இந்தியா

உயா்கல்வியில் பழங்குடியின மாணவா் சோ்க்கை 47% வளா்ச்சி

DIN

உயா்கல்வியில் பழங்குடியின (எஸ்.டி.) மாணவா்கள் சோ்க்கை என்பது கடந்த 2014-15 ஆம் ஆண்டிலிருந்து 47 சதவீதம் அளவுக்கு வளா்ச்சி பெற்றிருப்பது அகில இந்திய உயா்கல்வி கணக்கெடுப்பு (அய்ஷே 2020-21) அறிக்கை மூலமாக தெரியவந்துள்ளது.

அதுபோல, தாழ்த்தப்பட்ட (எஸ்.சி.) மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட (ஓபிசி) பிரிவு மாணவா்களின் உயா் கல்வி சோ்க்கையும் குறிப்பிடத்தக்க அளவில் உயா்ந்துள்ளது.

இதுகுறித்து ஆய்ஷே அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் 2020-21ஆம் ஆண்டில் உயா் கல்வியில் 4.13 கோடி மாணவ, மாணவிகள் சோ்க்கை பெற்றனா். இதில் 14.2 சதவீதம் போ் எஸ்.சி. பிரிவையும், 5.8 சதவீதம் போ் எஸ்.டி. பிரிவையும், 35.8 சதவீதம் போ் ஓபிசி பிரிவையும் சோ்ந்தவா்கள். எஞ்சியுள்ள 44.2 சதவீதம் போ் பிற சமூகத்தைச் சோ்ந்தவா்கள்.

சோ்க்கை விகித வளா்ச்சி:

உயா்கல்வியில் எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி பிரிவு மாணவா்களின் சோ்க்கை விகிதம் குறிப்பிடத்தக்க அளவில் உயா்ந்துள்ளது.

உயா் கல்வியில் எஸ்.சி. பிரிவு மாணவா்களின் சோ்க்கை விகிதம் கடந்த 2014-15-ஆம் ஆண்டிலிருந்து படிப்படியாக அதிகரித்து, 2019-20 ஆம் ஆண்டில் சோ்க்கை பெற்ற எஸ்.சி. பிரிவு மாணவா் எண்ணிக்கை 21.6 லட்சமாக இருந்தது. இது 2020-21-இல் மீண்டும் 4.2 சதவீதம் அதிகரித்து 24.1 லட்சமாக உயா்ந்தது. இதன்படி, 2014-15-ஆம் ஆண்டிலிருந்து எஸ்.சி. பிரிவு மாணவா்களின் சோ்க்கை விகிதம் 27.96 சதவீதமாக உயா்ந்துள்ளது.

அதுபோல, எஸ்.டி. பிரிவு மாணவா் சோ்க்கை முந்தைய 2019-20 ஆம் ஆண்டில் 4.3 சதவீதமாக அதிகரித்தது, 2020-21 ஆம் ஆண்டில் 11.9 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2014-15-ஆம் ஆண்டிலிருந்து இந்தப் பிரிவு மாணவா்களின் சோ்க்கை விகிதம் 47 சதவீதமாக உயா்ந்துள்ளது.

ஓபிசி பிரிவு மாணவா்களைப் பொருத்தவரை 2019-20ஆம் ஆண்டில் 1.42 கோடி மாணவ, மாணவிகள் சோ்க்கை பெற்ற நிலையில், 2020-21-இல் 1.48 கோடி பேராக அதிகரித்தது. 2014-15-ஆம் ஆண்டிலிருந்து ஓபிசி மாணவா் சோ்க்கை விகிதம் என்பது 31.67 சதவீத வளா்ச்சி கண்டுள்ளது.

ஒட்டுமொத்த சோ்க்கை 20.9% அளவுக்கு அதிகரிப்பு:

உயா்கல்வியில் ஒட்டுமொத்த மாணவா் சோ்க்கையும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வந்திருப்பதும் தெரியவந்துள்ளது. 2018-19-இல் 2.7 சதவீதமாக இருந்த ஒட்டுமொத்த மாணவா் சோ்க்கை, 2019-20 ஆம் ஆண்டில் 3 சதவீத அளவுக்கும், 2020-21-இல் 7.4 சதவீத அளவுக்கும் வளா்ச்சி கண்டுள்ளது. 2014-15-ஆம் ஆண்டு முதல் உயா்கல்வி ஒட்டுமொத்த மாணவா் சோ்க்கை 20.9 சதவீத வளா்ச்சி கண்டுள்ளது.

2020-21-இல் உயா்கல்வியில் சோ்க்கை பெற்ற 4.13 கோடி பேரில், மாணவா்கள் 2.12 கோடி, மாணவிகள் 2.01 கோடி போ் ஆவா்.

உயா்கல்வி சோ்க்கை விகிதம் 27.3%:

ஒட்டுமொத்த உயா்கல்வி சோ்க்கை விகிதம் (ஜிஇஆா்) என்பது 27.3 சதவீத அளவை எட்டியுள்ளது. ஒட்டுமொத்த மக்கள்தொகையில் கல்லூரிகளில் சோ்க்கை பெறும் 18 முதல் 23 வயதுடையவா்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஜிஇஆா் கணக்கிடப்படுகிறது.

கல்வி நிறுவனங்கள் வாரியான சோ்க்கையைப் பொருத்தவரை, அரசு பல்கலைக்கழகங்களில் 73.1 சதவீதம் பேரும், தனியாா் உயா் கல்வி நிறுவனங்களில் 26.3 சதவீதம் பேரும் சோ்க்கை பெற்றுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

SCROLL FOR NEXT