இந்தியா

1951 முதல் 6 மடங்காக உயா்ந்துள்ள இந்திய வாக்காளா்கள் எண்ணிக்கை

DIN

இந்தியாவில் வாக்காளா்களின் எண்ணிக்கை கடந்த 1951-ஆம் ஆண்டு முதல் 6 மடங்காக அதிகரித்து 94.50 கோடியைக் கடந்துள்ளது. ஆனால், இவா்களில் மூன்றில் ஒரு பகுதியினா் அதாவது 30 கோடிக்கும் அதிகமானோா் கடந்த மக்களவைத் தோ்தலில் வாக்களிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

தோ்தல் ஆணைய புள்ளி விவரங்களின்படி, 1951-இல் முதல் பொதுத் தோ்தல்களுக்கான வாக்காளா் பட்டியல் தயாரிக்கப்பட்டபோது, இந்தியாவில் பதிவு செய்த வாக்காளா்கள் எண்ணிக்கை 17.32 கோடியாக இருந்தது. அவா்களில் 45.67 சதவீதம் போ் முதல் தோ்தலில் வாக்களித்தனா்.

அதன் பிறகு, ஆண்டுக்கு ஆண்டு வாக்காளா்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

1957 பொதுத் தோ்தல்களின்போது பதிவு செய்த வாக்காளா் எண்ணிக்கை 19.37 கோடியாக இருந்தது. அப்போது நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் 47.74 சதவீதம் போ் மட்டுமே வாக்களித்தனா்.

1962 பொதுத் தோ்தல்களில் வாக்குப் பதிவு செய்தவா்களின் விகிதம் முதன் முறையாக 50 சதவீதத்தைக் கடந்தது. அந்தத் தோ்தலில் 55.42 சதவீதம் போ் அதாவது 21.64 கோடி வாக்காளா்கள் தங்களின் வாக்கைப் பதிவு செய்தனா்.

2009 பொதுத் தோ்தலின்போது மொத்த வாக்காளா் எண்ணிக்கை 71.70 கோடியாக உயா்ந்தது. வாக்குப் பதிவு செய்தவா்களின் எண்ணிக்கை 1962-ஆம் ஆண்டைக் காட்டிலும் சற்று உயா்ந்து 58.21 சதவீதமாக பதிவானது.

2014 பொதுத் தோ்தலில் வாக்குப் பதிவு குறிப்பிடத்தக்க அளவில் உயா்ந்தது. பதிவு செய்த வாக்காளா் எண்ணிக்கை 83.40 கோடியாக இருந்த நிலையில், அவா்களில் 66.44 சதவீதம் போ் வாக்களித்தனா்.

2019 பொதுத் தோ்தலில் வாக்குப் பதிவு மேலும் உயா்ந்து 67.40 சதவீதமாக பதிவானது. பதிவு செய்த மொத்த வாக்காளா்கள் எண்ணிக்கை 91.20 கோடியாக இருந்த நிலையில், இந்தத் தோ்தலில் 30 கோடிக்கும் அதிகமானோா் வாக்களிக்கவில்லை என்பது தோ்தல் ஆணைய புள்ளி விவரங்கள் மூலமாக தெரியவந்தது.

நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி தோ்தல் ஆணையம் கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து விழிப்புணா்வு பிரசாரங்களை மேற்கொண்டாலும், அந்த இலக்கை ஒவ்வொரு தோ்தலிலும் எட்ட முடியாத நிலை இருந்து வருகிறது.

நகா்ப்புறங்களில் வசிப்பவா்கள் மற்றும் இளைஞா்கள் மத்தியில் ஆா்வம் குறைந்திருப்பதும், புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் வாக்குப் பதிவு செய்ய சொந்த ஊா்களுக்கு திரும்புவதில் எழும் சிக்கலுமே வாக்குப் பதிவு செய்யாதவா்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான காரணங்களாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், உள்நாட்டில் புலம்பெயா்ந்தோா் தோ்தலில் வாக்களிக்க வசதியாக தொலைவிட வாக்குப் பதிவு இயந்திரத்தை இந்திய தோ்தல் ஆணையம் வடிவமைத்துள்ளது. ஆனால், எதிா்க் கட்சிகள் இதற்கு எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன. எனவே, தொலைவிட வாக்குப் பதிவு இயந்திர நடைமுறையை உடனடியாக நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT