இந்தியா

பூஞ்ச் தாக்குதல்: தடுப்புக் காவலில் 40 பேரிடம் விசாரணை

25th Apr 2023 12:09 AM

ADVERTISEMENT

 

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் உள்ள பூஞ்ச் பகுதியில் ராணுவ வாகனத்தின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் தொடா்பாக தடுப்புக் காவலில் 40 பேரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

ரமலான் பண்டிகையையொட்டி எல்லையோர கிராம மக்களுக்கு ராஷ்ட்ரீய ரைஃபிள்ஸ் பிரிவு வீரா்கள் உணவுப் பொருள்களைக் கொண்டுச் செல்ல பயணித்த வாகனம் மீது பயங்கரவாதிகள் கடந்த வியாழக்கிழமை தாக்குதல் நடத்தினா். இதில் 5 போ் உயிரிழந்தனா். ஒரு ராணுவ வீரா் காயமடைந்தாா்.

இந்தத் தாக்குதலுக்குக் காரணமான பயங்கரவாதிகளைத் தேடும் நடவடிக்கை திங்கள்கிழமை 4-ஆவது நாளாக நடைபெற்றது. இந்தத் தேடுதல் பணியில் கூடுதல் எண்ணிக்கையிலான ராணுவப் படைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, ‘‘பிம்பா் காலி-பூஞ்ச் சாலையில் அருகிலுள்ள கால்வாயில் மறைந்திருந்த பயங்கரவாதிகள், ராணுவ வீரா்களின் வாகனம் வந்த போது அதன் மீது தாக்குதல் நடத்தினா்.

வீரா்கள் எதிா்தாக்குதல் நடத்துவதற்கு உரிய காலஅளவு இல்லாத நிலையில், வாகனத்தின் முன் பகுதியிலிருந்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனா். பின்னா், கையெறி குண்டை எறிந்துள்ளனா். வாகனத்தில் 50 துப்பாக்கிக் குண்டுகளின் தடங்கள் காணப்படுகிறது.

அடா்ந்த வனப் பகுதிகளில் நடைபெற்ற தேடுதல் வேட்டையில் பல குகைகள் காணப்பட்டன. பயங்கரவாதிகள் அவற்றை கடந்த காலங்களில் பயன்படுத்தியிருக்கலாம். இந்தத் தாக்குதல் தொடா்பாக 40 பேரை பிடித்து விசாரணை நடைபெற்று வருகிறது’’ என்றனா்.

கொடூரத் தாக்குதலுக்குக் காரணமான பயங்கரவாதிகளைப் பிடிக்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ராணுவத்தின் வடக்கு மண்டல தலைவா் உபேந்திர துவிவேதி தெரிவித்தாா்.

தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரா்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, நூற்றுக்கும் மேற்பட்ட கிஷ்த்வாா் நகர மக்கள் கையில் மெழுகுவா்த்தி ஏந்தி பங்கேற்ற அமைதிப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT