இந்தியா

கர்ப்பிணியை தோளில் சுமந்து சென்று காப்பாற்றிய ராணுவ வீரர்கள்!

7th Feb 2023 02:02 PM

ADVERTISEMENT

காஷ்மீரில் நிலவும் கடும் பனிப் பொழிவால் சாலைகள் மூடிய நிலையில், பிரசவ வலி ஏற்பட்ட கர்ப்பிணி பெண்ணை தோளில் சுமந்து சென்று ராணுவ வீரர்கள் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு - காஷ்மீரில் பொழியும் கடுமையான பனியால் கடந்த சில நாள்களாகவே பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து தடைப்பட்டு இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.

இந்நிலையில், காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள குப்வாரா மாவட்டத்திலிருந்து நேற்று காலை 11 மணியளவில் ராணுவ மையத்திற்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில், பதகேத் என்ற கிராமத்தில் ஒரு பெண் பிரசவ வலியால் துடிப்பதாகவும், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் அவரை காப்பாற்ற உதவுமாறும் கேட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, பள்ளத்தாக்கில் உள்ள கிராமத்திற்கு விரைந்த ராணுவ வீரர்கள் ஆபத்தான நிலையில் இருந்த கர்ப்பிணி பெண்ணை 5 கி.மீ. தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு தோளில் சுமந்து செல்ல முடிவெடுத்தனர்.

ADVERTISEMENT

இதையும் படிக்க | சென்னையில் மீண்டும் டிராம் ரயில்கள்?

அந்த பெண்ணை ராணுவ வீரர்கள் சுமந்து சென்ற நிலையில், சுமோ என்ற இடத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ராணுவ வீரர்கள் விரைந்து உதவியதால் தாயும், சேயும் காப்பாற்றப்பட்டு நலமாக இருப்பதாக கிராம மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். மேலும், ராணுவ வீரர்களின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT