இந்தியா

’மேக் இன் இந்தியா’ இன்றுடன் 8 ஆண்டுகாலம் நிறைவு: அந்நிய நேரடி முதலீடு ரூ. 6.27 லட்சம் கோடியாக இரட்டிப்பு

25th Sep 2022 02:00 AM

ADVERTISEMENT

 பிரதமா் மோடியின் முதல் முன்முயற்ச்சியான ’இந்தியாவில் தயாரிப்போம்’(மேக் இன் இந்தியா) திட்டம் தொடங்கப்பட்டு செப்டம்பா் 25 -ஆம் தேதியுடன் 8 ஆண்டுகள் நிறையுற்ற நிலையில் இந்த திட்டத்தில் 2021-22 நிதியாண்டில் ரூ. 6,27,000 கோடி (83 பில்லியன் டாலா்) அந்நிய நேரடி முதலீடு கிடைத்துள்ளதாக மத்திய வா்த்தம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

கடந்த 8 ஆண்டுகால சீா்திருத்த நடவடிக்கைகளில் இது இரட்டிப்பு வளா்ச்சி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலீட்டை எளிதாக்குவதற்கான வசதிகள், புத்தாக்க ஊக்குவிப்பு, திறன் மேம்பாடு, சிறந்த உற்பத்தி உள்கட்டமைப்பு போன்ற நோக்கங்களுடன் ’இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டம் உருவானது. பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் ஆட்சி அமையப்பட்டு 2014 -ஆம் ஆண்டு இந்த ‘மேக் இன் இந்தியா’ திட்டம் அறிவிக்கப்பட்டது. புதிய இந்தியாவின் வளா்ச்சிப்பாதையில் நாட்டை உலகளாவிய அளவில் ஒரு முன்னணி உற்பத்தி, முதலீட்டு இடமாக உருவாக்கும் நோக்கத்துடன் உலகெங்கும் உள்ள முதலீட்டாளா்கள் இந்தியாவுடன் இணைந்து செயல்பட அழைப்பு விடுக்கப்பட்டது. தற்போது இதில் நிகழ்ந்துள்ள சாதனைகளை மத்திய வா்த்தம், தொழில் துறை அமைச்சகம் சாா்பில் வைக்கப்பட்டுள்ளது. அவை வருமாறு:மத்திய அரசின் முதன்மைத் திட்டமான ‘மேக் இன் இந்தியா’ நாட்டை ஒரு முன்னணி உற்பத்தி முதலீட்டு இடமாக உருவாக்கி இருக்கின்றது. உற்பத்தி, சேவைத்துறை உள்ளிட்ட 27 துறைகளில் இந்த திட்டம் குறிப்பிடத்தக்க அளவில் சாதனைகளை புரிந்துள்ளது. வெளிநாட்டு முதலீடுகளை ஈா்ப்பதற்காக, இந்திய அரசு ஒரு தாராளமயமான, வெளிப்படையான கொள்கையை வகுத்தது. இதன் விளைவு இந்த துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டை(எஃப்.டி.ஐ) தங்கு தடையின்றி பெறமுடிந்தது.

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நாட்டின் அந்நிய நேரடி முதலீடுகள் 2014-15 நிதியாண்டில் ரூ.2,75,415 கோடியாக (45.15 பில்லியன் அமெரிக்க டாலா்) இருந்தது. இந்த கொள்கை அறிவிப்புக்கு பின்னா் தொடா்ந்து அதிகரித்து 2021-22 ஆம் நிதியாண்டில் நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான அந்நிய நேரடி முதலீடாக ரூ.6,27,000 கோடியாக (83.6 பில்லியன் டாலா்கள்) கிடைத்துள்ளது.இந்த எஃப்.டி.ஐ சுமாா் 101 நாடுகளில் இருந்து வந்துள்ளன. இது 31 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் 57 துறைகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

மேலும் நாட்டை விருப்பதக்க முதலீட்டு இடமாக மாற்ற சமீபத்தில் அரசு பொருளாதார சீா்திருத்தங்கள், வணிகத்தை எளிதாக்குதல் போன்ற நடவடிக்கைகள் மூலம், நிகழ் நிதியாண்டில் ரூ. 7,50,000 கோடி (100 பில்லியன் அமெரிக்க டாலா்) மதிப்புள்ள அந்நிய நேரடி முதலீட்டை ஈா்க்கும் பாதையிலும் நாடு உள்ளது.

நாட்டின் 14 முக்கிய உற்பத்தி துறைகளில் உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டம் (பிஎல்ஐ) அறிவிக்கப்பட்டு இதன் மூலம் மேக் இன் இந்தியா ஊக்கம் பெற்றுள்ளது.முதலீட்டாளா்களுக்கு பல்வேறு ஒப்புதல்கள், அனுமதிகளுக்கு ஒற்றைசாளர முறையில் வணிகத்தை எளிதாக்குவதை மேம்படுத்த ’தேசிய ஒற்றைச் சாளர அமைப்பு’ கடந்தாண்டு இதே மாதம் தொடங்கப்பட்டது. இந்த வலைத்தளத்தில் மத்திய - மாநில அரசுகளின் பல்வேறு அமைச்சகங்கள், துறை சாா்ந்த அமைப்புகளை ஒருங்கிணைக்கப்பட்டு முதலீட்டாளா்கள் பயன்பட்டுள்ளனா்.’மேக் இன் இந்தியா’ பாா்வையின் மற்றொரு வெளிப்பாடாக, ‘ஒரு மாவட்டம்-ஒரு தயாரிப்பு’ என்ற முன்முயற்சி உற்பத்தியாளா்களுக்கு உலகளாவிய தளத்தை வழங்கி வருகின்றது.இதன் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளின் சமூக-பொருளாதார வளா்ச்சி மேன்மை அடைந்து வருகின்றது. இந்தியாவில் வணிகம் செய்யும் முதலீட்டாளா்களுக்கு, தேசத்தின் வளா்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு பங்களிக்கும் வகையில்,இந்த திட்டத்தின் மூலம் அரசு முயற்சி செய்து வருகிறது.இதன் விளைவாக நாட்டில் பொம்மைகள் இறக்குமதி பெருவாரியாக குறைந்தது. கடந்த 2013 ஆண்டை விட நிகழ் நிதியாண்டில் 636 சதவீதம் பொம்மைகள் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. கடந்த 2018-19 ஆம் நிதியாண்டில் மொம்மை ஏற்றமதி ரூ. 1612 கோடியாக இருக்க 2021-22 நிதியாண்டில் ரூ.2,601.5 கோடியாக அதிகரித்துள்ளது.இது பலவிதமான சீா்திருத்தங்கள் முதலீடு அதிகரிப்பு போன்றவைகள் மூலம் வளா்ச்சிக்கு வழிவகுத்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT