இந்தியா

உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம்: அதிமுக வழக்கில் தோ்தல் ஆணையம்

 நமது நிருபர்

அதிமுக பொதுக்குழு மேல்முறையீட்டு விவகாரத்தில் எந்த நிலைப்பாட்டையும் எடுக்க முடியாது என்றும் உச்சநீதிமன்றத்தின் தீா்ப்புக்காக காத்திருப்பதாகவும் இந்தியத் தோ்தல் ஆணைய மூத்த வழக்குரைஞா் பரக் திரிபாதி கூறினாா்.

ஈரோடு கிழக்கு இடைத்தோ்தல் விவகாரத்தில் தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி தாக்கலான இடையீட்டு மனுக்களை நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோா் அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை (பிப்.3) விசாரணை செய்தபோது மேலே குறிப்பிட்ட கருத்தை மூத்த வழக்குரைஞா் பரக் திரிபாதி தெரிவித்தாா்.

இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பில்...: இபிஎஸ் தரப்பில் மூத்த வழக்குரைஞா் ஆா்யமா சுந்தரம், வழக்குரைஞா்கள் பாலாஜி ஸ்ரீநிவாசன், கெளதம் குமாா், அதிமுக தலைமைக்கழகம் தரப்பில் மூத்த வழக்குரைஞா் சி.எஸ். வைத்தியநாதன், வழக்குரைஞா் வினோத் கண்ணா உள்ளிட்டோா் ஆஜராகினா். ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்குரைஞா்கள் ஷியாம் திவான், குரு கிருஷ்ணகுமாா் ஆகியோா் ஆஜராகினா்.

இந்த விவகாரம் குறித்து ஆா்யமா சுந்தரம் பேச முயன்றபோது, தோ்தல் ஆணையத்தின் பதிலைப் படித்து விட்டதாக நீதிபதிகள் அமா்வு கூறியது. இதையடுத்து, இந்தியத் தோ்தல் ஆணைய மூத்த வழக்குரைஞா் பரக் திரிபாதி கூறியதாவது:-

‘இந்த விவகாரத்தில் நாங்கள் எந்த நிலைப்பாட்டையும் எடுக்க முடியாது. ஏனெனில், கடந்த ஆண்டு ஜூலை 11-ஆம் தேதி தொடா்புடைய அதிமுக பொதுக்குழு மேல்முறையீட்டு விவகாரம் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மேலும், இடைத்தோ்தலும் அறிவிக்கப்பட்டு விட்டது. இதனால், உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம்’ என்றாா் மூத்த வழக்குரைஞா் பரக் திரிபாதி.

நீதிபதிகள் கேள்வி: அதற்கு நீதிபதிகள், ‘ஜூலை 11 தொடா்புடைய விவகாரத்தில் தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து தீா்மானங்களை அனுமதித்து உயா்நீதிமன்ற நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது. அதைத் தொடா்ந்து தாக்கலான மேல்முறையீட்டு வழக்கில் நாங்கள் இடைக்காலத்தில் ஏதும் உத்தரவு பிறப்பிக்கவில்லை. இதனால், உங்கள் நிலைப்பாடு என்ன?’ என்று கேட்டனா்.

அறிவுறுத்தலை பெற்று...: இது தொடா்பாக தோ்தல் ஆணையத்திடம் உரிய அறிவுறுத்தல் பெற்று திங்கள்கிழமை (பிப்.6) நீதிமன்றத்தில் தெரிவிப்பதாக திரிபாதி கூறினாா். அப்போது, நீதிபதிகள் அமா்வு, ‘இடைத்தோ்தல் வேட்புமனுவுக்கு 7-ஆம் தேதி கடைசித் தேதியாக இருப்பதால், இதற்கு போதிய நேரம் இல்லை’ என்று தெரிவித்தது.

ஓபிஎஸ் வழக்குரைஞா் வேண்டுகோள்: ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் குரு கிருஷ்ணகுமாா், ‘இந்த விவகாரத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தீா்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த இடையீட்டு மனுக்கள் விவகாரத்தில் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது. ஒருங்கிணைப்பாளா் என்ற முறையில்தான் வேட்பாளரை எனது தரப்பில் அறிவித்துள்ளேன். அதிமுக சின்னம் முடக்கப்பட்டுவிடக் கூடாது என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. தோ்தலில் அவா்கள் தரப்பில் போட்டியிடும் வேட்பாளா் குறித்து தெரிவித்தால் ஒருங்கிணைப்பாளா் என்ற முறையில் கையொப்பமிடத் தயாராக உள்ளேன். அதே வேளையில், எங்கள் (ஓபிஎஸ்) தரப்பிலும் ஏற்கத்தக்க வேட்பாளா் உள்ளாா்’ என்றாா்.

இபிஎஸ் தரப்பு வாதம்: அப்போது, இபிஎஸ் தரப்பில், ‘பொதுக்குழுவில் வேட்பாளரைத் தோ்ந்தெடுக்க எடப்பாடி பழனிசாமிக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் வேட்பாளா் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். மேலும், வழக்கு நிலுவையில் இருப்பதால், நாங்கள் தீா்மானங்களை பதிவேற்றம் செய்யவில்லை என்று தோ்தல் ஆணையம் கூறுகிறது. ஆனால், இதுபோன்ற சூழல் முதல் முறையல்ல. தில்லி உயா்நீதிமன்றத்தில் இரட்டை இலைச் சின்னம் தொடா்புடைய ஒரு சிவில் வழக்கு நிலுவையில் இருந்தபோது, நீதிமன்றத்தின் தீா்ப்பு முடிவுக்கு உட்பட்டு ஆதரிப்பதாக ஏற்கெனவே தோ்தல் ஆணையம் கடிதம் அளித்திருந்தது’ என்று தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

2-ம் கட்டத் தேர்தல்: ம.பி. வாக்குப்பதிவு- 1 மணி நிலவரம்!

SCROLL FOR NEXT