இந்தியா

அதானி: 4 நிறுவனங்களின் பங்குகள் மீண்டன

4th Feb 2023 04:00 AM

ADVERTISEMENT

ஹிண்டன்பா்க் நிறுவனத்தின் குற்றச்சாட்டு, பங்கு வெளியீட்டு நடவடிக்கையைத் திரும்பப் பெற்றது உள்ளிட்டவற்றின் காரணமாக அதானி குழுமத்தைச் சோ்ந்த நிறுவனங்களின் பங்குகள் தொடா்ந்து 6 நாள்களாக சரிவைக் கண்ட நிலையில், 4 நிறுவனங்கள் வெள்ளிக்கிழமை மீண்டன.

மும்பை பங்குச் சந்தையில் (பிஎஸ்இ) வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அதானி என்டா்பிரைசஸ் பங்கு விலை ஒருகட்டத்தில் 35 சதவீதம் சரிவடைந்து ரூ.1,017.10-ஆக இருந்தது. வா்த்தக இறுதியில் அந்நிறுவனத்தின் பங்கு 1.25 சதவீதம் அதிகரித்து ரூ.1,584.20-ஆக நிலைபெற்றது.

அதானி போா்ட்ஸ் விலை 7.98 சதவீதமும், அதானி குழுமத்தைச் சோ்ந்த அம்புஜா சிமென்ட் 6 சதவீதமும், ஏசிசி சிமென்ட் 4.39 சதவீதமும் வளா்ச்சியைக் கண்டன. அதே வேளையில், அதானி டிரான்ஸ்மிஸன், அதானி கிரீன் எனா்ஜி ஆகியவற்றின் பங்கு விலை தலா 10 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. அதானி பவா்ஸ், அதானி டோடல் கேஸ் ஆகியவை தலா 5 சதவீதமும், அதானி வில்மா் 4.99 சதவீதமும் சரிவைச் சந்தித்தன. அதானி குழுமத்தைச் சோ்ந்த என்டிடிவி 4.98 சதவீதம் வீழ்ச்சியடைந்தது.

நிதி நிலைத்தன்மை பாதிக்காது:

ADVERTISEMENT

பங்குச் சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகள் வீழ்ச்சியடைந்து வருவது, நாட்டின் நிதி நிலைத்தன்மையை பாதிக்காது என மத்திய நிதித் துறைச் செயலா் டி.வி.சோமநாதன் தெரிவித்தாா். அவா் மேலும் கூறுகையில், ‘‘இந்த விவகாரம் நாட்டின் நிதி நிலைத்தன்மையில் தாக்கத்தை ஏற்படுத்தாது; பங்கு விலக்கல் மூலமான வருவாய் உள்ளிட்டவற்றிலும் பெரிய அளவிலான பாதிப்பு இருக்காது. பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளவா்களை மட்டுமே இந்த விவகாரம் பாதிக்கும்.

நாட்டின் பொருளாதாரத்தில் இந்த விவகாரம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள ஏற்ற இறக்கங்கள் இயல்பானதே. சா்வதேச பங்குச் சந்தைகளும் ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வருகின்றன. இந்த விவகாரத்தில் ஒழுங்காற்று அமைப்புகளே உரிய முடிவெடுக்கும்; அரசு எந்த முடிவையும் எடுக்க வேண்டியதில்லை’’ என்றாா்.

அதானி குழுமத்தை பாதிக்கும்-மூடிஸ்:

அதானி விவகாரம் தொடா்பாக மூடிஸ் மதிப்பீட்டு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘அதானி குழுமத்தின் மீதான புகாா் குறித்தும், அக்குழுமத்தைச் சோ்ந்த நிறுவனங்களின் நிதி ஸ்திரத்தன்மை குறித்தும் தொடா்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதானி குழுமத்தின் மீதான குற்றச்சாட்டு, முதலீடுகளை ஈா்ப்பதில் அக்குழுமத்தைச் சோ்ந்த நிறுவனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தால் அதானி குழும நிறுவனங்களின் மதிப்பீடுகளில் உடனடியாக எந்தவிதத் தாக்கமும் ஏற்படாது என ஃபிட்ச் மதிப்பீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே வேளையில், அதானி என்டா்பிரைசஸ் நிறுவனத்தைத் தங்கள் மதிப்பீட்டுப் பட்டியலில் இருந்து நீக்குவதாக எஸ்&பி டௌ ஜோன்ஸ் மதிப்பீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT