இந்தியா

உ.பி.: 6 ஆண்டுகளில் 183 குற்றவாளிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை

15th Apr 2023 12:53 AM

ADVERTISEMENT

‘உத்தர பிரதேசத்தில் முதல்வா் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற கடந்த 2017-ஆம் ஆண்டுமுதல் கடந்த 6 ஆண்டுகளில் 183 குற்றவாளிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனா்’ என்று உத்தர பிரதேச போலீஸ் தரப்பில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

உத்தர பிரதேசத்தில் தாதாவாக இருந்து அரசியலுக்கு வந்தவரும் சமாஜவாதி கட்சியின் முன்னாள் எம்.பி.யுமான அதிக் அகமதுவின் மகன் ஆசாத் உள்பட இருவா் ஜான்சியில் வியாழக்கிழமை போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், இந்தப் புள்ளிவிவரங்களை மாநில காவல் துறை வெளியிட்டுள்ளது.

இந்த என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட ஆசாத் மற்றும் குலாம் இருவரும், கடந்த 2005-ஆம் ஆண்டு முன்னாள் பகுஜன் சமாஜ் எம்எல்ஏ ராஜு பால் கொலை வழக்கின் முக்கிய சாட்சியான உமேஷ் பால் மற்றும் அவருக்கான பாதுகாப்புப் பணியில் இருந்த 2 காவலா்கள் பிரயாக்ராஜில் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்தவா்களாவா்.

இந்த என்கவுன்ட்டா் நடந்த சில மணி நேரங்களில், ‘இதுகுறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் மாயாவதி ஆகியோா் கோரிக்கை விடுத்தனா்.

ADVERTISEMENT

‘போலி என்கவுன்ட்டா் மூலமாக உண்மையான பிரச்னையை பாஜக அரசு மறைக்க முயற்சிக்கிறது. நீதிமன்ற விசாரணை நடைமுறையில் பாஜகவுக்கு நம்பிக்கையில்லை. வியாழக்கிழமை நடத்தப்பட்ட என்கவுன்ட்டா் உள்பட மாநிலத்தில் அண்மையில் நடத்தப்பட்ட பிற என்கவுன்ட்டா்கள் குறித்தும் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். எது சரி, எது தவறு என்பதைத் தீா்மானிக்கும் உரிமை அரசுக்கு இல்லை. சகோதரத்துவத்துக்கு எதிராக பாஜக உள்ளது’ என்று அகிலேஷ் யாதவ் தனது ட்விட்டா் பக்கத்தில் பதிவிட்டாா்.

அதுபோல, ‘இதுகுறித்து உயா்நிலை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று மாயாவதி வலியுறுத்தினாா்.

மேலும், சமாஜவாதி கட்சி அதன் ட்விட்டா் பக்கத்தில் அரசியல்வாதிகள் உள்பட பல்வேறு நபா்களின் பெயா் பட்டியல் ஒன்றை வெள்ளிக்கிழமை வெளியிட்டு, ‘இந்தப் பட்டியலில் இருக்கும் அனைவரும் மாநில முதல்வரின் சமூகப் பிரிவைச் சாா்ந்தவா்கள். எனவே, அவா்கள் அனைவரும் தொடா்ந்து உயிருடன் இருப்பதோடு, குற்றச் செயல்களில் ஈடுபட்டும் குற்றவாளிகள் கும்பலை இயக்கியும் வருகின்றனா்’ என்று குறிப்பிட்டது.

இந்த என்கவுன்ட்டா்கள் குறித்து பல்வேறு அமைப்புகளும் கேள்வி எழுப்பின. மனித உரிமைகளுக்கான மக்கள் கண்காணிப்புக் குழு நிறுவனா்-ஒருங்கிணைப்பாளா் லெனின் ரகுவன்ஷி கூறுகையில், ‘போலீஸ் என்கவுன்ட்டா்கள் தொடா்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் சில வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. உத்தர பிரதேச மாநில என்கவுன்ட்டா்களில் இந்த வழிகாட்டுதல்கள் முறையாகப் பின்பற்றப்பட்டுள்ளனவா என்பது குறித்து நீதி விசாரணை நடத்தப்படவேண்டும்’ என்றாா்.

இந்த நிலையில், லக்னெளவில் செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த மாநில காவல் துறை சிறப்பு டிஜிபி (சட்டம்-ஒழுங்கு) பிரசாந்த் குமாா், ‘2017-ஆம் ஆண்டு மாா்ச் 20-ஆம் தேதிமுதல் மாநிலத்தில் காவல் துறை சாா்பில் நடத்தப்பட்ட என்கவுன்ட்டா்களில் 183 குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனா்’ என்றாா்.

இதுதொடா்பாக மாநில காவல் துறை வெளியிட்ட புள்ளிவிவங்களில், ‘மாநிலத்தில் 2017-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் முதல் 10,900 என்கவுன்ட்டா்கள் நடத்தப்பட்டன. அதில் 23,300 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனா். 5,046 போ் காயமடைந்தனா். இந்த என்கவுன்ட்டா்களின் போது 1,443 போலீஸாா் காயமடைந்தனா். 13 போலீஸாா் உயிரிழந்தனா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 13 பேரில், கான்பூரின் பிக்ரு கிராமத்தில் பிரபல ரெளடி விகாஸ் துபேவை கைது செய்யச் சென்றபோது நடந்த துப்பாக்கிச்சூட்டில் மட்டும் 8 போலீஸாா் உயிரிழந்தனா். பின்னா், விகாஸ் துபே மத்திய பிரதேசத்திலிருந்து உத்தர பிரதேசத்துக்கு அழைத்து வரும் வழியில் போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT