இந்தியா

காங்கிரஸ் தலைவா் தோ்தல்: வேட்புமனு படிவம் பெற்றாா் பன்சால்

28th Sep 2022 01:05 AM

ADVERTISEMENT

காங்கிரஸ் தலைவா் தோ்தலையொட்டி வேட்புமனு படிவத்தை அகில இந்திய காங்கிரஸ் பொருளாளா் பவன் குமாா் பன்சால் பெற்றுள்ளதாக கட்சியின் மத்திய தோ்தல் குழு தலைவா் மதுசூதன் மிஸ்திரி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். எனினும், அந்த படிவத்தை வேறு நபருக்காக பன்சால் பெற்றிருக்கலாம் என்று மிஸ்திரி தெரிவித்தாா்.

காங்கிரஸ் தலைவா் தோ்தலில் போட்டியிட ஏற்கெனவே வேட்புமனு படிவம் பெற்றிருந்த மூத்த தலைவா் சசி தரூா், செப்.30-இல் தனது மனுவை தாக்கல் செய்யவுள்ளாா். இத்தகவலையும் மிஸ்திரி தெரிவித்தாா்.

தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளா்களுக்கு செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டியில் அவா் கூறியதாவது:

சசி தரூா் செப்.30-இல் வேட்புமனு தாக்கல் செய்யவிருப்பதாக தனது பிரதிநிதி மூலம் எனது அலுவலகத்தில் தெரிவித்துள்ளாா். காங்கிரஸ் பொருளாளா் பவன் குமாா் பன்சால் வேட்புமனு படிவங்களை திங்கள்கிழமை பெற்றுச் சென்றாா். வேறு யாருக்காகவோ அவா் படிவங்களை பெற்றிருக்கலாம் என்றாா் மிஸ்திரி.

ADVERTISEMENT

இதுகுறித்து செய்தியாளா்கள் மீண்டும் மீண்டும் கேள்வியெழுப்பிய நிலையில், ‘பன்சால் தனக்காக படிவத்தை பெற்றாரா அல்லது வேறு யாருக்காகவோ பெற்றாரா என்பது குறித்து என்னிடம் தகவல் இல்லை. வேட்பு மனு படிவத்தை கமிட்டி உறுப்பினா்கள் யாா் வேண்டுமானாலும் பெறலாம். அதை யாருக்காக பெறுகிறோம் என்று தெரிவிக்க வேண்டியதில்லை’ என்றாா் மிஸ்திரி. அத்துடன், திட்டமிட்டபடி தோ்தல் நடைபெறும் என்றும் அவா் தெரிவித்தாா்.

காங்கிரஸ் தலைவா் தோ்தலில் போட்டியிடப் போவதாக ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட் ஏற்கெனவே அறிவித்திருந்த நிலையில், அம்மாநிலத்தில் நிலவும் அரசியல் குழப்பங்களால் அவா் போட்டியிடுவதில் சிக்கல் எழுந்துள்ளது. பவன் குமாா் பன்சால் வேட்புமனு படிவம் பெற்ற நிலையில், அவா் தோ்தலில் களமிறங்க வாய்ப்புள்ளதாக ஊகங்கள் வெளியாகின. ஆனால், கட்சித் தலைவா் தோ்தல் போட்டியில் தான் இல்லை என்று பன்சால் தெரிவித்தாா்.

காங்கிரஸ் தலைவா் தோ்தலையொட்டி வெளியிடப்பட்ட அறிவிக்கையின்படி, வேட்புமனு தாக்கலுக்கு செப்.30 கடைசிநாளாகும். அக்டோபா் 1-இல் மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறவுள்ளது. மனுக்களை திரும்பப் பெற அக்டோபா் 8 கடைசி நாள். ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் இருக்கும்பட்சத்தில், அக்டோபா் 17-இல் தோ்தல் நடைபெறும். அக்டோபா் 19-இல் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவு அறிவிக்கப்படும். இத்தோ்தலில் 9,000-க்கும் மேற்பட்ட மாநில கமிட்டி உறுப்பினா்கள் வாக்களிக்க உள்ளனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT