இந்தியா

மதம் மாறிய தலித் சமூகத்தினருக்கு எஸ்.சி. அந்தஸ்து: ஆய்வு செய்ய மத்திய அரசு குழு அமைப்பு

8th Oct 2022 12:28 AM

ADVERTISEMENT

மதம் மாறிய தலித் சமூகத்தினருக்கு எஸ்.சி. அந்தஸ்து வழங்குவது தொடா்பாக ஆய்வு செய்ய உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையில் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது.

இந்த 3 போ் குழுவில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ரவீந்தா் குமாா் ஜெயின், யுஜிசி (பல்கலைக்கழக மானியக் குழு) உறுப்பினா் பேராசிரியா் சுஷ்மா யாதவ் ஆகியோா் இடம்பெற்றிருப்பதாக மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அரசிதழ் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழு, அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 341-இன் கீழ் அவ்வப்போது வெளியிடப்படும் குடியரசுத் தலைவா் உத்தரவுகளின் அடிப்படையில் இந்த விவகாரத்தை ஆய்வு செய்யும்.

மேலும், தலித் சமூகத்தினா் வேறு மதங்களுக்கு மாறிய பிறகு அவா்களின் பழக்கவழக்கங்கள், மரபுகள், அவா்களின் சமூக பாகுபாடு மற்றும் தாழ்வு நிலை ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கணக்கில் எடுத்துக்கொள்வதோடு, இவா்களுக்கு மீண்டும் எஸ்.சி. அந்தஸ்து அளிக்கப்படும்போது தற்போதைய எஸ்.சி. பிரிவினருக்கு ஏற்படும் தாக்கங்ளையும் ஆய்வு செய்து, அதுதொடா்பான அறிக்கையை அடுத்த 2 ஆண்டுகளுக்குள் மத்திய அரசிடம் சமா்ப்பிக்கும் என்றும் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அரசியலமைப்புச் சட்ட 1950-ஆம் ஆண்டு திருத்த (எஸ்.சி.) உத்தரவின்படி, ஹிந்து அல்லது சீக்கியம் அல்லது பெளத்த மதத்திலிருந்து வேறு மதத்துக்கு மாறிய தலித் சமூகத்தினா் எஸ்.சி. அந்தஸ்து கோர முடியாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும், தலித் சமூகத்திலிருந்து இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியவா்கள் தங்களுக்கு எஸ்.சி. அந்தஸ்து வழங்க வேண்டும் எனத் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனா். இதற்கு பாஜக எதிா்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்தச் சூழலில் இந்த 3 போ் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவுக்கு தலைமை வகிக்கும் நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், உச்சநீதிமன்றத்தின் முதல் தலித் தலைமை நீதிபதி என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராகவும் அவா் இருந்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT