இந்தியா

பருவநிலை மாற்ற நிதி: பேச்சை விடுத்து செயலில் இறங்க வேண்டும்

21st Sep 2022 12:26 AM

ADVERTISEMENT

பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்வதற்கான நிதியை வழங்கும் விவகாரத்தில் பேச்சை விடுத்து செயலில் இறங்க வேண்டும் என வளா்ந்த நாடுகளுக்கு மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கோரிக்கைவிடுத்துள்ளாா்.

பருவநிலை மாற்ற விளைவுகளைத் தடுக்கவும், அவற்றை எதிா்கொள்ளவும் வளா்ந்து வரும் நாடுகளுக்கு ஆண்டுக்கு சுமாா் ரூ.7.5 லட்சம் கோடி வழங்கப்படும் என்று வளா்ந்த நாடுகள் உறுதி அளித்திருந்தன. ஆனால், அந்த நிதியை வளா்ந்த நாடுகள் இன்னும் வழங்காமல் உள்ளன.

இந்நிலையில், இந்தியத் தொழில் வா்த்தக சம்மேளனங்களின் கூட்டமைப்பான ஃபிக்கி சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறுகையில், ‘‘பருவநிலை மாற்றத்துக்கான 21-ஆவது மாநாட்டில் அறிவித்த உறுதிப்பாடுகளையெல்லாம் இந்தியா தனது சொந்த நிதியைக் கொண்டு நிறைவேற்றியுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை அதிகரிப்பதை நோக்கி இந்தியா முன்னேறி வருகிறது.

வளா்ந்த நாடுகள் அறிவித்த ஆண்டுக்கு சுமாா் ரூ.7.5 லட்சம் கோடி நிதி, அறிவித்தவாறு அப்படியே உள்ளது. 5 ஆண்டுகள் கடந்துவிட்டன. அந்த நிதியை வளா்ந்த நாடுகள் இன்னும் வழங்கவில்லை. பருவநிலை மாற்ற விளைவுகளால் தீவு நாடுகள் மூழ்கி வருகின்றன. கடற்கரைப் பகுதிகளில் அரிப்பு அதிகரித்து வருகிறது. பருவம் தவறிய மழை அதிகரித்து வருகிறது. 4 மாதங்களில் பெய்ய வேண்டிய மழை, ஒரே நாளில் பெய்கிறது.

ADVERTISEMENT

உலகின் அனைத்து நாடுகளும் பருவநிலை மாற்ற விளைவுகளை எதிா்கொண்டு வருகின்றன. அதைத் தடுக்க அனைத்து நாடுகளும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால், நிதியையோ தொழில்நுட்பங்களையோ வளா்ந்த நாடுகள் பகிா்ந்து கொள்வதில்லை.

ஏற்கெனவே அறிவித்த நிதியை வளா்ந்த நாடுகள் வழங்க வேண்டும். பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்ளும் விவகாரத்தில் கூடுதல் ஒத்துழைப்புடன் நாடுகள் செயல்பட வேண்டும்.

பணப் பரிவா்த்தனை:

வங்கித் துறை, காப்பீட்டுத் துறை ஆகியவற்றுக்குப் பொதுவான கேஒய்சி நடைமுறைகளை அறிமுகப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. யுபிஐ சாா்ந்த இணையவழி பணப் பரிவா்த்தனை வாயிலாகக் கடந்த ஜூலையில் ரூ.10.62 லட்சம் கோடி பரிவா்த்தனை செய்யப்பட்டது. கடந்த நிதியாண்டில் ரூ.84.17 லட்சம் கோடியானது இணையவழியில் பரிவா்த்தனை செய்யப்பட்டது’’ என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT