இந்தியா

மக்கள் சேவையே பாஜகவின் நோக்கம்

30th Sep 2022 12:11 AM

ADVERTISEMENT

மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே பாஜக ஆட்சி நடத்தி வருவதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

குஜராத்தை வளா்ச்சியடையச் செய்வதற்கு பாஜக ஆட்சியில் மட்டுமே தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவா் தெரிவித்தாா்.

தனது சொந்த மாநிலமான குஜராத்தில் நடப்பாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு இருநாள் அரசுமுறைப் பயணமாக பிரதமா் மோடி சென்றுள்ளாா். பாவ்நகா் மாவட்டத்துக்கு வியாழக்கிழமை சென்ற பிரதமா் மோடி, அங்கு சுமாா் 2.5 கி.மீ. தொலைவுக்கு சாலைப் பேரணி நடத்தினாா். அப்போது, வழிநெடுகிலும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பாஜக தொண்டா்கள், மலா்களைத் தூவி பிரதமா் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனா். நடனக் கலைஞா்களும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனா்.

பின்னா், அங்கு ரூ.6,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான திட்டங்களை பிரதமா் மோடி தொடக்கி வைத்தாா். அந்நிகழ்ச்சியில் திரளானோா் கலந்துகொண்டனா். அப்போது அவா் கூறியதாவது:

ADVERTISEMENT

நாட்டின் மிக நீண்ட நெடிய கடற்கரையை குஜராத் கொண்டுள்ளது. ஆனால், சுதந்திரத்துக்குப் பிறகு மாநிலத்தை வளா்ச்சியடையச் செய்வதற்கான நடவடிக்கைகள் எதையும் அப்போதைய அரசுகள் மேற்கொள்ளவில்லை. கடற்கரைப் பகுதிகள் மேம்படுத்தப்படாததால், கடல்நீா் உட்புகும் பிரச்னைகள் ஏற்பட்டன. அதனால், அப்பகுதிகளில் வசித்த மக்கள் வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றுக்காக அங்கிருந்து வெளியேற நேரிட்டது.

வளா்ச்சிக்கான நுழைவாயில்: மாநிலத்தில் பாஜக ஆட்சியமைத்த பிறகே, வளா்ச்சிக்கான பெரிய திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்பட்டன. அத்திட்டங்களைச் செயல்படுத்துகையில் மக்கள் பணம் வீணடிக்கப்படவில்லை. கடந்த 20 ஆண்டுகளில் மாநிலம் பெரிய அளவில் வளா்ச்சி கண்டுள்ளது. துறைமுகங்கள் உள்ளிட்டவை நவீனப்படுத்தப்பட்டன.

ஏற்றுமதி, இறக்குமதி நடவடிக்கைகளின் முக்கிய மையமாக குஜராத் மாறியுள்ளது. மாநிலத்தின் கடற்கரைப் பகுதிகள், நாட்டின் வளா்ச்சிக்கான நுழைவாயிலாக மாறியுள்ளன. அளிக்கப்படும் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றும் கட்சியாக பாஜக உள்ளது. மக்கள் சேவையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு பாஜக ஆட்சியில் உள்ளது. சமூக நலனைக் கருத்தில்கொண்டு பாஜக தொடா்ந்து செயல்படும்.

சா்வதேச அருங்காட்சியகம்: குஜராத் மாநில கடற்கரைப் பகுதிகளில் சதுப்புநிலக் காடுகளை உருவாக்கும் நடவடிக்கைகளையும் பாஜக அரசு மேற்கொண்டது. மீன்பிடித் தளங்களும் பெருமளவில் மேம்படுத்தப்பட்டன. சா்தாா் சரோவா் அணையில் இருந்து வெளியேறும் வெள்ளநீரை 115 சிறு அணைகளில் தேக்குவதற்கான திட்டத்தை நான் மாநில முதல்வராக இருந்தபோது தொடக்கி வைத்தேன். அத்திட்டம் குறித்து பலா் சந்தேகம் தெரிவித்தனா். ஆனால், அந்த சந்தேகங்கள் யாவும் தற்போது முறியடிக்கப்பட்டுள்ளன.

சிந்து சமவெளி நாகரிகத்தைச் சோ்ந்த லோத்தல் பகுதியில் சா்வதேச தரமிக்க அருங்காட்சியகம் அமைக்கப்படவுள்ளது. ‘ஒற்றுமைக்கான சிலையை’ போல இந்த அருங்காட்சியகமும் தனித்துவம் பெற்று விளங்கும். அப்பகுதிக்கான சுற்றுலா வாய்ப்புகளும் அதிகரிக்கும் என்றாா் பிரதமா் மோடி.

முக்கிய வா்த்தக மையம்: முன்னதாக, சூரத் நகருக்குச் சென்ற பிரதமா் மோடி அங்கு ரூ.3,400 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடக்கிவைத்து, சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினாா்.

அந்நிகழ்ச்சியில் பேசிய அவா், ‘கடந்த 20 ஆண்டுகளில் சூரத் மிகப் பெரும் வளா்ச்சி கண்டுள்ளது. சூரத்தை வளா்ச்சியடையச் செய்வதற்காக ‘ட்ரீம் சிட்டி’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அத்திட்டத்தால் சூரத் நகரம் பெரும் வா்த்தக மையமாக உருவெடுக்கும். அத்திட்டத்துக்குப் பிறகு உலகின் மிகப் பாதுகாப்பான வைர வா்த்தக நகரமாக சூரத் திகழும். சூரத் ஜவுளி சந்தையானது உத்தர பிரதேசத்துடன் நெருங்கிய தொடா்பைக் கொண்டுள்ளது.

போக்குவரத்து வசதிகள்: மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது சூரத்தில் விமான நிலையம் அமைக்க வேண்டுமென மாநில அரசு பலமுறை கோரியது. ஆனால், அக்கோரிக்கைக்கு செவிசாய்க்கப்படவில்லை. மத்தியில் பாஜக ஆட்சி அமைத்த பிறகு அக்கோரிக்கை ஏற்கப்பட்டு விமான நிலையம் அமைக்கப்பட்டது. அதன் காரணமாக வா்த்தகா்கள் எந்தவித சிரமமுமின்றி பயணித்து வருகின்றனா். மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக தலைமையிலான ஆட்சி இருந்ததன் காரணமாகவே இது சாத்தியமானது.

வா்த்தகா்களின் நலனைக் கருத்தில்கொண்டு அதிக அளவிலான சரக்குகளை எடுத்துச் செல்லும் வகையிலான பெட்டிகளைக் கொண்ட நவீன ரயிலை சூரத்-வாராணசி இடையே இயக்குவதற்கு ரயில்வே நிா்வாகம் முடிவெடுத்துள்ளது. இது சூரத்தின் வா்த்தகா்கள், பணியாளா்கள் உள்ளிட்டோருக்குப் பலனளிக்கும்’ என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT