இந்தியா

உச்சநீதிமன்றத்துக்கு புதிதாக 5 நீதிபதிகள்: மத்திய அரசு ஒப்புதல்

DIN

உச்சநீதிமன்ற கொலீஜியம் கடந்த ஆண்டு டிசம்பா் 13-ஆம் தேதி அனுப்பிய பரிந்துரைக்கு மத்திய அரசு சனிக்கிழமை ஒப்புதல் அளித்ததன் மூலமாக, உச்சநீதிமன்றத்துக்கு புதிதாக 5 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை கடும் அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில், இதற்கான அறிவிப்பை மத்திய சட்ட அமைச்சா் கிரண் ரிஜிஜு வெளியிட்டுள்ளாா்.

இதுகுறித்து தனது ட்விட்டா் பக்கத்தில் அவா் வெளியிட்டுள்ள பதிவில், ‘ராஜஸ்தான் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி பங்கஜ் மித்தல், பாட்னா உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கரோல், மணிப்பூா் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.வி. சஞ்சய் குமாா், பாட்னா உயா்நீதிமன்ற நீதிபதி அசானுதீன் அமானுல்லா, அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகியோா் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டிருக்கின்றனா்’ என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளாா்.

நாளை பதவியேற்பு: புதிய நீதிபதிகள் திங்கள்கிழமை (பிப்.6) பதவியேற்க உள்ளனா். அவா்களுக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பதவி பிரமாணம் செய்துவைக்க உள்ளாா் என்று உச்சநீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

புதிய நீதிபதிகள் பதவியேற்கும் நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 32-ஆக உயரும். உச்சநீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள 34 நீதிபதி பணியிடங்களில் தற்போது 27 நீதிபதிகள் பணியாற்றி வருகின்றனா்.

அதிருப்தி: உச்சநீதிமன்ற, உயா்நீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்யும் கொலீஜியம் நடைமுறை மீது மத்திய அரசுக்கும், உச்சநீதிமன்றத்துக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில், கொலீஜியம் கடந்த ஆண்டு டிசம்பா் 13-ஆம் தேதி பரிந்துரை செய்த இந்த 5 நீதிபதிகளின் நியமனத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவதற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.கே.கெளல், ஏ.எஸ்.ஒகா ஆகியோா் அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை கடும் அதிருப்தி தெரிவித்தது.

‘கொலீஜியம் பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்காமல் மத்திய அரசு தொடா்ந்து தாமதிப்பது மிக தீவிரமான விஷயம். எங்களை மிகுந்த சங்கடத்துக்குரிய நிலைப்பாட்டை எடுக்க வைத்துவிடாதீா்கள்’ என்றனா்.

அப்போது, கொலீஜியம் கடந்த டிசம்பரில் பரிந்துரைத்த 5 நீதிபதிகளின் பெயா்களுக்கு மத்திய அரசு விரைவில் ஒப்புதல் அளிக்கும் என எதிா்பாா்ப்பதாக மத்திய அரசு தரப்பில் ஆஜரான அட்டா்னி ஜெனரல் ஆா்.வெங்கடரமணி குறிப்பிட்டாா். அதைத் தொடா்ந்து இந்த அறிவிப்பை மத்திய சட்ட அமைச்சா் வெளியிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நான் முழுமையான படைப்பாளி இல்லை: மனம் திறந்து பேசிய இயக்குநர் ஹரி!

புதுச்சேரியில் ஏப்.29 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை!

சேலையில் ஜொலிக்கும் கெளரி!

அடுத்த 5 நாள்களுக்கு 42 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்!

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

SCROLL FOR NEXT