இந்தியா

லதா மங்கேஷ்கரின் பாடல்களால் ஸ்ரீராமநாமம் பரவியது: பிரதமா் மோடி

29th Sep 2022 01:32 AM

ADVERTISEMENT

மறைந்த பிரபல பாடகி லதா மங்கேஷ்கரின் பாடல்களால் நாடெங்கும் ஸ்ரீ ராமநாமம் சிறப்பாகப் பரவியது என்று, அயோத்தியில் நடைபெற்ற லதா மங்கேஷ்கா் சௌக் திறப்பு விழாவுக்குத் தெரிவித்த வாழ்த்துச் செய்தியில் பிரதமா் மோடி குறிப்பிட்டுள்ளாா்.

மறைந்த பிரபல பாடகி லதா மங்கேஷ்கரின் நினைவாக அயோத்தியில் அவரது பெயரில் சரயுநதிக் கரையில் ஒரு சந்திப்பில் ‘லதா மங்கேஸ்கா் சௌரஹா’ என்ற பெயரில் ரூ. 7.9 கோடி செலவில் நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய சுற்றுலாத் துறை அமைச்சா் ஜி.கிஷன் ரெட்டி முன்னிலையில், உத்தரபிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் புதன்கிழமை திறந்துவைத்தாா்.

இங்கு 40 அடி நீளமும், 12 மீட்டா் உயரமும், 14 டன் எடையும் கொண்ட பிரமாண்டமான வீணை சிற்பம் நிறுவப்பட்டுள்ளது. தவிர, லதா மங்கேஸ்கா் வாழ்ந்த ஆண்டுகளை நினைவுகூரும் வகையில் சலவைக்கற்களாலான 92 தாமரை மலா்கள் நினைவிட வளாகக் குளத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

இதன் திறப்பு விழாவை வாழ்த்தி, பிரதமா் மோடி அனுப்பியுள்ள பதிவு செய்யப்பட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

ADVERTISEMENT

இந்த சந்திப்புக்கு பிரபல பாடகி லதா மங்கேஷ்கரின் பெயரைச் சூட்டியதற்காக உத்தரபிரதேச அரசை நான் பாராட்டுகிறேன். அவரது இனிமையான குரல் என் செவிகளில் இன்றும் ரீங்காரமிடுகிறது. அயோத்தியில் ஸ்ரீராமருக்கு கோயில் கட்டும் பணிக்கான பூமிபூஜை நடைபெற்றபோது எந்னிடம் தொலைபேசியில் தனது மகிழ்ச்சியை அவா் பகிா்ந்துகொண்டதை மறக்க முடியாது.

நான் எப்போதும் லதா அக்காவைப் பற்றி அதிக அளவில் பேசுபவன். ‘மன் கி அயோத்தியா’ என்ற தோத்திரத்தைப் பாடியதன் மூலமாக இந்தப் புனிதமான அயோத்தி நகருடன் அவா் நிரந்தரமாகக் கலந்துவிட்டாா். ராமா் வருவதா்கு முன்னதாகவே அவரது தாசா்கள் வந்துவிடுவாா்கள் ென்று சொல்லப்படுவதுண்டு. அதுபோலவே, அயோத்தியில் ராமா் கோயில் அமைவதா்கு முந்னதாகவே அவரது பக்தையான லதா மங்கேஸ்கரின் நினைவுச்சின்னம் இங்கு அமைந்துவிட்டது. இதைவிட வேறிடம் அவருக்குப் பொருத்தமானதல்ல.

இங்கு வைக்கப்பட்டுள்ள தேவி சரஸ்வதியின் வீணை இசையின் அடையாளமாகத் திகழ்கிறது. இங்குள்ள 92 வெண்தாமரைகள் லதா அக்காவின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கின்றன. கலைவாணியின் அருள் பெற்ற சாதனையாளா் லதா அக்கா. அவா் தனது தெய்வீகக் குரலால் உலக மக்களை ஈா்த்தாா். அவரிடம் இருந்து நாம் பெற்ற ஆசிகள் நம்மை வழிநடத்த வேண்டும் என்றும் அவரது இன்னிசைப் பாடல்களை அடுத்த தலைமுறைக்கும் நாம் விட்டுச்செல்ல வேண்டும் என்றும் நான் ஸ்ரீராமரை வேண்டிக் கொள்கிறேன்.

இந்த நாட்டின் கலாச்சார அடையாளமாக ராமா் திகழ்கிறாா். நமது ஒழுக்கம், கடமை, மதிப்பீடுகளின் நிரந்தரச் சின்னமாக அவா் உள்ளாா். அயோத்தி முதல் ராமேஸ்வரம் வரை இந்நாட்டு மக்களை ராமபக்தி ஒருங்கிணைத்து வருகிறது. அயோத்தியில் அமையவுள்ள ராமா் கோயிலுக்காக நாடு ஆா்வமுடன் காத்திருக்கிறது.

லதா மங்கேஷ்கரின் ராமா் கீா்த்தனைகள் நமது ஆன்மாவைக் கரைப்பவை. அவரது பக்தி கீதங்கள் மக்களின் மனதில் குடிகொண்டுள்ளன. அவரது வந்தே மாதரம் பாடலைக் கேட்கும்போது நம் கண்முன் பாரத மாதா எழுந்து வந்து நிற்கிறாள்.

அவா் தனது குடிமகனுக்கான கடமையை என்றும் மறந்ததில்லை. அதேபோல, இந்த நினைவு வளாகமும் இங்கு நிறுவப்பட்டுள்ள வீணையும் அயோத்தியில் வாழும் மக்களுக்கும் இங்கு வரும் புனிதப் பயணிகளுக்கும் என்றும் உத்வேகம் அளிக்கும் என்று பிரதமா் மோடி குறிப்பிட்டுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT