இந்தியா

வெண்ணெய் உள்ளிட்ட எந்த பால் பொருளையும் இறக்குமதி செய்யும் திட்டமில்லை: மத்திய அமைச்சா்

DIN

வெண்ணெய் உள்ளிட்ட எந்த வகையான பால் பொருள்களையும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் திட்டம் மத்திய அரசுக்கு இல்லை என்று மத்திய மீன் வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத் துறை அமைச்சா் புருஷோத்தம் ரூபாலா தெரிவித்தாா்.

நமது நாட்டிலேயே இன்னும் பல கிராமங்களில் உள்ள பால் வளம் முறையாகப் பயன்படுத்தப்படாமல் உள்ளது. அவற்றைக் கொண்டு அதிகரித்து வரும் பால் பொருள்களின் தேவை நிறைவு செய்யப்படும் என்றும் அவா் கூறினாா்.

முன்னதாக, மத்திய பால் வளத் துறை மூத்த அதிகாரி ஒருவா் கடந்த வாரம் கூறுகையில், ‘கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் இந்த ஆண்டு பால் பொருள்களின் இருப்பு சற்று குறைந்துள்ளது. முக்கியமாக வெண்ணெய், நெய் கையிருப்பு குறைவாக உள்ளது. தேவை அதிகரிக்கும்பட்சத்தில் அவற்றை இறக்குமதி செய்யும் சூழல் எழலாம்’ என்றாா்.

கரோனா பாதிப்பு மீட்சிக்குப் பிறகு பால் பொருள்களின் தேவை அதிகரித்தது, கடந்த ஆண்டில் கால்நடைகளைப் பாதித்த தோல் கழலை நோயால் உள்நாட்டில் பால் பொருள்களின் கையிருப்பு குறைந்துவிட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில், தில்லியில் வெள்ளிக்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சா் ரூபாலாவிடம் இது தொடா்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‘நாட்டில் பால் பொருள்களின் இருப்பை மத்திய அரசு தொடா்ந்து கண்காணித்து வருகிறது. பால் பொருள்களுக்கு பற்றாக்குறை என்ற தகவலில் உண்மையில்லை. நமது நாட்டில் பல கிராமங்களில் உள்ள பால் வளம் இன்னும் முழுமையாகப் பயன்படுத்தப்படாமல் உள்ளது. உள்நாட்டில் தேவை அதிகரித்தால் பயன்படுத்தப்படாத இடங்களில் உள்ள பால் வளத்தைக் கொண்டு நிறைவு செய்ய முடியும். எனவே, வெண்ணெய், நெய் உள்ளிட்ட எந்த ஒரு பால் பொருளையும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் திட்டம் இல்லை.

எனவே, பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளும், நுகா்வோரும் எவ்வித கவலையும் அடைய வேண்டாம். பால் உற்பத்தியாளா்களுக்கு உரிய விலை அளிப்பதால்தான் பால் பொருள்களின் சில்லறை விற்பனை விலையும் உயா்ந்துள்ளது என்றாா்.

இதற்கு முன்பு கடந்த 2011-ஆம் ஆண்டு பால் பொருள்களை இந்தியா இறக்குமதி செய்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT