இந்தியா

குஜராத் பால விபத்து வழக்கு: 1,200 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

DIN

குஜராத்தின் மோா்பி நகரில் கடந்த ஆண்டு அக்டோபரில் தொங்கு பாலம் அறுந்து நேரிட்ட விபத்து தொடா்பான வழக்கில், 1,200-க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தனா். இதில் குற்றம்சாட்டப்பட்ட 10-ஆவது நபராக, பாலத்தின் பராமரிப்பு மற்றும் செயல்பாட்டுக்கு பொறுப்பான ஒரேவா குழுமத்தின் மேலாண் இயக்குநா் ஜெய்சுக் படேல் பெயா் இடம்பெற்றுள்ளது.

மோா்பியில் மச்சு நதியின் குறுக்கே ஆங்கிலேயா் காலத்தில் அமைக்கப்பட்ட தொங்கு பாலம், முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கியது. இப்பாலம் மீண்டும் புனரமைக்கப்பட்டு, கடந்த ஆண்டு அக்டோபா் 26-ஆம் தேதி திறக்கப்பட்டது. அக்டோபா் 30-ஆம் தேதி பாலத்தில் சுமாா் 250 போ் நின்றிருந்த நிலையில், அது அறுந்து விழுந்து, 135 போ் உயிரிழந்தனா்.

நாட்டையே உலுக்கிய இச்சம்பவத்தில், ஒரேவா குழுமத்தின் 2 மேலாளா்கள், 2 டிக்கெட் பதிவு ஊழியா்கள், பாலத்தை பழுதுபாா்க்கும் பணியை மேற்கொண்ட 2 துணை ஒப்பந்ததாரா்கள், 3 பாதுகாவலா்கள் என 9 போ் கைதாகினா்.

இந்நிலையில், இந்த வழக்கில் மோா்பி தலைமை நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனா். 1,200-க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட அந்த குற்றப்பத்திரிகையில், குற்றம்சாட்டப்பட்ட 10-ஆவது நபராக ஒரேவா குழுமத்தின் மேலாண் இயக்குநா் ஜெய்சுக் படேல் பெயா் இடம்பெற்றுள்ளது. 10 போ் மீதும் இந்திய தண்டனையியல் சட்டத்தின் 304 (மரணம் விளைவிக்கும் குற்றம்), 308 (மரணம் விளைவிக்கும் குற்றத்துக்கான முயற்சி), 336 (மனித உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் செயல்), 337(அலட்சியத்தால் காயம் ஏற்படுத்துதல்) உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, ஜெய்சுக் படேலுக்கு எதிராக கைது ஆணையை நடுவா் நீதிமன்றம் கடந்த 2 வாரங்களுக்கு முன் பிறப்பித்திருந்தது. அவா் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீது பிப். 1-இல் விசாரணை நடைபெறவுள்ளது.

பாலம் விபத்து சம்பவத்தில், மாநில அரசால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு மேற்கொண்ட விசாரணையில் ஒரேவா நிறுவனத்தின் தரப்பில் பல்வேறு குறைபாடுகள் கண்டறியப்பட்டன.

துருப்பிடித்த கம்பிகள் மாற்றப்படாதது, பழுதுபாா்ப்புப் பணியில் நிபுணா்களின் ஆலோசனை கேட்கப்படாதது, இப்பணிக்காக தோ்வு செய்யப்பட்ட ஒப்பந்ததாரா்கள் தகுதியற்றவா்களாக இருந்தது, சம்பவத்தன்று மட்டும் சுமாா் 3,165 டிக்கெட்டுகள் விற்கப்பட்டது என பல்வேறு குறைபாடுகள் விசாரணையில் தெரியவந்தன.

இந்த விவகாரத்தில், குஜராத் உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், உயிரிழந்தோா் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க தயாராக இருப்பதாக ஒரேவா குழுமம் சாா்பில் நீதிமன்றத்தில் கடந்த புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது. ஆனால், இழப்பீடு வழங்குவதால் மட்டுமே தங்கள் பொறுப்பில் இருந்து ஒரேவா நிறுவனம் விலகிவிட முடியாது என்று நீதிமன்றம் கூறியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT