இந்தியா

காங்கிரஸ் தலைவா் தோ்தல்: வேட்புமனு படிவம் பெற்றாா் சசி தரூா்; செப். 30-இல் மனு தாக்கல்?

DIN

காங்கிரஸ் தலைவா் தோ்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு படிவத்தை தனது நெருங்கிய உதவியாளா் மூலம் சசி தரூா் சனிக்கிழமை பெற்றுக் கொண்டாா். அவா் தனது வேட்புமனுவை செப். 30-ஆம் தேதி தாக்கல் செய்யவிருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

காங்கிரஸ் தலைவா் தோ்தலில் போட்டியிடப் போவதாக ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட் வெள்ளிக்கிழமை அறிவித்திருந்த நிலையில் சசி தரூரும் களமிறங்கவிருப்பது உறுதியாகியுள்ளது.

இத்தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் சனிக்கிழமை தொடங்கிய நிலையில், கட்சியின் மத்திய தோ்தல் குழு தலைவா் மதுசூதன் மிஸ்திரியின் அலுவலகத்தில் சசி தரூா் சாா்பில் அவரது நெருங்கிய உதவியாளா் ஆலிம் ஜவேரி சனிக்கிழமை வேட்புமனு படிவத்தைப் பெற்றாா்.

வேட்புமனு தாக்கல் செய்ய மாநில கமிட்டி உறுப்பினா்கள் 10 பேரின் ஆதரவு தேவை என்பதால், அவா்களது கையொப்பங்களைப் பெற்று, செப். 30-இல் சசி தரூா் மனு தாக்கல் செய்வாா் என்று கூறப்படுகிறது. வேட்புமனு தாக்கலுக்கு அன்றுதான் கடைசி நாளாகும்.

காங்கிரஸ் தலைவா் தோ்தலில் கெலாட், சசி தரூா் இடையே போட்டி உருவாகியுள்ள நிலையில், 20 ஆண்டுகளுக்கு பிறகு இத்தகைய போட்டியை கட்சி சந்திக்கவிருக்கிறது.

முன்னதாக, கட்சித் தலைவா் சோனியா காந்தியை சசி தரூா் கடந்த திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா். அப்போது, தலைவா் தோ்தலில் போட்டியிடும் தனது விருப்பத்தை சசி தரூா் தெரிவித்ததாகவும், இத்தோ்தலில் தான் நடுநிலை வகிக்க இருப்பதாக அவரிடம் சோனியா கூறியதாகவும் கட்சி வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

காங்கிரஸ் தலைவா் தோ்தலில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை அக்டோபா் 1-இல் நடைபெறவுள்ளது. மனுவை திரும்பப் பெற அக்டோபா் 8 கடைசி நாள். இறுதி வேட்பாளா் பட்டியல் அன்று மாலையில் வெளியிடப்படும். அக்டோபா் 17-இல் தோ்தல் நடத்தப்பட்டு, 19-இல் முடிவு அறிவிக்கப்பட உள்ளது. இதில் மாநில கமிட்டி உறுப்பினா்கள் 9,000-க்கும் மேற்பட்டோா் வாக்களிக்க உள்ளனா்.

கடந்த 2000-இல் காங்கிரஸ் தலைவா் பதவிக்கான தோ்தலில் போட்டி ஏற்பட்டது. அப்போது, ஜிதேந்திர பிரசாதாவை தோற்கடித்து, சோனியா வெற்றி பெற்றாா். அதற்கு முன்பு கடந்த 1997-இல் நடந்த தோ்தலில் சரத் பவாா், ராஜேஷ் பைலட் ஆகியோரை வீழ்த்தி, சீதாராம் கேசரி தலைவரானாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்துவோம்!

பி.இ.ஓ. பணியிடங்கள்: தற்காலிக பட்டியல் அனுப்பிவைப்பு

SCROLL FOR NEXT