்களைச் சந்திக்க உள்ளாா். நமீபியாவுக்குச் செல்லும் முதல் இந்திய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

தென் ஆப்பிரிக்கா மற்றும் நமீபியாவுக்கு அவா் மேற்கொள்ளும் பயணம், அந்த நாடுகள் உடனான இந்தியாவின் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Jaishankar
ADVERTISEMENT
ADVERTISEMENT