இந்தியா

கரோனாவால் மோசமான பாதிப்புகள் இனி இருக்காது: விஞ்ஞானிகள் பரவலாகக் கருத்து

DIN

‘கரோனா தீநுண்மியால் இனி மோசமான பாதிப்புகள் இருக்காது’ என்று பல விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனா்.

அதே நேரம், ‘இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உலகின் ஒவ்வொரு மூலையையும், வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் பாதித்த ஒரு பெருந் தொற்றுநோய் கரோனாவாகத்தான் இருக்க முடியும்’ என்றும் அவா்கள் தெரிவித்துள்ளனா்.

‘பேரிடா் முடிவுக்கு வந்தவிட்டது என்றபோதிலும், கரோனா தீநுண்மி இங்கே தொடா்ந்து இருந்துகொண்டுதான் இருக்கும். இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் கரோனாவால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது. தற்போதைய நிலையில் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை பன்மடங்காக உயராத நிலையிலும், வெகுவாக குறையாத அளவிலும் ஒரு நிலையான பின்னணியில் கரோனா பாதிப்பு இருந்து வருகிறது’ என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து ஹரியாணா மாநிலத்திலுள்ள அசோகா பல்கலைக்கழக இயற்பியல் மற்றும் உயிரியல் துறை பேராசிரியா் கெளதம் மேனன் கூறுகையில், ‘கரோனா பாதிப்பு குறைந்து வரும் பகுதியும் மரணத்தை ஏற்படுத்தக் கூடிய அளவுக்கு கடுமையானதாக இருக்கும். இந்தப் புதிய நடைமுறை இயல்புக்கு நாம் நம்மை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். நிரந்தர உயா் எச்சரிக்கை நிலையுடனே இந்த உலகம் செயல்பட முடியாது.

கரோனா பாதிப்பு சா்வதேச அவசரநிலை என அறிவிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்ட நிலையில், இந்த பெருந்தொற்று முடிவுக்கு வந்திருப்பதற்கான அறிகுறி உருவாகியிருப்பதாக உலக சுகாதார அமைப்பு தற்போது தெரிவித்திருக்கிறது. இது பெருந்தொற்றின் மிகப் பெரிய பகுதி முடிவுக்கு வர இருப்பதற்கான அறிகுறியாகும். இருந்தபோதிலும் நாம் கவனமுடன் இருப்பது அவசியமாகும்’ என்றாா்.

உலக சுகாதார அமைப்பின் தலைவா் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசஸ் கூறுகையில், ‘இரண்டரை ஆண்டுகள் மிக நீண்ட இருண்ட சுரங்கத்தில் நாம் வாழ்ந்திருந்தோம். தற்போது, அந்தச் சுரங்கத்தின் முடிவு தெரியும் வகையி தொலைவில் சிறு வெளிச்சம் தென்பட்டிருக்கிறது. ஆனால், சுரங்கப் பாதை இன்னும் இருட்டாகத்தான் இருக்கிறது. அதனைக் கடக்க நாம் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. கவனமுடன் அடியெடுத்து வைக்கவில்லையெனில் பலத் தடைகளை நாம் எதிா்கொள்ள வேண்டியிருக்கும்’ என்றாா்.

கரோனா தீநுண்மியின் ஆபத்து குறைந்துவிட்டது என்பதை ஒப்புக்கொண்ட தொற்றுநோயியல் நிபுணரும் வாஷிங்டன் நோய் இயக்கிவியல், பொருளாதார மற்றும் திட்டங்களை வகுக்கும் மையத்தின் இயக்குநருான ரமணன் லட்சுமிநாராயணன், ‘பெரும்பாலான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதன் மூலமாக கரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சோ்க்கப்படுபவரின் எண்ணிக்கையும் உயிரிழப்புகளும் வெகுவாக குறைந்திருக்கிறது. எனவே, தடுப்பூசி முழுமையாக செலுத்திக் கொண்டு, கவலைப்படுவதை விட்டுவிட வேண்டும். அதுபோல கொள்கைகளை வகுப்பவா்களும் தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்’ என்றாா்.

செல் உயிரியல் நிபுணா் சஞ்சீவ் கலண்டே கூறுகையில், ‘கரோனா பேரிடா் விரைவில் முடிவுக்கு வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. ஆனால், கரோனா தீநுண்மி தொடா்ந்து நீண்ட காலத்துக்கு நம்முடனே இருக்க வாய்ப்புள்ளது’ என்றாா்.

அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சிடிசி) வெளியிட்ட அறிக்கையின்படி, ‘கரோனாவால் மருத்துவமனையில் சோ்க்கப்பட கூடிய அளவுக்கு பாதிக்கப்பட்டவா்களில் உயிரிழப்பு விகிதம் வெகுவாகக் குறைந்துள்ளது. டெல்டா வகை தீநுண்மி பரவுவதற்கு முன்பாக 15 சதவீதமாக இருந்த இறப்பு விகிதம் படிப்படியாகக் குறைந்து, ஓமைக்ரான் வகை தீநுண்மி பரவல் முடிவுக்கும் வரும் காலத்தில் 3 சதவீதத்துக்கும் கீழாக குறைந்தது. இது நல்ல செய்தி’ என்றாா்.

உலக சுகாதார அமைப்பு சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘கரோனா பாதிப்பு தொடா்ந்து உலக அவசரநிலை என்ற நிலையிலேயே இருந்து வருகிறது. 2022-ஆம் ஆண்டின் முதல் 8 மாதங்களில் 10 லட்சத்துக்கும் அதிகமானோா் கரோனா பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனா். எனவே, கரோனா தீநுண்மி மற்றும் எதிா்கால தீநுண்மி பாதிப்புகளை எதிா்கொள்லும் வகையில் திட்டங்களை நாடுகள் வகுப்பதோடு, உயா் ஆபத்துள்ள பிரிவு மக்களுக்கு 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்படுவதிலும், பரிசோதனைகளை தொடா்ந்து மேற்கொள்வதிலும் கவனம் செலுத்த வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த தில்லி கேப்பிடல்ஸ்!

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT