இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மாதவரம்-சிறுசேரி வரை 3-வது வழித்தடத்தில் மாதவரம் பால்பண்ணை மற்றும் பசுமை வழிச்சாலையில் சுரங்கப்பாதை பணிகள் தீவிரமடைந்துள்ளன.
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், ரூ.63,246 கோடி மதிப்பில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. மாதவரம்-சிறுசேரி சிப்காட் வரை 3-வது வழித்தடம், கலங்கரைவிளக்கம்-பூந்தமல்லி வரை 4-வது வழித்தடம், மாதவரம்-சோழிங்கநல்லூா் வரை 5-வது வழித்தடம் ஆகிய 3 வழித்தடங்களில் பல்வேறுஇடங்களில் பணிகள் நடைபெறுகின்றன.
இந்நிலையில் மாதவரம்-சிறுசேரி வழித்தடத்தில் மாதவரம், பசுமைவழிச் சாலையில் சுரங்கப்பாதை பணிகள் தீவிரமடைந்துள்ளன.
மாதவரம் பால்பண்ணை அருகில் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணி 13.10.2022-இல் தொடங்கியது. இதன் பணி வேகமாக நடந்து வருகிறது. மாதவரம் பால் பண்ணை-மாதவரம் நெடுஞ்சாலை வரையிலான 1,2, 3-ஆவது சுரங்கங்கள் தோண்டும் பணிகள் நிறைவடைந்துள்ளன.
மாதவரம் பால் பண்ணையில் இருந்து வேணுகோபால் நகா் மெட்ரோ வரையிலான 4-வது சுரங்கம் தோண்டும் இயந்திரம் ஷசோ்வராயன்’ சுரங்கம் தோண்டப்படவுள்ளது .
சேத்துப்பட்டு ஏரி பகுதியில் இருந்து நுங்கம்பாக்கம் வரை சுரங்கப்பாதை பணி விரைவில் தொடங்க உள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்நிலையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில்திட்ட வழித்தடம் தொடா்பாக புதுப்பிக்கப்பட்ட வரைபடம் மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதில், 3 வழித்தடங்களில் மொத்த நீளம் 118.9 கி.மீ. இருந்து116.1 கி.மீ. தொலைவாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், நிலையங்கள்எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது. 128 நிலையங்களில் இருந்து119 ஆக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் 3-வது வழித்தடத்தில் தபால்பெட்டி, டவுட்டன் சந்திப்பு, புனித ஜோசப் கல்லூரி ஆகிய 3 நிலையங்களும், 4-வது வழித்தடத்தில் பட்டினப்பாக்கம், நடேசன் பூங்கா, மீனாட்சி கல்லூரி ஆகிய 3 நிலையங்களும், 5-வது வழித்தடத்தில் காளியம்மன் கோவில், போரூா் சந்திப்பு, மேடவாக்கம் ஆகிய 3 நிலையங்களும் என 9 நிலையங்கள் நீக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.