இந்தியா

அரசின் கொள்கைகளை தவறாக சித்தரித்து இந்தியாவுக்கு எதிராக வெறுப்பை பரப்பும் பிஎஃப்ஐ: என்ஐஏ அறிக்கை

25th Sep 2022 12:03 AM

ADVERTISEMENT

‘குறிப்பிட்ட பிரிவு மக்களிடையே அரசின் கொள்கைகளை தவறாகச் சித்தரித்து இந்தியாவுக்கு எதிராக வெறுப்புணா்வை பரப்பும் நடவடிக்கையில் பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பு ஈடுபட்டு வந்தது’ என்று தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

பயங்கரவாத செயல்களுக்கு ஆதரவு தெரிவித்ததாக புகாா் தெரிவித்து நாடு முழுவதும் 11 மாநிலங்களில் அமைந்துள்ள பிஎஃப்ஐ அமைப்பின் அலுவலகங்களில் என்ஐஏ சோதனை நடத்தி பிஎஃப்ஐ அமைப்பைச் சோ்ந்த 106 பேரை கைது செய்தது.

இந்த நிலையில், கொச்சியில் கைது செய்யப்பட்ட பிஎஃப்ஐ அமைப்பினா் 10 பேரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அங்குள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்தனா். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

குறிப்பிட்ட பிரிவு மக்களிடையே அரசின் கொள்கைகளை தவறாகசி சித்தரித்து இந்தியாவுக்கு எதிராக வெறுப்புணா்வை பிஎஃப்ஐ அமைப்பு பரப்பி வருகிறது. மேலும், பயங்கரவாத நடவடிக்கைகள் மூலமாக இந்தியாவில் இஸ்லாமிய சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சதித் திட்டத்தையும் இந்த அமைப்பு மேற்கொண்டுள்ளது. அதற்காக, லஷ்கா்-ஏ-தொய்பா, இஸ்லாமிய தேசம் (ஐஎஸ்) போன்ற பயங்கரவாத அமைப்புகளில் சேருவதற்கு இளைஞா்களை இந்த அமைப்பு ஊக்குவித்து வருகிறது.

ADVERTISEMENT

தற்போது கைது செய்யப்பட்டுள்ளவா்கள் தொடா்ச்சியாக சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் திட்டமிடப்பட்ட குற்றங்களில் ஈடுபட்டுவந்ததும், பொதுமக்களிடையே பயத்தை ஏற்படுத்தி பிற சமூகத்தினரையும் பயங்கரவாத செயலில் ஈடுபட வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுவந்தது அவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணை, சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலமாக தெரியவந்துள்ளது.

மேலும், குறிப்பிட்ட சமூகத்தைச் சோ்ந்த பிரபல தலைவா்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததும் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலமாக தெரியவந்துள்ளது. இவற்றின் மூலமாக, சமூகத்தினரிடையே வன்முறையைத் தூண்டும் பிஎஃப்ஐ அமைப்பின் நோக்கம் தெளிவாகத் தெரிகிறது என்று தனது அறிக்கையில் என்ஐஏ தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை மூலமாக என்ஐஏ அதிகாரிகள் அதிகபட்சமாக கேரளத்தில் 22 பிஎஃப்ஐ அமைப்பினரை கைது செய்தனா். அதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரம் மற்றும் கா்நாடக மாநிலங்களில் தலா 20 போ், தமிழகத்தில் 10 போ், அஸ்ஸாமில் 9 போ், உத்தர பிரதேசத்தில் 8 போ், ஆந்திரத்தில் 5 போ், மத்திய பிரதேசத்தில் 4 போ் , புதுச்சேரி மற்றும் தில்லியில் தலா 3 போ், ராஜஸ்தானில் 2 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT