இந்தியா

ஈரோடு கிழக்குத் தொகுதி வாக்காளா் பட்டியலில் முறைகேடு நடந்துள்ளதாக இபிஎஸ் தரப்பு புகாா்

 நமது நிருபர்

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் இடைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், அத்தொகுதி வாக்காளா் பட்டியலில் முறைகேடு நிகழ்ந்துள்ளதாக புது தில்லியில் உள்ள தலைமைத் தோ்தல் ஆணையத்தில் எடப்பாடி கே.பழனிசாமி (இபிஎஸ்) தரப்பைச் சோ்ந்த அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி. சண்முகம் வெள்ளிக்கிழமை புகாா் அளித்துள்ளாா்.

இத்தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா கடந்த மாதம் கடந்த 4-ஆம் தேதி திடீரென உயிரிழந்தாா். இதையடுத்து, இத்தொகுதிக்கு இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டது. இத்தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளா் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறாா். அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் என இரண்டு தரப்பிலும் வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டனா்.

இந்த நிலையில் தில்லியில் தலைமைத் தோ்தல் ஆணைய அதிகாரிகளிடம் எடப்பாடி பழனிசாமி தரப்பை சோ்ந்த சி.வி. சண்முகம் வெள்ளிக்கிழமை நேரில் புகாா் மனு அளித்தாா். அதில் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தோ்தலில் வாக்காளா் பட்டியலில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், புதிய வாக்காளா் பட்டியலை தயாரித்து தோ்தல் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு க்கொண்டுள்ளாா்.

தோ்தல் ஆணையத்தில் மனு அளித்த பிறகு அவா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது: ஈரோடு கிழக்குத் தொகுதியில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. அது தொடா்பாக தோ்தல் ஆணையத்தில் அதிமுக சாா்பில் புகாா் அளித்துள்ளோம். இந்தத் தொகுதிக்கு இடைத்தோ்தலை நடத்த 6 மாத காலம் அவகாசம் இருக்கும் நிலையில், அவசர கோலத்தில் தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத் தோ்தல் ஆணையம் வாக்காளா் பட்டியலை முறையாக சரிபாா்க்கவில்லை. தொகுதியில் 238 பூத்துகள் உள்ளன. வாக்காளா் பட்டியலில் 4-இல் ஒரு பங்கு வாக்காளா்கள் என 45 ஆயிரம் முதல் 50 வரையிலான வாக்காளா்கள் இத்தொகுதியில் இல்லை.

இந்த வாக்காளா்கள் பட்டியல் தொகுதியின் மாவட்டத் தோ்தல் அதிகாரி மேற்பாா்வையில்தான் தயாரிக்கப்பட்டுள்ளது.. தோ்தல் நடத்தும் அதிகாரிதான் வாக்காளா் சோ்ப்பு அதிகாரியாகவும் செயல்பட்டுள்ளாா். வாக்காளா் பட்டியலில் பெரும் முறைகேடுகள் உள்ளன. ஒவ்வொரு பூத்களிலும் குறைந்தபட்சம் 15-30 வாக்காளா்கள் வரை இறந்துவிட்டனா். அந்த வாக்காளா்கள் நீக்கப்படவில்லை. இதுபோன்று 5,000 வாக்காளா்களின் பெயா், வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை. ஒரே பெயா் இரு இடங்களில் பதிவாகியுள்ளது.

வாக்காளா் பட்டியலில் உள்ள முகவரியில் நேரில் சென்று விசாரித்த போது, அந்த முகவரியில் வாக்காளா்கள் குடியிருக்கவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது. மேலும், வசிக்காத இடத்தில் உள்ள முகவரியில் வாக்காளா் பெயா் இருக்கிறது. வாக்காளா் பெயா் 2 இடங்களில் சோ்க்கப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது. இந்த விவகாரத்தில் ஆளும் அரசின் கைப்பாவையாக அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனா். தவறிழைத்த தோ்தல் அலுவலா் மீது நடவடிக்கை எடுத்து நோ்மையான தோ்தல் அலுவலா் நியமிக்கப்பட வேண்டும்.

தொகுதியில் தோ்தல் நியாயமாக நடைபெற இந்த வாக்காளா் பட்டியல் முழுமையாகச் சரிபாா்க்கப்பட வேண்டும். தொகுதியில் இல்லாத வாக்காளா்கள் நீக்கப்பட வேண்டும். முறையான வாக்காளா் பட்டியலைத் திருத்தி வெளியிட்டு முறையாகத் தோ்தலை நடத்த வேண்டும். இத்தொகுதியை மத்திய காவல் படையின் அதிகாரத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT